23-ம் புலிகேசியும், தமிழக காங்கிரசும்…. தமிழக காங்., நிலையை அம்பலப்படுத்திய அழகிரி… திடீர் புலம்பல் ஏன்?

Author: Babu Lakshmanan
25 October 2022, 4:03 pm
Quick Share

கேஎஸ் அழகிரி

தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடிய தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, மாநிலத்தில் கட்சியின் நிலைமை அதலபாதாளத்தில் உள்ளது என்பதை முதல் முறையாக, வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

Alagiri- updatenews360-min

மூன்று வருடங்களுக்கும் மேலாக தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை வகித்து வரும் அவருடைய தலைமையில், 2019 நாடாளுமன்ற தேர்தல், அதைத்தொடர்ந்து நடந்த 27 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022ல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என 5 தேர்தல்களை திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் சந்தித்து விட்டது.

2024 நாடாளுமன்ற தேர்தல், 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் இரண்டிலும் மீண்டும் திமுகவுடன் கூட்டணி அமைத்து முன்பை விட அதிக தொகுதிகளில் போட்டியிடவும் காங்கிரஸ் துடியாய் துடிக்கிறது.

23ம் புலிகேசி

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் மிகவும் பலம் இழந்த நிலையில் உள்ளது என்று கூறியதை கட்சியினரே பரிதாபமாக பார்க்கும் சூழலுக்கு கே. எஸ். அழகிரி
தள்ளிவிட்டு இருக்கிறார். இது காங்கிரசில் நீண்டகாலமாக உள்ள அடிமட்ட தொண்டர்கள் கட்சி நிர்வாகிகளின் மனதை நோகச் செய்வதாகவும், பெரும் அதிர்ச்சியில் மூழ்க வைப்பதாகவும் அமைந்து இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி மிகுந்த வருத்தத்தோடு, கூறும்போது, “வடிவேலு படமான இம்சை அரசன் 23ம் புலிகேசி போல் தமிழக காங்கிரஸ் பலவீனமாக உள்ளது. நம்மிடம் வாளும் இல்லை, படையும் இல்லை. அதனால் வரக்கூடிய தேர்தல் யுத்த களத்தில் பாஜகவினரை கடுமையாக எதிர்க்க பூத் கமிட்டி அமையுங்கள். கூட்டணியில் ஒரு எம்எல்ஏ, எம்பி சீட் பெற்றுவிடலாம் என கற்பனையில் வாழாமல் இனி கொள்கை அடிப்படையில் வாழவேண்டும்” என்று கட்சி குறிப்பிட்டார்.

அவர், காமெடி நடிகர் வடிவேலு நடித்த படத்தின் பெயருடன் ஒப்பிட்டுப் பேசியிருப்பதுதான் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கே எஸ் அழகிரி கூறுவதைப் பார்த்தால் தேர்தல் களத்தில், தமிழக காங்கிரஸ் நிராயுதபாணியாக நிற்கிறது, தேர்தலை சந்திப்பதற்கு பணம் என்கிற வலுவான ஆயுத பலமும், தொண்டர்கள் பலமும் கண்டிப்பாக தேவைப்படுகிறது என்று சொல்வதுபோல உள்ளது.

புலம்பல்

சமீபத்தில்தான் முதலமைச்சர் ஸ்டாலின், திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசும்போது, “ஒரு பக்கம் திமுக தலைவர், இன்னொரு பக்கம் தமிழகத்தின் முதலமைச்சர்; மத்தளத்திற்கு 2 பக்கமும் அடி என்பதை போல உள்ளது என் நிலைமை! இத்தகைய சூழலில், மேலும் துன்பப்படுத்துவது போல கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்துகொண்டால் நான் என்ன செய்வது? யாரிடம் சொல்வது? நாள்தோறும் காலையில், நம்மவர்கள் எந்த புது பிரச்னையும் உருவாக்கியிருக்க கூடாது என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன்; சில நேரங்களில் தூங்க விடாமல் ஆக்கிவிடுகிறது; என் உடம்பை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்! அமைச்சர்களின் அலட்சியமான பேச்சால் தூக்கத்தை தொலைக்கிறேன்” என்று கவலையோடு குறிப்பிட்டார்.

Stalin - Updatenews360

மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைக்கும் பணியை இப்போதே தொடங்க வேண்டும். அடுத்த இரண்டு மாதத்திற்குள் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும்! நாம் பெற்ற வெற்றியை நிரந்தரமாக தக்கவைக்க வேண்டும்” என்றும் அந்த பொதுக்குழுவில் ஸ்டாலின் தனது கட்சியினருக்கு அறிவுரை கூறி இருந்தார்.

