திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆக.,4ம் தேதி வரை பக்தர்கள் வர தடை : கோவில் நிர்வாகம் அறிவிப்பு

Author: Babu
31 July 2021, 11:28 am
thiruthani temple - updatenews360
Quick Share

திருவள்ளூர் : திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆக.,4ம் தேதி வரை பக்தர்கள் வர தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில்‌ கூடுதல்‌ தளர்வுகள்‌ இன்றி ஊரடங்கு மேலும்‌ ஒரு வாரம்‌ நீட்டிப்பு என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ அறிவிப்பு வெளியிடப்பட்டதனை தொடர்ந்து கொரோனா நோய்‌ தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன்‌ நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள்‌ மற்றும்‌ காவல்‌ துறைக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள்‌.

அதன்படி திருவள்ளூர்‌ மாவட்டத்தில்‌ தற்போது நிலவி வரும்‌ கொரோனா நோய்த்‌ தொற்று சூழ்நிலைகளை கருத்தில்‌ கொண்டும்‌, தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறை அடிப்படைகளிலும்‌, திருவள்ளூர்‌ மாவட்டம்‌, திருத்தணி வட்டம்‌, திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்‌ ஆடிக்கிருத்திகை பெருவிழா முன்னிட்டு அதிக அளவிலான பக்தர்கள்‌ கூடுவார்கள்‌ என்பதால்‌, கொரோனா நோய்‌ தொற்று பரவாமல்‌ இருக்க நடவடிக்கை எடுக்கும்‌ பொருட்டு 31.07.2021 முதல்‌ 04.08.2021 வரை 5 நாட்களுக்கு மேற்படி திருக்கோயிலில்‌ பக்தர்கள்‌ சுவாமி தரிசனம்‌ செய்ய அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

திருக்கோயில்‌ வளாகத்தில்‌ தெப்ப உற்சவம்‌ தொடர்பான நிகழ்வுகள்‌ பக்தர்களின்றி சென்றாண்டு நடைபெற்றதைப்போல்‌ இந்தாண்டும்‌ நடைபெறும்‌ என தெரிவிக்கப்படுகிறது. எனவே, பொது மக்கள்‌ யாரும்‌ திருவள்ளூர்‌ மாவட்டம்‌, திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தர வேண்டாம்‌ என மாவட்ட நிர்வாகத்தின்‌
சார்பில்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறது.

02.08.2021 முதல்‌ 04.08.2021 வரை திருக்கோயில்‌ மலைக்கோயிலில்‌ 3-ம்‌ பிரகாரத்தில்‌ நடைபெறும்‌ தெப்ப உற்சவ நிகழ்வுகளை இணைய தளத்திலும்‌, யூடியுப்‌ சேனலிலும்‌ நேரடியாக மாலை 05.00 மணி அளவில்‌ ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 156

0

0