மீண்டும் ரிலீசாகிறது அசுரன், பிகில்..!!! 10ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க முடிவு

7 November 2020, 11:34 am
movie - updatenews360
Quick Share

சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 10ம் தேதி முதல் கொரோனா வழிகாட்டு விதிகளை கடைபிடித்து திரையரங்குகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நவ.,30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 50% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அண்மையில் அனுமதியளித்தது. இதனால், தீபாவளிப் பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

ஆனால், VPF கட்டணத்தை செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் திரைப்படங்களை வெளியிடப் போவதில்லை என நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், திரைப்படங்களின் 50 % வசூலை அளிக்க முன்வந்தால், VPF கட்டணத்தை பெறுவதை கைவிடுவதாக அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உடன்பாடு எட்டுவதற்காக இருதரப்பினரும் அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால், தீபாவளிக்கு திரையரங்குகளை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில், புதிய படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் முன்வராவிட்டாலும், கொரோனா வழிகாட்டு முறைகளை கடைபிடித்து, வரும் 10ம் தேதி முதல் பழைய வெற்றிப் படங்களை மீண்டும் ரிலீஸ் செய்து, திரையரங்குகளை திறக்க திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதோடு, பிற மொழி படங்களையும் திரையிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, அண்மையில் வெற்றிப்படங்களான அசுரன், பிகில், கைதி உள்ளிட்ட படங்கள் இந்த தீபாவளிப் பண்டிகைக்கு திரையரங்குகளை அலங்கரிக்கும் என்று தெரிகிறது.

Views: - 50

0

0