திருமாவளவனின் திடீர் ‘முருக’ பக்தி : அதிர்ச்சியில் கூட்டணிக் கட்சிகள்..!

12 July 2021, 6:23 pm
Quick Share

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேர்தல் நேரத்தில் அவ்வப்போது திமுக தலைமைக்கு ஏதாவது சிறுசிறு அதிர்ச்சிகளை அளிப்பது வழக்கம்.

சின்னத்தால் நெருக்கடி

2019 நாடாளுமன்ற தேர்தலில் விசிகவுக்கு விழுப்புரம், சிதம்பரம் என இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அப்போது திமுக தலைமை, இந்த இரு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தது.

ஆனால் இதை முழுமனதுடன் ஏற்க மறுத்த திருமாவளவன் விழுப்புரம் தொகுதியில் மட்டும் திமுகவின் சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொண்டார். சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பானை சின்னத்தில் போட்டியிட்ட அவர் 3 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார்.

vck pot - updatenews360

2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில், 12 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கேட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, திமுக 6 இடங்களை மட்டுமே ஒதுக்கியது. அதை திருமாவளவன் முழு மனதுடன் ஏற்கவில்லை. பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது என்பதற்காக சம்மதித்தேன் என்று 6 தொகுதிகளை வாங்கிக்கொண்டதாக கூறினார்.

ஆனாலும், தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்ற அவருடைய பிடிவாதத்தை யாராலும் மாற்ற முடியவில்லை. இதனால் திமுகவுக்கு அப்போதும் அதிர்ச்சிதான். எனினும், 6 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிட்டு அதில் 4-ஐ கைப்பற்றியது, விடுதலை சிறுத்தைகள் கட்சி.

சிக்கனமான வாழ்த்து

இதற்கிடையே தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், 2019 செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, பட்டியலின சமூகத்தை சேர்ந்த பிரபல ஐகோர்ட் வக்கீலான எல். முருகனை தமிழக பாஜக தலைவராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லி மேலிடம் நியமித்தது.

அப்போது, திருமாவளவன் தனது சமூகத்தை சேர்ந்த முருகனுக்கு பாஜக மிகப்பெரிய பதவி வழங்கியதை மனம் விட்டு பாராட்டவில்லை. அப்படி செய்தால் அது பாஜகவை நேரடியாக புகழ்வது போல் ஆகிவிடும் என்பதால் கண்டும் காணாததுபோல விட்டுவிட்டார்.

அண்மையில் முருகன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டபோது, திருமாவளன் ஒரே வரியில் வாழ்த்து தெரிவித்தார். “தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை மத்திய அமைச்சராக நியமித்து இருப்பதை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்” என்று சிக்கனமாக குறிப்பிட்டார்.

58 வயது திருமாவளவன் தன்னை விட 14 வயது இளையவரான, முருகனை மனம் விட்டு பாராட்டி இருக்கலாம்.

தனிப்பட்ட முறையில் இல்லை என்றாலும் கூட, நாட்டை ஆளும் ஒரு தேசியக்கட்சியில் குறுகிய காலத்திற்கு உள்ளாகவே மாநிலத் தலைவர் பதவியைப் பெற்று, அடுத்த ஓராண்டுக்குள் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டதை மனதில் கொண்டாவது இன்னும் இரண்டு வரிகள் சேர்த்து வாழ்த்து கூறியிருக்கலாம்.

முருக பக்தி

அதேநேரம், தற்போது மாநிலத்தில் கொங்கு நாடு பிரச்சினை பெரும் விவாதப் பொருளாக மாறி சூறாவளியாய் சுழன்று அடிக்க ஆரம்பித்த பின்பு திருமாவளவன் மத்திய அமைச்சர் எல்.முருகன் பற்றி, “ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்டதாம்” என்பதுபோல ஒரு கருத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.

முருகன் மீதான அந்த திடீர் பாசப்பதிவில், “பாஜக ஒரு சமூகப் பிரிவினைவாத சிந்தனை கொண்ட கட்சி. மதம், ஜாதி பெயரால் பிளவை ஏற்படுத்தும் அரசியல் உத்தி இது. பாஜக பலவீனமாக உள்ள மாநிலங்களில் இதுபோன்ற உக்திகளை செய்து வருகிறது. இப்படித்தான் காஷ்மீரை மூன்றாக பிரித்தது. வட இந்திய மாநிலங்களை அரசியல் ஆதாயத்திற்காக துண்டு போட்டு வருகின்றது. வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற தமிழ்நாட்டிலும் இதுபோன்ற முயற்சியை செய்து பார்க்க உள்ளதாக தெரிகிறது.

