பாஜகவை சீண்டாதீர்கள்… புதுச்சேரிக்கு ஏற்பட்ட கதிதான் தமிழகத்திற்கும்.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை வார்னிங்..!!

Author: Babu Lakshmanan
30 May 2022, 12:52 pm
Annamalai Stalin - Updatenews360
Quick Share

சென்னை : படுகர் இன மக்களுக்கு நாங்கள் துணை நிற்போம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- எந்த கமிட்டி வந்தாலும் யார் முயற்சி செய்தாலும் படுகர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முடியாது என்று திமுக அமைச்சர் ராமச்சந்திரன் சொல்லி இருப்பது வேதனைக்குரிய செய்தி. படுகர்கள் அனைத்து துறையிலும் முன்னேறி விட்டார்கள் எல்லோரும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். இது பற்றி படுகர்கள் பெருமைப்பட வேண்டுமே தவிர அரசு சலுகைகளை எதிர்பார்க்கக்கூடாது. படுகர்கள் பழங்குடியினர் பட்டியலில் இடம் பெற வாய்ப்பே இல்லை என்றும் அறிவாலயம் திமுக அரசின் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியுள்ளார்.

திமுகவினர் இப்படித்தான் ஜம்மு-காஷ்மீரில் ஆர்டிகல் 370 ரத்து செய்ய முடியாது, முத்தலாக் தடை சட்டம் வரவே வராது, இந்தியாவில் ஒரே மாதிரியான வரி விதிப்பு கொண்டுவரமுடியாது, வடகிழக்கில் பாஜக ஆட்சிக்கு வரமுடியாது, தாமரை மலராது, அயோத்தி பிரச்சனை தீராது, நீட்தேர்வு நடக்காது என்று ஏகடியம் பேசிய திமுகவினர் அதே வரிசையில் சொல்லியிருக்கும் மற்றொரு பொய் படுகர் இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முடியாது என்பது.

இதுவரை தொடர்ந்து ஆட்சியில் இருந்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி மத்திய மாநில ஆட்சி பொறுப்பில் பலமுறை இருந்தபோதும் ஏன் படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆட்சியில் இருந்த காலங்களில் எல்லாம் படுகர் இன மக்களின் நியாயமான கோரிக்கைகளை எல்லாம் மறந்து காலம் காலமாக திமுக அரசு தடுத்து வந்தது.

தமிழகம் முழுவதும் மாநில அமைச்சர் ராமச்சந்திரன் அவர்களின் பொறுப்பற்ற பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தவுடன் தன்னுடைய நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொண்டுள்ளார். வழக்கம் போல மத்திய அரசின் மீது பழிபோட்டு பாஜக இருக்கும் வரை படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க இயலாது என்பதாகதான் தான் தெரிவித்ததாக மாற்றிப் பேசுகிறார்.

நீலகிரி, குன்னூர், அகர்தலா அரசுப் பள்ளியில் பலர் முன்னிலையில் தான்பேசிய பேச்சை தானே மறுக்கிறார். தொடர்ந்து புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தொட்டதற்கெல்லாம் மத்திய அரசின் மீது பழி சொல்லி, மத்திய அரசுடனும் மாநில ஆளுநரிடம் மோதல்களைத் தொடர்ந்து, தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. பணம் தரவில்லை என்று பழி மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தது. அதனை மக்கள் ரசிக்கவில்லை, பல காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும்கூட ரசிக்கவில்லை.

அதே பாணியில் தொடர்ந்து செயல்பட்டு வரும் திமுக அரசின் பொய்யுரைகள் மக்களை எரிச்சல் படுத்தி, அடுத்த முறை பாஜகவை ஆட்சியில் அமர்த்தி புதுச்சேரியில் நடந்ததைபோல தமிழகத்தில் நடத்திக்காட்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. பாரதிய ஜனதா கட்சி படுகர் இன மக்களையும் அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகளையும் சந்தித்து பேசி இருக்கிறது. ஒரு தரப்பினரை டெல்லியில் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசவும் வைத்திருக்கிறது.

பழங்குடியினர் சமுதாயத்தில் முக்கியமான பல பிரிவினர் பாஜகவுடன் தொடர்பில் இருக்கிறார்கள். பல ஆண்டுகளாக அதிமுக கூட்டணி ஆட்சியில் அதிகாரமும் பதவியும் இருந்தும் செய்ய மனமின்றி திமுகவால் ஒதுக்கப்பட்ட தமிழக பழங்குடியின மக்களுக்காக அவர்களுடைய கோரிக்கைகளை விரைவில் நிறைவேற தமிழக பாஜக தொடர்ந்து பாடுபடும், என தெரிவித்துள்ளார்.

Views: - 563

0

0