தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு..!

19 August 2020, 5:29 pm
Quick Share

சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டினால், பொதுமக்களுக்கு பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கருதி, கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாந்தா குழுமம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பிற்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

இருப்பினும், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் பங்கஜ் குமார் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தால், தங்களது தரப்பின் வாதத்தையும் கேட்க வேண்டும் எனக் கூறி கேவியட் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது. ஏற்கனவே, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0 View

0

0