தமிழகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் திறப்பு….கடலூரில் இலவச டிக்கெட்…!!

10 November 2020, 1:42 pm
theatre - updatenews360
Quick Share

தமிழகம் முழுவதும் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் இன்று திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து திரையரங்குகள் மூடப்பட்டன. இதனையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பெரும்பாலான திரையரங்குகளில் திரைப்படங்கள் எதுவும் திரையிடப்பட வில்லை.

விபிஎஃப் கட்டண விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், விரைவில் புதிய படங்கள் திரையிடப்படலாம் என எதிர்பார்ப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மால்களில் உள்ள திரையரங்கங்கள் செயல்பட துவங்கியது. சமூக இடைவெளி மற்றும் கிருமிநாசினி போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் மால்களில் உள்ள திரையரங்குகள் செயல்பட துவங்கியுள்ளன.

கோவை புரூக் ஃபீல்டு மாலில் உள்ள திரையரங்கில் இன்று ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் திரையிடபட்டது. முதல் காட்சியில் கொரோனா முன் கள பணியாளர்கள் இலவசமாக இன்று அனுமதிக்கப்பட்டனர். தனியார் மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் இந்த திரைப்படத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பழைய திரைப்படங்களே திரையிடப்பட்டன. இதில் கடலூரில் உள்ள திரையரங்கு ஒன்றில் இன்று முதல் தீபாவளி வரை இலவசமாக காட்சிகள் ஒளிபரப்பப்படும் பொதுமக்கள் இலவசமாக டிக்கெட் பெற்று திரைபடப் பார்ககலாம் என அறிவித்துள்ளனர். சென்னை சத்யம் திரையரங்கில் ‘தாராள பிரபு’ மற்றும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட்டன. கொரோனா காரணமாக உள்ளே வரும் அனைவருக்கும் உடலின் வெப்ப நிலை பரிசோதனைக்கு பின்னர் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Views: - 28

0

0