திரையரங்குகளை திறக்க அனுமதியளித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இயக்குநர் பாரதி ராஜா நன்றி..!!
Author: Babu Lakshmanan23 August 2021, 5:39 pm
திரையரங்க உரிமையாளர்களின் நஷ்டத்தை புரிந்து கொண்டு, திரையரங்கம் திறக்க அனுமதி அளித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் சில கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, சுழற்சி முறையில் வரும் செப்.,1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று முதல் 50% பார்வையாளர்களுடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் மதுக்கூடங்கள் செயல்பட இன்று முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திரையரங்கம் திறக்க அனுமதி அளித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இயக்குனர் பாரதி ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வணக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளை திரையுலகின் கருப்பு நாட்களாக்கி விட்டது இந்த கொரோனா. படப்பிடிப்பு, புதிய திரைப்படங்கள் வெளியீடு என எல்லாம் பெருமளவில் முடங்கிவிட்டது. நிச்சயமற்ற எதிர்காலத்தில் நம்பிக்கை பூக்குமா என்ற கேள்விக் குறியோடு நகர்ந்த நாட்களில் இப்போது திரையரங்குகளை 23.8.2021 முதல் 50% இருக்கைகளோடு திறந்துகொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் விதைக்கிறது.
ஆக்கிரமித்திருக்கும் நோய் விலகி, பல புதிய திரைப்படங்கள் வெளியாகி, திரையரங்குகள் முழுமையான திருவிழாக் கோலம் காண காத்திருக்கிறோம்.
திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளகள் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்த ஒரு அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு உங்கள் பாசத்திற்குரிய, பாரதி ராஜா என தெரிவித்துள்ளார்.
0
0