அதிர வைக்கும் ஆவினில் அடுத்த முறைகேடு? பால் கவரிலும் மோசடி!!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2022, 7:06 pm
Aavin Scam - Updatenews360
Quick Share

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஆவின் நிர்வாகம் அடுத்தடுத்து கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அதுவும் கடந்த 10 நாட்களில் மட்டும் மூன்று முறைகேடு புகார்களில் அது சிக்கியுள்ளது. இதனால் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருவதையும் பார்க்க முடிகிறது.

ஆவின் பால் முறைகேடு

கடந்த வார இறுதியில் ஆவின் பால் பாக்கெட் எடை அளவு 70 மில்லி குறைத்து விநியோகிக்கப்படுவதாக ஒரு செய்தி முன்னணி நாளிதழ் ஒன்றில் ஆதாரத்துடன் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதாவது, 500 மில்லி கொண்ட ஒரு பால் பாக்கெட் எடை 520 கிராம் வரை இருக்க வேண்டும். ஆனால், 500 மில்லி கொண்ட பால் பாக்கெட் 430 கிராம் மட்டுமே உள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

அண்ணாமலை குற்றச்சாட்டு

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனடியாக கண்டனம் தெரிவித்தார். அத்துடன் தமிழகத்தில் தினமும் ஆவின் மூலம் விற்பனை செய்யப் படும் 35 லட்சம் லிட்டர் பாலின்‌ அளவைக்‌ குறைத்து விநியோகம் செய்யப்படுவதால் மிகப்பெரிய மோசடி நடக்கிறது. அதன் மூலம் தினமும் 2 கோடி ரூபாய் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது” என்று திமுக அரசு மீது குற்றம் சாட்டினார்.

நாளிதழில் வெளியான செய்தி பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதால், ஆவின் நிர்வாக அதிகாரிகள் எடை அளவு குறைந்துள்ளதாக குற்றம்சாட்டியவரை அடுத்த
12 மணி நேரத்தில் நேரடியாக சந்தித்து அவருக்கு சரியான எடை கொண்ட வேறொரு ஆவின் பால் பாக்கெட்டை வழங்கினர். அதுமட்டுமின்றி இயந்திரக் கோளாறு காரணமாக அந்த ஒருவருக்கு மட்டும்தான் ஆவின் பால் எடை 70 மில்லி குறைந்து போனதாக அறிக்கையும் வெளியிட்டனர்.

ஆவின் நிர்வாகத்தின் இந்த விளக்கமும் கேலிப் பொருளாகிப் போனது. இயந்திரக் கோளாறு காரணமாக ஒரே ஒரு ஆவின் பால் பாக்கெட்டில் மட்டும்தான் எடை அளவு குறையுமா?… என்று சமூக ஆர்வலர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

கேலியாக விமர்சித்த ஜெயக்குமார்

இதைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சர்க்காரியா கமிஷனால் குற்றவாளி என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் திமுகவினர். விஞ்ஞான ஊழல் செய்வது அவர்களுக்கு கைவந்த கலை.

மாநிலம் முழுவதும் ஒரு நாளைக்கு 37 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. அதில் தினந்தோறும் ஐந்தரை லட்சம் லிட்டரை பால் வளத்துறை அமைச்சர் நாசர் என்ற பூனைக்குட்டி குடித்துவிட்டது. ஒரு அரை லிட்டர் பாலில் சுமார் 70 மில்லி அளவுக்கு குறைகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார். அந்த பூனைக்குட்டி குடித்த பாலின் விலை ஒரு நாளைக்கு 2 கோடியே 40 லட்சம் ஆகும்.

ஆவின் பால் பாக்கெட் எடை குறைந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும். துறை ரீதியான விசாரணை என்பதில் எந்த வகையிலும் நியாயம் கிடைக்காது” என்று கேலியாக குறிப்பிட்டார்.

நீதி விசாரணை தேவை

மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும்,”ஆவின் பால் எடை குறைவு சர்ச்சையில் அரசின் நடவடிக்கை போதுமானதல்ல. இது எந்த விதத்திலும் நம்பும்படியாகவும் இல்லை. நீதி விசாரணை நடத்த உத்தரவிடுவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும்” என்று அதிருப்தி தெரிவித்தார்.

ஆனால் நீதி விசாரணை நடத்துவது பற்றி திமுக அரசு இதுவரை எதுவும் கூறவில்லை.இதற்கிடையே தமிழக அரசு ஆவின் பால் பொருட்களின் விலையை ஜிஎஸ்டி கவுன்சில் முடிவின்படி 5 சதவீதம் உயர்த்தி கடந்த மாதம் அறிவித்தது.

