திருப்பதி தேவஸ்தானத்திடம் இருந்து வந்த இ-மெயில் : ஓபன் செய்து பார்த்த பக்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

11 November 2020, 4:16 pm
tirupathi - updatenews360
Quick Share

திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சி அலுவலகத்தில் இருந்து பக்தரின் இமெயிலுக்கு ஆபாச வீடியோக்களின் லிங்க் அனுப்பிய ஊழியர்களின் செயலைக் கண்டித்து தெலுங்கு தேச கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்து தர்ம பிரச்சாரம், ஏழுமலையான் கோவிலில் நடைபெறக்கூடிய நித்திய மற்றும் மாதாந்திர உற்சவங்கள் ஆகியவற்றை வீடுகளுக்கு கொண்டு செல்வதற்காக ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ஒளிபரப்பு செய்கிறது. பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏழுமலையானின் ஆசீர்வாதத்தை கிடைக்க செய்யும் வகையில், சதமானபவதி என்னும் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அவர்களது புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தேவஸ்தான அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க பிறந்த நாள், மண நாள் ஆகியவற்றை கொண்டாடும் பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம். இதற்காக பக்தர்களிடமிருந்து பிறந்தநாள் மற்றும் திருமண நாளுக்காக புகைப்படங்கள் மற்றும் அவர்களின் விவரங்கள் வாழ்த்து தெரிவிப்பவரின் பெயர், உறவு முறை ஆகியவற்றை கடிதம், இமெயில் ஆகியவற்றின் மூலம் பெறப்படுருகிறது.

பக்தர்களின் முகவரிக்கு அஞ்சல் துறை மூலம் தேவஸ்தானம் பிரசாதங்களையும் அனுப்பப்படுவதோடு, தேவஸ்தான தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ லிங்க்கும் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

Tirupathi Temple - updatenews360

இந்த நிலையில், சதமானபவதி நிகழ்ச்சிக்கு இமெயில் அனுப்பிய பக்தர் ஒருவரின் மெயிலுக்கு தொலைக்காட்சியிலிருந்து ஆபாச வீடியோக்களுடன் கூடிய வீடியோ லிங்கை ஊழியர்கள் அனுப்பி உள்ளனர். இதனை பார்த்த அந்த பக்தர் அதிர்ச்சி அடைந்து தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கு புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் நிர்வாக அதிகாரி ஜவகர் ரெட்டி, அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி ஆகியோர் ஊழியர்களின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, முழு விசாரணை நடத்துவதற்கு தேவஸ்தான விஜிலென்ஸ் துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். அதன்பேரில், தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் சைபர் க்ரைம் அதிகாரிகள் தேவஸ்தான தொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், ஆபாச வீடியோ லிங்க் அனுப்பிய ஊழியருடன் சேர்த்து மேலும் 5 ஊழியர்கள் ஆபாச வீடியோ பார்த்து வந்தது தெரிய வந்தது.

பணி நேரத்தில் மேலும் 25 ஊழியர்கள் இதர வீடியோக்கள் பார்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் சைபர் க்ரைம் அதிகாரிகள் வழங்கும் அறிக்கையை அடிப்படையாக கொண்டு நடவடிக்கை எடுக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், தேவஸ்தான தொலைக்காட்சி ஊழியர்களின் இதுபோன்ற செயல்களை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் இன்று திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Views: - 51

0

0