விடிய விடிய தாக்குதல்… லத்தியில் ரத்தக்கறை.. பெண் காவலர் ‘பரபர’ வாக்குமூலம் : சாத்தான்குளம் சம்பவத்தில் வெளியான ‘ஷாக்’ தகவல்கள்..!

30 June 2020, 2:04 pm
sathankulam-custodial-death-case 1- updatenews360
Quick Share

கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாக சாத்தான்குளத்தில் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 19ம் தேதி இரவு போலீசார் கைது செய்தனர். பின்னர், கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு சாத்தான்குளம் காவலர்கள்தான் காரணம் என்றும், இருவரையும் காவலர்கள் அடித்து துன்புறுத்தியதாக அடுக்கடுக்கான குற்றம்சாட்டினர். இதனிடையே, சிசிடிவி காட்சிகளும் போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொய்யானவை என்பதை உறுதி செய்தன. இதைத் தொடர்ந்து, சாத்தான்குளம் காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மேலும், தந்தை மற்றும் மகனின் பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் இருவரின் உடலில் மோசமான காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், எனவே, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதாகவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது. இந்த வழக்கில் ஒரு நிமிடம் கூட வீணாக்க விரும்பவில்லை என்றும் மதுரை நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Sattankulam_FatherSon_PoliceBrutality- updatenews360

அதேவேளையில், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், விசாரணைக்கு சென்ற போது, மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் தன்னை வரவேற்கவோ, வணக்கம் கூறவோ இல்லை எனக் கூறினார். மேலும், தன்னை அலட்சியமாக நடத்தியதாகவும், மிரட்டல் தொனியில் தனது உடல் அசைவுகளை அவர்கள் வெளிக்காட்டியதாகவும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “ஜெயராஜ், பென்னிக்ஸை காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும் காவலர் ரேவதி சாட்சியம் அளித்துள்ளார். சாத்தான் குளம் காவல்நிலைய டேபிள், லத்தியில் ரத்தக்கறை படிந்துள்ளதாக காவலர் ரேவதி கூறினார்.

கட்டாயப்படுத்திய பிறகே லத்திகளை காவல்நிலைய போலீசார் ஒப்படைத்தனர். லத்தியை தர மறுத்த காவலர் மகாராஜனை கையை வைத்து தள்ளி அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. லத்தியை கேட்டபோது மேலும் ஒரு காவலர் குதித்து தப்பி ஓடிவிட்டார்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் விடிய விடிய தாக்கியதாக சாட்சியம் அளித்த காவலர் ரேவதி கடைசியில் கையெழுத்திட மறுத்திவிட்டார். மிகவும் சிரமப்பட்டே காவலர் ரேவதியிடம் கையெழுத்தை பெற முடிந்தது. காவல்நிலைய தலைமை காவலர் ரேவதி நடந்த சம்பவத்தை மிகுந்த பயத்துடன் சாட்சியம் அளித்தார். சாட்சியம் அளித்தால் தனக்கு மிரட்டல் வரும் என்ற பயமும் அவரிடத்தில் காணப்பட்டது.

thoothukudi police - updatenews360

1TB ஸ்டோரேஜ் இருந்தும் சாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி காட்சிகள், தினமும் அழிந்து போகும் வகையில் செட்டிங்ஸ் செய்யப்பட்டிருந்தது. காவல்நிலையத்தில் 19ம் தேதி நடந்த சம்பவம் குறித்த அனைத்து சிசிடிவி காட்சிகளும் அழிக்கப்பட்டிருந்தன. சிசிடிவி காட்சிகளை தரவிறக்கம் செய்யும் பொருட்டு, ஸ்டோரேஜ் ஹார்ட் டிஸ்க்கை பறிமுதல் செய்து எனது பாதுகாப்பில் வைத்துள்ளேன்,” எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், டிஜிபியின் வழக்கமான உத்தரவுக்கு காத்திருக்காமல், கொலை வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி டிஎஸ்பி அணில்குமார் விசாரணையை தொடங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதியளித்துள்ளது. மேலும், டிஎஸ்பி அணில்குமார் விசாரணை திருப்தி அளித்தால் சிபிஐக்கு மாற்றியதை அரசு மறுபரிசீலனை செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply