தனி ரூட்டெடுக்கும் திருமாவளவன்… திமுகவின் திட்டத்தை சுக்குநூறாக்கிய விசிக : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அப்செட்…?

Author: Babu Lakshmanan
1 February 2022, 7:33 pm
Stalin and thiruma- Updatenews360
Quick Share

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்.19ம் தேதி நடைபெற இருக்கிறது. 22ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், கூட்டணி மற்றும் இடப்பங்கீட்டை அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரளவுக்கு இறுதி செய்து விட்டன. இதையடுத்து, வேட்பாளர் பட்டியலும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது.

இந்தத் தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி அமைத்தும், அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர், அமமுக, மக்கள் நீதி மய்யம் என பலமுனை போட்டி நிலவுகிறது. அனைத்து கட்சியினரும் பல்வேறு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

Cm stalin -Updatenews360

திமுகவை பொறுத்தவரையில் விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், மமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முடித்து விட்டது. காங்கிரஸுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

திமுகவுடன் பேச்சுவார்த்தையை இறுதி செய்துள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொண்டர்களுக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் திருமாவளவன் கூறி இருப்பதாவது :- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் தனிச்சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். இதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். தனி சின்னத்தில் நின்று வெற்றி பெற்றால் தான் கட்சி வளர்ச்சிக்கு அது பயன்படும். மேலும், கட்சி தலைமைக்கு நீங்கள் நன்றி கடன் செலுத்தியதாக அமையும். விசிக என்பதால் தான் உங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுகின்றது. ஆனால், நீங்கள் வெற்றி வாய்ப்பை கருதி கூட்டணி கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது.

நமது 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தான் சட்டமன்றத்தில் சுதந்திரமாக பேச முடிகிறது. இவற்றை எல்லாம், நமது தோழர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும், என கட்சியின் வேட்பாளர்களுக்கு திருமாவளவன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

திமுகவை பொறுத்தவரையில் குறைந்த அளவிலான இடங்களே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும். இதனை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், வேறுவழியின்றி ஒப்புக் கொண்டாக வேண்டிய நிலையில்தான் கட்சிகள் கூட்டணியை அமைக்கும். அப்படி ஒதுக்கப்படும் இடங்களிலும் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நிர்பந்திக்கப்படும்.

மீறி, தனிச்சின்னம் என்பதில் விடாப்பிடியாக இருக்கும் கட்சிகளையும் யானை கதை, குதிரை கதை கூறி தோல்வி பயத்தை காட்டி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைப்பது திமுகவின் ராஜ தந்திரங்களில் ஒன்று. இதில், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் சிக்கித் தவித்து வருகின்றன. ஆனால், சட்டப்பேரவை தேர்தலிலும் சரி, நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, தங்களின் சின்னத்தில்தான் நிற்போம் என்றுக் கூறி, உதயசூரியன் சின்னம் இல்லாமல் வெற்றி பெற்றுக் காட்டியது விடுதலை சிறுத்தை கட்சிதான். இதனால், விசிகவை திமுக எப்போதும் மென்மையாகவே கையாண்டு வருகிறது.

Thirumavalavan -Updatenews360

தற்போது, கூட்டணி கட்சிகளுக்கு நிபந்தனைகளை திமுக விதிக்கவிருந்த நிலையில், அந்த முயற்சியை தவிடு பொடியாக்கும் வகையில் திருமாவளவன் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே தஞ்சை நகராட்சி தேர்தலில் திமுகவுடன் விசிக கூட்டணி முறித்தது திமுகவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், தனிச்சின்னத்தில் போட்டியிட்டு கூட்டணி கட்சிகள் தோல்வியை சந்தித்ததால் திமுகவுக்குத்தான் இழப்பாக அமையும். அதேவேளையில், இது முதலமைச்சர் ஸ்டாலினின் தன்மானப் பிரச்சனை என்பதால், என்ன செய்வது என்று தெரியாமல் திமுகவினர் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

Views: - 608

0

0