10 நாட்கள் கெடு விதித்தோம்.. அறிவிப்பு வந்து விட்டது : வார இறுதிநாட்களில் கோவில்கள் திறப்பதற்கு அண்ணாமலை வரவேற்பு..!!

Author: kavin kumar
14 October 2021, 11:00 pm
Quick Share

சென்னை: வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்ததற்கு பாஜக வரவேற்பு அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்தும், அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களும் திறக்க வலியுறுத்தியும் தமிழக பாஜக தரப்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருக்கோயில்களில் காலையில் வழிபட்டு வியாபாரத்தைத் தொடங்கும் வணிகப் பெருமக்களுக்கும், தினமும் வழிபடும் வழக்கமுடைய மூத்த குடிமக்களுக்கும் தினப்படி வாழ்க்கையில் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்த திருக்கோயில்களை எல்லா நாட்களிலும் திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்குக் கட்சியின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த அக்.7ம் தேதி பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் மக்களோடு இணைந்து வாரத்தின் எல்லா நாட்களிலும் கோயில்களை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக பெருவாரியான போராட்டங்களை நடத்தினர். சென்னை மண்ணடியில் தம்பு செட்டி தெருவில் அமைந்துள்ள காளிகாம்பாள் திருக்கோயிலில் நானும் போராட்டம் நடத்திப் பேசுகையில் இன்னும் 10 நாட்களில் கோயில்களை எல்லா நாட்களிலும் கண்டிப்பாகத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.

திருவிழா நாட்களிலெல்லாம் திருக்கோயில்களை மூடி இருக்காமல், மக்களுக்கான எங்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து, கோயில்களை திறக்கும் முடிவெடுத்த தமிழக அரசைப் பாராட்டி வரவேற்கிறோம். மக்களின் உண்மையான எண்ணங்களைப் பிரதிபலிக்கும் எங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டு இந்த நவராத்திரி எல்லா நாட்களிலும் திருக்கோயில்களை திறக்க அனுமதி அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு பாஜக சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Views: - 384

0

0