மதிக்காத தொண்டர்கள்

அதே பாணியில்தான் அச்சு பிறழாமல் கே.எஸ். அழகிரியும் தமிழக காங்கிரஸ் நிலை குறித்துப் பேசியிருக்கிறார். கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அறிவுரை கூறியிருக்கிறார். ஆனால் இதை காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்பார்களா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்விதான்.

அதேநேரம் தமிழகத்தில் திமுகவுக்கு உள்ள செல்வாக்கில் 10-ல் ஒரு பங்காவது காங்கிரசுக்கு இருக்குமா? என்பது சந்தேகம்தான். அதனால் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கட்சியினரை எச்சரித்ததுபோல, கேஎஸ் அழகிரி சொல்வதை சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

KS Alagiri - Updatenews360

ஏனென்றால் சில மாதங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தில் கே எஸ் அழகிரி பேசும்போது, “தமிழகத்தில் காங்கிரசார் தங்கள் வீடுகளின் முன்பாக கட்சி கொடியை ஏற்றுவோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். அப்போதுதான் காங்கிரசை வளர்க்க முடியும். தேர்தலின்போது திமுக தலைமையிடம் அதிக தொகுதிகளை வாதாடி பெறவும் முடியும்” என்று உணர்ச்சி வசப்பட்டு இருந்தார். ஆனால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள் தவிர ஊருக்கு ஒரு காங்கிரஸ் கொடி பறப்பதை வேறு எந்த மாவட்டத்திலும் பார்க்க முடியாத சூழல்தான் இன்றும் உள்ளது.

அதாவது அவர் பேசியதை தமிழக காங்கிரசார் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பது தெரிகிறது.

இது மாதிரியான சூழலில் தமிழகத்தில் காங்கிரஸ் தற்போது பலமிழந்த நிலையில் உள்ளது என்று அழகிரி பேசுவது மாநிலத்தில் காங்கிரசின் நிலையை இன்னும் மோசமாக்கிவிடும் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் வேதனையுடன் முணுமுணுப்பதையும் கேட்க முடிகிறது.

இளைஞர்கள்

“சத்தியமூர்த்தி பவனில் உள்ள கூட்ட அரங்கிற்கு வரும் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவருமே தங்களுக்கு மேடையில் உட்கார இடம் கிடைக்குமா? என்பதில்தான் எப்போதுமே குறியாக இருக்கின்றனர். முன் வரிசையில் உட்காருவதற்கு தயக்கமும் காட்டுகின்றனர். இதனால் பல நேரங்களில் கோஷ்டி மோதல்கள் ஏற்பட்டு அது கைகலப்பிலும் முடிந்திருக்கிறது. வேஷ்டி, சட்டைகளை கிழித்துக் கொள்வதும் சர்வ சாதாரண நிகழ்வுகளாகி விட்டன.

கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக, இதுபோன்ற காட்சிகள் அவ்வப்போது அரங்கேறுகிறது. இதனால்தான் சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் காங்கிரஸ் கூட்டங்களுக்கு தொண்டர்கள் பெரும் அளவில் திரண்டு வருவது இல்லை.

Cbe Annamalai - Updatenews360

இதை கட்சி தலைமை புரிந்து கொண்டது போலவும் தெரியவில்லை.
சென்னையில் மட்டும்தான் என்றில்லை. பெரும்பாலான மாவட்டங்களில் இதே நிலைமைதான் இருக்கிறது. தவிர கட்சியில் சுறுசுறுப்பாக செயல்படும் இளைய நிர்வாகிகளை மூத்த தலைவர்கள் ஒருபோதும் ஊக்குவிப்பது கிடையாது. பிறகு எப்படி தமிழகத்தில் காங்கிரஸ் வளரும்?… அதேநேரம் தமிழக பாஜகவில் ஒரு இளைஞர் மாநிலத் தலைவராக இருக்கிறார். தற்போது அவர் பக்கமாக இளைஞர் காங்கிரசாரின் பார்வை திரும்பியிருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இதை தமிழக காங்கிரசின் சீனியர் தலைவர்கள் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்தால், கட்சியை ஓரளவுக்கு மீட்டெடுக்க முடியும். இல்லையென்றால் திமுகவின் தயவுடன்தான், அக்கட்சி ஒதுக்கும் தொகுதிகளை பெற்றுக்கொண்டு காலத்தை கடத்த வேண்டிய நிலை ஏற்படும்” என்று அந்த நிர்வாகிகள் வருத்தத்தோடு கூறுகிறார்கள்.

