திமுக கூட்டணியில் இருந்து Eliminate ஆகும் முக்கியக் கட்சி..! ஓங்கிய தலைவர்களின் “கை“ : திக்குமுக்காடும் திமுக தலைவர்!!

29 November 2020, 8:01 am
DMK Alliance - Updatenews360
Quick Share

சென்னை: திமுக கூட்டணியில் குறைவான இடங்களில் போட்டியிடுவதைவிட மூன்றாவது அணி அமைக்கலாம் என்று தமிழ்நாட்டில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் முடிவுக்கு வந்துள்ளதால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் தொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்ற ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் பிரச்சினையில் கார்த்தி சிதம்பரமும் ஸ்டாலினை சீண்டியுள்ளார்.

வரும் 2021 தேர்தலில் தொகுதிகளுக்காக திமுகவிடம் பேரம் பேச மாட்டோம் என்று சொன்ன தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தற்போது காங்கிரஸ் வலிமைக்கு ஏற்ப தொகுதிகளைக் கோருவோம் என்று சொல்லியிருப்பதால் தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் விட்டுக்கொடுக்காது என்பது தெளிவாகியுள்ளது.

கடந்த முறை காங்கிரசுக்குத் திமுக கொடுத்த 41 தொகுதிகளில் பாதி அளவை இப்போது தருவதைக் காங்கிரஸ் ஏற்காது என்று கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். வேண்டுமானால் பத்து சதவீத இடங்களைக் குறைத்துக்கொண்டு 35 தொகுதிகளைப் பெற வேண்டும் என்று மாநிலத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையே இலங்கைத் தமிழர் படுகொலை. காவிரி, முல்லைப்பெரியாறு, நீட் தேர்வு ஆகிய பல பிரச்சினைகளில் கருத்துவேறுபாடு இருக்கும் நிலையில் இப்போது தொகுதிப்பிரச்சினையும் வெடித்துள்ளது.

கொள்கைகளில் இரண்டு கட்சிகளுக்கும் எந்த ஒற்றுமை இல்லாததாலும் வெறும் தேர்தல் வெற்றிக்காக ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பவாதக் கூட்டணி என்பதாலும் இரு கட்சிகளுக்கும் இடையே உரசல் அதிகரித்துள்ளது. பல ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசைக் கழட்டிவிடும் பணியை பாஜகவின் ஆலோசனைப்படி செய்கிறார் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது.

திமுகவையும் காங்கிரசையும் பிரித்துவிடுவதால் பாஜக தலைவர்களின் நல்லெண்ணத்தைப் பெற்று ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கலாம் என்று கார்த்தி திட்டம் தீட்டியுள்ளார். அதனால், தேவையில்லாமல் ஸ்டாலின் மீது விமர்சனம் வைக்கிறார் என்று திமுக தொண்டர்களும் கருதுகின்றனர்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் தயவால் வெற்றிபெற்ற கார்த்தி சிதம்பரம், மாணிக் தாகூர் திமுகவுக்கு எதிராகப் பேசி வருகிறார்கள். அவர்கள் ஏற்கனவே, எம்.பி,க்களாக இருப்பதால் காங்கிரசின் மற்ற தலைவர்கள் எம்.எல்.ஏ.க்களாக ஆவதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை என்று கூறும் திமுக நிர்வாகிகள் காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் போனால் திமுகவுக்கு நன்மைதான் என்றும் சொல்கிறார்கள்.

ஏற்கனவே, தமிழ்நாடு வந்திருந்த மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்று கூறியிருந்தார். திமுகவின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைக்க காங்கிரஸ் துணைநிற்கும் என்று பல்டி அடித்தார்.

இதை கடுமையாக எதிர்த்த கார்த்தி சிதம்பரம் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியினர் எம்.எல்.ஏ.க்களாக வெற்றிபிறகு திமுகவுக்கு தங்கள் ஆதரவு தேவையா இல்லையா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். தனித்த பெரும்பான்மையுடன் தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்று திமுக வியூகங்களை வகுத்துவரும்போது தேர்தல் முடிவைப் பொறுத்து காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு இருப்பதாக கார்த்தி கூறியிருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. ஆனாலும், கார்த்தி கட்சியின் தலைவரில்லை என்பதால் என்று திமுக தலைவர்கள் அமைதி காத்தனர்.

காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கி அதில் அவர்கள் வெற்றிபெற்றால் கூட்டணி ஆட்சியைக் கோருவார்கள் என்பதை காங்கிரஸ் கட்சியினரின் பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், காங்கிரசுக்குக் குறைவான இடங்களை ஒதுக்க திமுக முயற்சி செய்யும் என்று தெரிகிறது.

தேர்தல் நெருங்க நெருங்க இரு கட்சிகளின் தலைவர்களுக்கு இடையே மோதல் போக்கு அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. மாநிலக் காங்கிரஸ் கட்சியினரின் கருத்தை மீறி காங்கிரஸ் தலைமை கூட்டணியைக் கட்டாயப்படுத்தினால் தேர்தலில் இரு கட்சிகளும் ஓருவர் காலை மற்றவர் வாருவதன் மூலம் சொந்தக் கூட்டணியைத் தோற்கடிப்பார்கள் என்று கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணி முடிவுகளை எடுக்க மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் மத்திய தலைமை தமது முடிவுகளைத் திணிக்கக்கூடாது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி முன்னரே தெரிவித்துள்ளார்.

திமுகவுடன் சரணாகதி அடைவதுபோல் குண்டுராவ் பேசியிருப்பது தவறு என்றும் குறைந்தது 40 தொகுதிகளாவது திமுக தரவில்லையென்றால் மூன்றாவது அணி அமைக்கலாம் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கருதுகிறார்கள்.

மாநில காங்கிரஸ் தலைவர்களையும் நிர்வாகிகளையும் மீறி திமுக கொடுக்கும் குறைவான இடங்களை ஏற்றுக்கொண்டால் பல இடங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் போட்டி வேட்பாளர்களை நிறுத்தி காங்கிரசின் வலிமையைக் காட்டுவார்கள் என்றும் இதனால் திமுக கூட்டணியின் தேர்தல் வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. காங்கிரசுக்குக் குறைவான தொகுதிகள் ஒதுக்கினாலும் பிரச்சினை அதிக தொகுதிகளைத் தந்தாலும் சிக்கல் என்ற சூழலே இருப்பதால் ஸ்டாலின் கடும் குழப்பத்தில் இருக்கிறார்.றும் கருதப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனைபெற்ற ஏழு தமிழர்களின் விடுதலைப் பிரச்சினையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டபின் இரு கட்சிகளுக்கும் ஏற்பட்ட விரிசலை சரிசெய்ய இதுவரை செய்துள்ள முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இந்த நிலையில் அதை பிரச்சினையில் ஸ்டாலினைப் பெயர் குறிப்பிடாமல் கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளது இரு கட்சிகளின் உறவில் மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.

Views: - 0

0

0