நிதியமைச்சருக்கு எதிராக போர்க்கொடி! அரசு ஊழியர்கள் திடீர் ஆவேசம்!!
Author: Udayachandran RadhaKrishnan25 August 2021, 7:33 pm
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும், அரசு ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோவிற்கும் இடையேயான மோதல் தற்போது மேலும் தீவிரமடைந்து உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பிரச்சாரக் கூட்டங்களில் திமுக தலைவர் ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும். இதற்கு ஆண்டொன்றுக்கு 5 ஆயிரம் கோடி வரை ரூபாய் கூடுதலாக தேவைப்படும். அந்தத் தொகையை புதிய தொழில் முதலீடுகள் மூலம் பெற்று அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்.மேலும் காலியாக உள்ள 3.5 லட்சம் அரசு பணியிடங்களையும் நிரப்புவோம்” என்று வாக்குறுதிஅளித்திருந்தார்.\
திமுக அரசுக்கும், அரசு ஊழியர்கள்- அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் இடையேயான உறவு பற்றிக் கூறவேண்டிய அவசியம் இல்லை.
ஏனென்றால் திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் அவர்களுக்கு சம்பளம் உயர்வு தாராளமாக கிடைக்கும். அது அவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவும் இருக்கும். இதனால் இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றதும், திமுகவினரை விட அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள்தான் அதிகம் துள்ளிக்குதித்து மகிழ்ச்சி அடைந்தனர் என்பது வெளிப்படையான உண்மை.
இதனால் மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் அறிவித்த 11 சதவீத அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுவார் என்று அரசு ஊழியர்கள் பெரிதும் நம்பி இருந்தனர். ஆனால் அதை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைப்பதாக அவர் அதிரடியாக அறிவித்தார்.
அதுமட்டுமன்றி நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய நிதியமைச்சர், ” நிதி நெருக்கடி நிலை உள்ள இந்த நேரத்தில் சில பிரச்சினைகளை நாம் ஒத்திவைக்க வேண்டியுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம், புதிய ஓய்வூதிய திட்டம் 15 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. இதுபற்றி எந்த முடிவும் எடுக்காமலேயே 3, 4 அரசுகள் ஆட்சிக்கு வந்து போய்விட்டன. தற்போது தமிழகத்தின் நிதிச் சூழல் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறது. அதனால் எந்த முடிவும்
எடுக்க முடியவில்லை”என்று கூறியிருந்தார்.
எனவே தமிழகத்தின் நிதிநிலை சீரடையும் வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வருவது சாத்தியமில்லை என்பது பூடகமாக தெரிவிக்கப்பட்ட விஷயமாகும். அல்லது நிரந்தரமாகவே இத்திட்டம் கிடப்பில் போடப்படலாம்.
ஏனென்றால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்குக்கொண்டு வந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 30 முதல் 35 ஆயிரம் கோடி ரூபாய் வரை தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படலாம்.
அதனால் தற்போதைய நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு கண்டுகொள்ளாமல் ஒதுக்கி வைத்திருப்பது 13 லட்சம் அரசு ஊழியர்களுக்கும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.
ஏனென்றால் ஆட்சி அமைந்து 3 மாதங்கள் ஆகி விட்டதால் எந்த நேரத்திலும் தங்களுக்கு சாதகமான அறிவிப்பு வரும் என்று ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் நம்பியிருந்தனர்.
இந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்து இருப்பதால் அவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்த நிலையில்தான் மிக அண்மையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில், அரசு ஊழியர்கள் பற்றி தெரிவித்த கருத்தால் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மேலும் கொந்தளித்துப் போயுள்ளனர்.
அப்படி நிதியமைச்சர் அரசு ஊழியர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பற்றி என்ன கூறினார்? என்பது தொடர்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஒரு நீண்ட நெடியதொரு அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். அதில் அமைச்சர் மீதான தங்களின் கோபத்தையும் கொட்டியுள்ளனர்.
