திருவிழாவுக்காக ராட்டினம் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி : வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் நிகழ்ந்த சோகம்..

Author: Babu Lakshmanan
11 May 2022, 6:25 pm
Quick Share

தேனி : தேனி மாவட்டம் தேனி – வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக ராட்டிணம் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி அருகே உள்ள உப்பார்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. இவருடைய மகன் பெயர் முத்துக்குமார் (35). இவர் எலக்டிரிசன் ஆக பணியாற்றி வருவதாக தெரிகிறது. இந்நிலையில், தேனி அருகே உள்ள வீரபாண்டியில் தற்போது நடைபெற்று வரும் கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

மேலும் பக்தர்கள் அதிக அளவில் வருவதால் பக்தர்களின் பொழுதுபோக்குக்காக ராட்சச ராட்டினங்கள் உள்பட பல்வேறு விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. மேலும், முத்துக்குமாரும் அந்த பொருட்காட்சி பகுதிகளில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்துள்ளதாக தெரிகிறது.

வழக்கம்போல் பணியாற்றி வரும் பொழுது தற்காலிகமாக அமைக்கப்பட்ட மின் கம்பத்தில் மின்சார பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீரபாண்டி அரசு மருத்துமனைக்கு முத்துக்குமாரின் உடலை அனுப்பி வைத்தனர்.

மேலும், பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் முத்துக்குமாரின் உடலை அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த முத்துக்குமாருக்கு ஏழு வயதில் விஷால் பாண்டி என்ற மகனும், 10 வயது விசாலினி என்ற மகளும், ஏழு மாத பெண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 704

0

0