பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்ல.. பிறகு எப்படி பெண்களுக்கு கொடுப்பாங்க? எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் தாக்கு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 January 2023, 1:59 pm
Edappadi - Updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று கவர்னர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி நேரம் முடிந்த பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சொல்கிறார். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் பட்டியல் வைத்துள்ளேன். பொத்தாம் பொதுவாக கூறாமல் ஆதாரத்துடன் கூற வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சட்டம், ஒழுங்கு குறித்த முதலமைச்சரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

தினமும் செய்திதாள்களில் வந்த செய்திகளை தான் அரசுக்கு பேரவையில் சுட்டிக்காட்டினோம். பெண் காவலருக்கே பாதுகாப்பு அளிக்காத திமுக அரசு, தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு அளிக்க முடியும்?

பெண் காவலர் மீதான பாலியல் தொல்லை விவகாரத்தில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பெண் காவலர் புகார் கூறியும், விசாரணை நடத்திய பிறகுதான் நடவடிக்கை என்று டிஜிபி கூறியிருக்கிறார்.

பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரத்தில் 2 நாட்களுக்கு பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 293

1

0