திமுக அரசு கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒரு அரசியல் நாடகம்.. நீட் ஒழியும் வரை அதிமுக ஓயாது : இபிஎஸ் சூளுரை!
Author: Udayachandran RadhaKrishnan28 June 2024, 2:28 pm
சமீபத்தில நடந்த நீட் தேர்வில் பயங்கர குளறுபடி ஏற்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை எழுப்பினர்.
நீட் தேர்வு அமலானது முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது திமுக. தற்போது ஆளுங்கட்சியாக உள்ளதால் சட்டமன்றத்தில் இன்று நீட் தேர்வு குளறுபடி குறித்து தனித் தீர்மானத்தை நிறைவேற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இது தொடர்பாக விமர்சித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், பிறப்பித்துள்ள உத்தரவுகள், நீட் தேர்வு குறித்த முறைகேடுகள் தொடர் அம்பலம், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் நீட் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருப்பது, நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கம், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு என தொடர்ச்சியான நிகழ்வுகள் சொல்கின்ற செய்தி ஒன்று தான்- நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று!
38 எம்பிக்களை வைத்துக்கொண்டு நீட் ஒழிப்புக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக, தற்போது 40 எம்பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தை கொண்டுவராமல், மீண்டும் 3வது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்?
இத்தீர்மானம் இந்த விடியா திமுக அரசின் மற்றுமொரு அரசியல் நாடகம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை மடைமாற்ற நினைக்கும் இதுபோன்ற பயனற்ற அரசியல் வித்தைகளை மக்கள் இனியும் நம்புவதாக இல்லை.
நீட் தேர்வை பாராளுமன்றம் மூலம் மறுபரிசீலனை செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவை வருகின்ற பாராளுமன்றக் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய பாஜக கூட்டணி அரசை வலியுறுத்துகிறேன்.
திமுக-காங்கிரஸ் கூட்டணியால் கடந்த 2010ல் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் என அனைத்துத் தளங்களிலும் தொடர்ச்சியான முன்னெடுப்புகளை மேற்கொண்ட ஒரே இயக்கம் என்ற அடிப்படையில், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வு ஒழியும் வரை அதிமுகவின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
0
0