மேலும் கருணாநிதி தலைமையிலான ஆட்சி தங்களுக்கு சம்பள உயர்வில் காட்டிய தாராளத்தையும், ஜெயலலிதா அரசு தங்கள் அமைப்பினர் மீது எடுத்த கடும் நடவடிக்கை குறித்தும்
குறிப்பிட்டு உள்ளனர்.
இதுகுறித்து ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் வெளியிட்டுள்ள காரசாரம் மிகுந்த அந்த அறிக்கையில், ”மத்திய அரசு அறிவித்த 11% அகவிலைப் படியை நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் அரசின் நிவாரணப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி, தமிழக மக்களை கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து காக்கும் பணியில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இறந்த நிலையிலும் களப்பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு 1-4-2022 முதல் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெருத்த ஏமாற்றத்தையும், பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
நிதியமைச்சர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் மிகவும் துச்சமென மதித்ததோடு மட்டுமல்லாமல், பொதுமக்களிடம் அந்நியப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். மேலும், நிதிநிலை அறிக்கையில், ஒரு ரூபாயில் 19 பைசா ஊதியத்திற்காகவும், 8 பைசா ஓய்வூதியத்திற்காவும் செலவிடப்படுகிறது என்ற புள்ளிவிவரத்தை அளித்துவிட்டு, டிவி பேட்டியில் ஒரு ரூபாயில் 65 பைசா ஊதியம்- ஓய்வூதியத்திற்காகச் செலவிடப்படுகிறது என்று முன்னுக்குப் பின் முரணாகத் தெரிவித்து பொதுமக்களிடத்தில் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களின்பால் பகைமை உணர்வை வளர்க்கும் தவறான புள்ளி விவரத்தைப் பதிவிட்டு இருக்கிறார்.
நிதியமைச்சர் தன்னுடைய பேட்டியில், கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கிடையே தங்களது பணியினை மேற்கொண்ட அரசு ஊழியர்களை “ஒருநாள் கூட சம்பளத்தை ஓய்வூதியத்தினை இழக்காமல்” என்றும் வசைபாடினார். கொரோனா நோய்த் தொற்றினை எதிர்கொள்வதற்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான 150 கோடி ரூபாயை 2 முறை வழங்கியதை மறந்துவிட்டு, ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் மீது அமைச்சருக்கு இருக்கிற வன்மத்தை வெளிக்காட்டியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஜாக்டோ-ஜியோ கடந்த காலங்களில் நடத்திய அனைத்து போராட்ட-இயக்க நடவடிக்கைகளுக்கு ஊடகங்கள் வாயிலாகவும், போராட்டக் களத்திற்கு நேரிலே வந்தும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்களிலும் ஆதரவினைத் தொடர்ச்சியாக நல்கியதை நினைவூட்ட விரும்புகிறோம்.
மேலும், ஜாக்டோ – ஜியோ போராட்டக் களத்திற்கு வந்து உறுதியளித்ததற்கு வலு சேர்க்கும் விதமாக, திமுக தேர்தல் அறிக்கையில் “திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்” என்ற வாக்குறுதி இடம்பெற்றது.
இந்த வாக்குறுதியானது ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்று, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றால், ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றால்தான் சாத்தியமாகும் என்பதை அன்றைக்கே உணர்ந்து, தீவிர களப்பணியாற்றினோம்.
நிதியமைச்சரின் போக்கானது, அரசுக்கும் ஆசிரியர்- அரசு ஊழியரிடையே, காலங்காலமாக இருந்த நல்லுறவினை பேணிப் பாதுகாத்துவரும் திமுக ஆட்சியில் பெரும் விரிசலை உருவாக்கும் என ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு கருதுகிறது. எனினும் தமிழக முதலமைச்சர் அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவார் என்பதில் எங்கள் கூட்டமைப்பிற்கு முழு நம்பிக்கை உள்ளது.