ஆவின் தயிர் மோசடி

அதன்படி ஏற்கனவே 100 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஒரு லிட்டர் ஆவின் தயிரின் விலை 105 ரூபாயாகத்தான் உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசோ 120 ரூபாயாக விலை நிர்ணயம் செய்து இருக்கிறது என்று பாஜகவின் மூத்த தலைவர் ஹெச் ராஜா குற்றம் சாட்டியுள்ளார். இதை வைத்து, “ஆஹா.. ஆவின் தயிரில் 15 ரூபாய் யாருக்கு போகிறது. ஸ்டாலினுக்கா? மருமகன் சபாரீசனுக்கா அல்லது சின்னவர் உதயநிதிக்கா ?” என்று கிண்டலாக அவர் கணக்கும் கேட்டுள்ளார்.

இந்த நிலையில்தான் தற்போது புதிதாக ஆவின் நிர்வாகம் குறித்து இன்னொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஆவின் பால் பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரம் அச்சிடப்பட்டதில் 1 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் குற்றம் சாட்டி இருக்கிறது.

செஸ் ஒலிம்பியாட் விளம்பரம் மோசடி

இதுபற்றி இச்சங்கத்தின் தலைவர் பொன்னுச்சாமி கூறும்போது “ஆவின் பால் பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரம் அச்சிடப்பட்ட பாலிதீன் கவர் கொள்முதல் செய்ய, முறையான டெண்டர் விடப்படவில்லை.

ஏற்கனவே ஆவின் சார்பில் பாலிதீன் கவர் கொள்முதல் செய்யப்படும் நிறுவனத்தை புறக்கணித்து விட்டு, 1 கிலோவிற்கு 30 ரூபாய் அதிகம் விலை கொடுத்து, வேறு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வகையில் ஆவினில் 1 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே, ஆவின் பால் பாக்கெட்டில் அளவை குறைத்து வினியோகம் செய்யப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள், சர்வதேச செஸ் போட்டியை வைத்து நடந்துள்ள முறைகேடும் கூடுதல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

டெண்டர் விடாமல் ‘ஆர்டர்’ கொடுக்க ஆவின் அதிகாரிகளை துாண்டியது யார்?, எத்தனை ஆயிரம் கிலோ பாலிதீன் கவர் கொள்முதல் செய்யப்பட்டது? ஆவினுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்பது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஆவினுக்கு ஏற்பட்ட இழப்பீட்டையும் அவர்களிடம் வசூலிக்க வேண்டும்” என்று
குறிப்பிட்டுள்ளார்.

பால் கவரில் பணம் சுருட்டல்

ஆவின் பால் கவரில் கூட பணத்தை அதிக அளவில் சுருட்ட முடியும் என்பது மிகுந்த அதிர்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது என்று சமூகநல ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர்.

“அடுத்தடுத்து ஆவின் நிர்வாகம் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் மிகவும் சாதாரணமானவை என்று கருதிவிட முடியாது. தமிழக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூறுவதுபோல ஆவின் பால் எடைகுறைப்பு விநியோகம் மூலம் தினமும் இரண்டரை கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை சுருட்ட முடியாது. ஆனாலும் கூட கணிசமான அளவிற்கு மறைமுகமாக பணத்தை எடுத்துவிட முடியும் என்று தமிழக பால் முகவர்கள் சங்கத்தினர் சொல்கின்றனர்.

ஏனென்றால் 500 மில்லி ஆவின் பாக்கெட் பாலில் 10 முதல் 25 மில்லி எடை அளவை குறைத்தாலே கூட 50 காசு முதல் ஒரு ரூபாய் வரை சுரண்டி விடமுடியும்.
இந்த எடை குறைவை சாதாரண மக்களால் கண்டுபிடிக்கவும் முடியாது.

அதுவும் தினசரி லட்சக்கணக்கான லிட்டர் பால் விற்பனை என்றால் அந்த சுருட்டல் தொகை எவ்வளவு இருக்கும் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மௌனம் கலைப்பாரா முதலமைச்சர்?

தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 15 நாட்கள் விளம்பரம் செய்வதற்கு ஆவின் நிர்வாகம் வழக்கமான டெண்டர் விதிமுறையை மீறி உள்ளதாகவும் அதன் மூலம் குறிப்பிட்ட தனியார் நிறுவனம் ஒரு கோடி ரூபாய் ஆதாயம் அடைந்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுவதை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.

ஆவின் நிர்வாகம் மீது தொடர்ச்சியாக முறைகேடு புகார் கூறப்படுவதால் தமிழக அரசு இதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இதைத் தெரிந்தே செய்கிறது என்ற எண்ணத்தையே பொதுமக்களின் மனதில் ஏற்படுத்தும். தவிர சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தில் நடத்தியதன் நோக்கமும் அடிபட்டுப் போய்விடும்” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

Views: - 116

0

0