தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் : முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

17 June 2021, 7:50 pm
stalin - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் மதுபானக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக முக ஸ்டாலின் முதல்முறையாக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றது முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே, தமிழகத்தில் முதலமைச்சராக முதல்முறையாக பொறுப்பேற்றதை தொடர்ந்து, பிரதமர் மோடியை இன்று ஸ்டாலின் சந்தித்து பேச திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அவர் டெல்லி சென்றுள்ளார். அவரை திமுக எம்பிக்கள் வரவேற்றனர்.

பின்னர், தமிழ்நாடு இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். சுமார் 25 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் நதிநீர் இணைப்பு, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது மற்றும 7 பேர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த கோரிக்கைகளை பிரதமரிடம் அவர் முன் வைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எம்பி டிஆர் பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை பொறுத்து அடுத்தகட்ட முடிவு செய்வோம். ஒரு சில பிரச்சனைகளில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து தீர்க்க வேண்டும். தற்போதைய டெல்லி பயணம் நம்பிக்கை அளிக்கிறது. பிரதமருடனான இந்த சந்திப்பு மனநிறைவை தருகிறது. தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மதுபானக் கடைகள் படிப்படியாக மூடப்படும், என்று தெரிவித்தார்.

Views: - 193

0

0