எனவே, தமிழக முதலமைச்சர் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், 11% அகவிலைப்படி மற்றும் சரண் விடுப்பு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாகவும் அரசுக்கும், ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களுக்கும் இடையே இருந்த நல்லுறவினை மீட்டெடுக்கும் வகையில், ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேச வேண்டும் என்று ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு கனிவுடன் கேட்டுக் கொள்கிறது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது.
இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறும்போது, “இந்த கொரோனா காலத்திலும்,
அரசின் நிதி நிலை மிகவும் நெருக்கடியான சூழலிலும் அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. 11 சதவீத அகவிலைப்படி உயர்வை ஒத்தி வைக்காவிட்டாலும் அரசுக்கு சிக்கல்தான். கொரோனா நிவாரண நிதிக்கு தாங்கள் ஒரு நாள் சம்பளமாக 150 கோடி ரூபாயை இருமுறை கொடுத்ததாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கூறுகின்றனர்.
அப்படியென்றால் அவர்களது வருடாந்திர சம்பளம் சுமார் 55 ஆயிரம் கோடி ரூபாயை எட்டுகிறது. இதுதவிர ஓய்வூதியமாக ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசால் ஒதுக்க நேரிடுகிறது. இந்த இரண்டையும் சேர்த்தால் 91 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி விடுகிறது. இதுதவிர ஈட்டு விடுப்பு மூலம் ஆண்டுதோறும் 2500 கோடி ரூபாய் அரசு ஊழியர்களுக்கு போகிறது.
இந்தக் கணக்கின்படி பார்த்தால் அரசின் வருவாயில் 47 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியத்திற்கு மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்பது புலப்படும்.
அரசு அலுவலகங்களுக்குச் சென்றால் எந்த ஒரு காரியத்திற்கும் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது சர்வசாதாரண நிகழ்வாக உள்ளது. லஞ்சம் பெறாத அரசு ஊழியர்களில் பெரும்பாலானோர் லஞ்சம் வாங்கும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு துணையாக இருக்கிறார்கள். மொத்தத்தில் பார்த்தால் 85 சதவீத அரசு ஊழியர்கள், அதிகாரிகள் லஞ்சம் வாங்காமல் வேலை பார்ப்பது கிடையாது என்ற எண்ணம் பொதுமக்களிடம் பரவலாக காணப்படுகிறது.
இதைவிட வேதனையான விஷயம், கணினி மயமாக்கப்பட்ட அரசு அலுவலகங்களில் கூட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் மக்கள் மாதக்கணக்கில் அலைக்கழிக்கப்படுவதுதான்.
இதுபோன்ற நிலையில் அவர்கள் அகவிலைப்படி உயர்வை எதிர்பார்ப்பதும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோருவதும் எந்த விதத்திலும் நியாயம் அல்ல.
சிக்கன நடவடிக்கை எடுக்கும் விதமாக இவர்களின் சம்பளத்தில்வெட்டு செய்து அதை 25 சதவீதத்திற்குள் வைத்திருந்தாலே, அரசுக்கு ஆண்டுதோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை மிஞ்சும். இவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், நிச்சயம் அத்தியாயவசிய பொருட்களின் விலை இன்னும் அதிகரிக்கும். கொரோனா காலத்தில் தமிழகத்தில் 50 லட்சம் பேர் வரை வேலையை பறிகொடுத்து தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்துள்ளனர். அவர்களையும் இது கடுமையாக பாதிக்கும்.
கொரோனா தொற்று அடியோடு ஒழிக்கப்பட்டு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 15 சதவீதத்தை எட்டிய பின்பே இவர்களது கோரிக்கையை அரசு பரிசீலிக்கலாம்.
அதுவரை ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளுக்கு எந்த விதத்திலும் அரசு செவி சாய்க்கக் கூடாது என்பதே பொதுமக்களின் எண்ணம்” என்று அந்த பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டனர்.
0
0