வீட்டிற்கே சென்று நன்றி கூறிய விவசாயிகள்.. தமிழக அரசு பற்றி இபிஎஸ் சொன்ன அந்த வார்த்தை..!
Author: Udayachandran RadhaKrishnan13 செப்டம்பர் 2024, 3:59 மணி
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கடந்த 60 ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 1650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இந்த திட்டத்திற்காக அடிக்கல் நாட்டினார். கடந்த மாதம் இப்பணி முடிவடைந்த நிலையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கேசி. கருப்பண்ணன் ஏற்பாட்டில், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் பயன்பெறக்கூடிய விவசாயிகள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நேரில் சந்தித்து அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 60 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று 1650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து நானே இப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். கொரோனா தொற்று காரணமாக ஓராண்டு காலம் தாமதமானது. அதிமுக ஆட்சியிலேயே 85 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றது.
திமுக ஆட்சியில் மெல்ல மெல்ல நகர்ந்து ஆமை வேகத்தில் திட்டம் முடிவு பெற்றுள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க வரப்பிரசாதமான திட்டம். ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயனடைய கூடிய திட்டம். இத்திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்ததற்கு மணப்பூர்வமான மகிழ்ச்சி அடைகிறேன்.
சேலத்தில் 100 ஏரி நிரப்பும் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. தற்போது இத்திட்டம் திமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
நிலம் எடுப்பு பணிகள் தாமதமாக நடக்கிறது. இது தொடர்பாக நான் சட்டமன்றத்தில் பலமுறை பேசியிருக்கிறேன். நீர்வளத்துறை அமைச்சரும் நேரில் பார்வையிட்டார்.
தற்போது மெல்ல மெல்ல 30 ஏரிகளுக்கு தண்ணீர் வந்துள்ளது. நில எடுப்பு பணிகள் 10 சதவீதம் தான் பாக்கி உள்ளது. துரிதமாக செய்து இருந்தால் 100 ஏரிகளும் முழுமையாக நிரப்பி இருக்கலாம்.
அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்கு எங்கு கசிவு ஏற்படுகிறதோ அதை சரி செய்வார்கள் என்று தெரிவித்தார்.
0
0