ஜல்லிக்கட்டை தொடர்ந்து அடுத்த டார்கெட்டே அதுதான்… திருமா., – இபிஎஸ் கைகோர்த்தால் மக்களுக்கு நல்லது ; ஆர்பி உதயகுமார்…!!

Author: Babu Lakshmanan
19 May 2023, 4:49 pm
Quick Share

திருமாவளவன், எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்தால் மக்களுக்கு நல்லது நடக்கும் என நம்புவதாக ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் கழகம் சார்பில் போடிநாயக்கன்பட்டியில் வாடிப்பட்டி பேரூர் கழகச் செயலாளர் அசோக்குமார் ஏற்பாட்டில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு கழகக் கொடியினை ஏற்றி, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்பு நிர்வாகிகள் மத்தியில் பேசிய ஆர்பி உதயகுமார், புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பாகவும், பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும், கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறையை பலப்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்பி உதயகுமார் கூறியதாவது;- பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்தது அம்மாவின் அரசு எனவும், முதன் முதலாக உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் வாடிவாசல் சென்று ஜல்லிக்கட்டு தொடங்கி வைத்த முதலமைச்சர் பச்சை தமிழர் எடப்பாடி பழனிசாமி தான் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் முன்னிட்டு மதுரை வாடிப்பட்டி பேரூர் கழகத்தின் சார்பாக இனிப்புகள் வழங்கி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாகவும், இந்த மக்கள் விரோத அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என வாடிப்பட்டி பேரூர் கழகத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாக தெரிவித்தார்.

புரட்சித்தலைவி அம்மா கொண்டாட நினைத்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தமிழ்நாட்டில் உள்ள 32 வருவாய் மாவட்டங்களிலும் கொண்டாடி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் உதவிகள் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் என பெருமையுடன் தெரிவித்தார். மேலும், கழகத்தின் பொன்விழா மாநாடு நடத்தும் பாக்கியம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளதாகவும், உலகமே திரும்பி பார்க்கும் மதுரை மாநாடு இந்திய அரசியலில் முத்திரை பதிக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

மேலும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், 30,000 கோடி திமுக அரசு கொள்ளையடித்ததற்கு நியாயம் கேட்டும் வரும் திங்கட்கிழமை பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஆர்பி உதயகுமார், கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு நிவாரணம் அளித்து இருப்பது கள்ளசாராயத்தை ஊக்குவிப்பது போல் உள்ளதாகவும், உலகத்தில் எங்கேயும் இல்லாதது கள்ளச்சாராயம் விற்றதாக முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்ட நபருக்கு நிவாரணம் அறிவித்ததற்கு தான் கழகப் பொதுச் செயலாளர் இந்த அரசை கோமாளி அரசு என விமர்சித்ததாக தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்று கிடைத்த தீர்ப்பானது, அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட ஜல்லிக்கட்டு சட்ட திருத்தம் தெளிவாக உள்ள காரணத்தினாலும், ஜல்லிக்கட்டு என்பது நம் கலாச்சாரம் பண்பாடு என என தெரிவிக்கப்பட்ட காரணத்தினால் தான் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்ததாகவும், இந்த தீர்ப்பானது அம்மா அரசுக்கு கிடைத்த பெருமை என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஆர்.பி.உதயகுமார், ஜல்லிக்கட்டு மைதானம் அமைப்பதாக காரணம் காட்டி பாரம்பரிய வாடி வாசலை மூடினால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் உத்தரவின் பேரில் வாடிவாசலுக்கு காவல் அரணாக நின்று வாடிவாசல் மீட்கும் போராட்டம் நடைபெறும், என தெரிவித்தார்.

மதுவிலக்குக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து போராட தயார் எனக் கூறுவது தங்களை உற்சாகப்படுத்துவதாகவும் மக்களுக்கு நல்லது நடக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

செய்தியாளர் சந்திப்புக்கு பின் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமியின் 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தன் கரங்களால் அனைத்து மக்களுக்கும் உணவினை பரிமாறினார். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ் எஸ் சரவணன், கருப்பையா, புறநகர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகளான கொரியர் கணேசன், தமிழழகன் , தனராஜன், அரியூர் ராதாகிருஷ்ணன், மகாலிங்கம், லட்சுமி உள்ளிட்ட ஏராளமான தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Views: - 273

0

0