L Murugan - Updatenews360

கொங்குநாடு முழக்கத்துக்கு முன் தமிழக பாஜக தலைவர் எல். முருகனை நீக்கியது தவறு. அது அவருக்கு செய்த அவமதிப்பு.

அவரால்தான் தமிழகத்தில் 4 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். முருகனை பலிகடா ஆக்கிவிட்டு ஆறுதல் அளிக்கும் விதமாக அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. முருகன் கையில் இருந்த அவரின் அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. இதை மேற்கு மாவட்ட பகுதியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்” என்று கூறிஇருக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரின் இந்தக் கருத்தால் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் கடும் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்துள்ளன. திருமாவளவன், திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு பேசுவதாக இந்த கட்சிகளின் இடை நிலைத் தலைவர்கள் கருதுகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.

கொங்கு நாடு விவகாரத்திலும் பாராட்டு

இதுதொடர்பாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகையில், “மத்திய அமைச்சராக எல்.முருகன் நியமிக்கப்பட்டபோது, திருமாவளவன் அதை வரவேற்பதாக குறிப்பிட்டார். அப்போதே திமுக கூட்டணி கட்சிகளிடம் சலசலப்பு ஏற்பட்டது. முருகனை பாராட்டுவதென்பது பாஜகவை புகழ்வதற்கு சமம் என்று காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் கருதின.

என்றபோதிலும் அவருடைய சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்ததால் அதுபற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தற்போது கொங்கு நாடு தனி மாநிலம் குறித்த விஷயத்திலும் மத்திய அமைச்சர் முருகனை பாராட்டி திருமாவளவன்
கருத்து தெரிவித்து இருப்பதாகவே காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் நினைக்கின்றன.

திருமாவளவன் தனது பேட்டியில் மத்திய அமைச்சர் முருகனுக்கு ஆதரவாக 2 கருத்துக்களை முன்வைத்திருப்பதை உணர முடிகிறது. கொங்குநாடு முழக்கத்துக்கு முன் பாஜக தலைவர் எல். முருகனை நீக்கியது தவறு என்கிறார். அப்படியென்றால் முருகன் தமிழக பாஜக தலைவராக நீடித்து கொங்கு நாடு தனி மாநில கோரிக்கை எழுந்திருந்தால் அதை ஆதரிப்போம் என்று திருமாவளவன் கூறுவது போல இருக்கிறது.

kongu nadu- updatenews360

அடுத்து முருகனை பலிகடா ஆக்கிவிட்டு ஆறுதல் அளிக்கும் விதமாக அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது என்றும் அவர் சொல்வதையும் திமுக கூட்டணி கட்சிகள் அவ்வளவாக ரசிக்கவில்லை.

ஏனென்றால், மாநில தலைவராக இருந்த ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதென்பது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் எல். முருகன் எம்பியாக இல்லாத நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த பின்பு அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருப்பது மிகப்பெரிய அங்கீகாரம். மேலும் அவருக்கு தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால் நடை, பால் வளம் என 4 முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதைத்தான் காங்கிரசாலும், கம்யூனிஸ்ட்டுகளாலும் ஜீரணித்துக்கொள்ள இயலவில்லை. எனவே முன்பிருந்ததை விட இப்போது முருகன் கையில் அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது,என்பதே உண்மை.

இதன் காரணமாக தமிழக மக்கள் மத்தியில் பாஜக மீது மதிப்பு ஏற்பட்டு விடக்கூடும் என்றும்
திமுக கூட்டணி கட்சிகள் கருதுகின்றன. கொங்கு நாடு குறித்த விசிக தலைவரின் பேட்டியில் இப்படி இரு விதமாகவும் அர்த்தம் எடுத்துக் கொள்ளும் வகையில் கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அதனால்தான் திருமாவளவனின் கருத்து எல்.முருகனை பாராட்டுவதுபோலவும் உள்ளது.

இன்னொரு புறம், தமிழகத்தைச் சேர்ந்த சில தனியார் தொலைக்காட்சி சேனல்கள் முருகன் தகவல் ஒலிபரப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதால் அரண்டு போய் உள்ளன.

ஏனென்றால் இதுவரை அந்த சேனல்கள் கருத்து சுதந்திரம், அரசியல் விவாதங்கள் என்ற பெயரில் மத்திய பாஜக அரசையும், பாஜக தலைவர்களையும் மட்டம் தட்டி தினமும் சகட்டுமேனிக்கு வசை பாடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தன. இனி இது குறைந்துபோகும். மாநில பாஜகவினர் உடனடியாக இது தொடர்பாக தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விடுவார்கள் என்ற பயமும் வரும். இதுவும் எல்.முருகனுக்கு கிடைத்த ஒரு மிகப் பெரிய வெற்றிதான்” என்று தெரிவித்தனர்.

Views: - 219

1

0