எங்கும் ஸ்டிக்கர்.. எதிலும் ஸ்டிக்கர் : இது அரசு அலுவலகமா இல்ல அண்ணா அறிவாலயமா? கேள்வி எழுப்பும் மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2022, 7:31 pm
CM Sticker -Updatenews360
Quick Share

கோவை : பொங்கல் பையில் கூட போட்டோ போடாதவர் என்று பில்டப் காட்டிவிட்டு அரசு அலுவலகங்கள் முழுவதும் தனது புகைப்படத்தையும், தன் தந்தை புகைப்படத்தையும் வளச்சு வளச்சு ஒட்டியிருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது வழங்கப்பட்ட சில நலத்திட்ட பொருட்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் ஒட்டப்பட்டிருந்தது.

இதற்கு அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தது. ஜெயலலிதா தன்னை முன்னிறுத்திக் கொள்ள இவ்வாறு செய்வதாக தி.மு.க,வின் அன்றைய செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் முடிந்து தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சி அமைந்த உடனேயே, முதலமைச்சர் மு க ஸ்டாலின் புகைப்படம் மட்டுமல்லாது, அவரது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் புகைப்படமும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் இடம்பெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு போடப்பட்டது.

அதன்படி தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது தந்தை கருணாநிதியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே தமிழக அரசு பொங்கலுக்கு வழங்கிய பரிசு தொகுப்பு பையில் முதலமைச்சரின் புகைப்படம் இடம் பெறவில்லை என்றும் விளம்பரம் இல்லாத முதலமைச்சர் என்றும் தி.மு.க.,வினர், பலே ‘பில்டப்’ கொடுத்து வந்தனர்.

ஆனால் மெல்ல மெல்ல ஸ்டிக்கர்களை ஒட்டி தற்பெருமை பேச தொடங்கியுள்ளது திமுக அரசு. ஆட்சி அமைத்த வெகு சில காலத்தில் தமிழகத்திற்கு பல திட்டங்களை கொடுத்ததுபோல் பில்டப்புகள் அள்ளி வீசி அரசு அலுவலகங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து துறை அலுவலக வாயில்களிலும் இந்த ‘பில்டப்’ ஸ்டிக்கர்களை காணமுடிகிறது. குறிப்பாக தமிழக முதலமைச்சர் புகைப்படம் மட்டுமல்லாது அவரது தந்தையான கருணாநிதியின் புகைப்படமும் இந்த ஸ்டிக்கர்களில் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆட்சியை ஸ்டிக்கர் ஆட்சி என்று கூறி விமர்சனம் செய்த திமுக. தற்போது ஆட்சி அமைத்து ஒரு ஆண்டு கூட நிறைவடையாத நிலையில் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லாமல் இருப்பதாக கூறி புலம்பிச் செல்கின்றனர் வெகுஜனங்கள்.

Views: - 292

0

0