பலவீனம்

ஆனால் அரசியல் விமர்சகர்களின், பார்வையோ வேறு மாதிரியாக இருக்கிறது.

“நாட்டிலேயே தமிழக காங்கிரசில்தான் பத்துக்கும் மேற்பட்ட கோஷ்டிகள் இருக்கின்றன. ப.சிதம்பரம், கே எஸ் அழகிரி, திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு, மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், டாக்டர் செல்லக்குமார் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இதேபோல மகளிர் காங்கிரசிலும் 5 கோஷ்டிகள் இருக்கின்றன.

இவர்களில் யார் காங்கிரஸ் தலைவராக இருந்தாலும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இல்லாததால், தமிழகத்தில் அக் கட்சி மிகுந்த பலவீனமாக மாறிவிட்டது என்பதும் உண்மை.

தவிர 2016, 2021 என தொடர்ந்து இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், காங்கிரஸ் எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் தொகுதிகளை திமுகவிடம் கேட்டு பெற முடியவில்லை.

2011ல் திமுகவிடம் 63 தொகுதிகளை வாங்கிய காங்கிரசால் 2016 தேர்தலில் 41ல் மட்டுமே போட்டியிடும் நிலை உருவானது. இது 2021ல் 25 ஆக குறைந்து போனது. கருணாநிதி உயிருடன் இருந்தவரை அவரிடம் போராடி அதிக தொகுதிகளை பெற்ற காங்கிரசால், அது ஸ்டாலினிடம் பலிக்கவில்லை.

சட்டப்பேரவை தொகுதி பங்கீட்டின் போது, அறிவாலயத்தில் என்னை திமுக தலைவர்கள் மதிக்க மாட்டேன் என்று கண்ணீர் விட்டு அழுதவர்தான் கே.எஸ்.அழகிரி. அதனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் செல்வாக்கை நிரூபிக்க அவர் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டு இருக்க வேண்டும். அதை செய்யத் தவறியதால் இன்று தமிழக காங்கிரஸின் நிலை கவலைக்குரியதாக மாறிவிட்டது.

தவிர திமுக அரசை புகழ்ந்து பேசுவதில், திமுக தலைவர்களுடன் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் போட்டி போடுகிறார்கள். இதனால் மதிமுக எப்படி திமுகவுடன் ஐக்கியமாகி விட்டதோ, அதே நிலை மெல்ல மெல்ல தமிழக காங்கிரசுக்கும் ஏற்பட்டு வருகிறது.

Congress - Updatenews360

அது மட்டுமின்றி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று அல்லது நான்கு தொகுதிகளை மட்டுமே காங்கிரசுக்கு, திமுக ஒதுக்கும் என்ற பேச்சு இப்போதே எழத் தொடங்கிவிட்டது. இதுவரை நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளுக்கும் குறையாமல் தமிழகத்தில் போட்டியிட்ட காங்கிரசுக்கு இது ஒரு கெளரவ பிரச்சினையான விஷயமாகவும் உருவெடுக்கலாம்.

அதுமட்டுமின்றி, தமிழக காங்கிரசுக்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதனால் அப்பதவியிலிருந்து, வெளியேறும் முன்பாக கே எஸ் அழகிரி தனது ஆற்றாமையை வெளிப்படுத்தும் விதமாக, 23-ம் புலிகேசியின் நிலை போல் காங்கிரஸ் உள்ளது. கட்சியில் வாளும் இல்லை, படையும் இல்லை என்று வேடிக்கையாக கூறி வேதனைப்படுகிறார்.

மேலும் தமிழகத்தில் அண்ணாமலையின் வரவுக்கு பின்பு, மாநிலத்தில் பாஜக பெற்றுள்ள எழுச்சியும் அவருடைய கண்களை உருத்த தொடங்கியிருக்கிறது. அதுவும் அவரது புலம்பலுக்கு முக்கிய காரணம். தமிழகத்தில் பாஜக வலுப்பெற்று விட்டால் நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை திமுக தங்களுக்கு ஒதுக்காது என்பதும் அவருக்கு புரிகிறது.

அதேநேரம் திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கே சிறந்த வழிகாட்டி என்று அவ்வப்போது முதலமைச்சர் ஸ்டாலின் கூறி வருவதால், எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் போட்டியில் அவரும் குதிக்க வாய்ப்பு உள்ளது என்று காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. அதன் காரணமாகவும் கே எஸ் அழகிரி இப்படி மனம் நொந்து பேசியிருக்கலாம்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைவரின் நிலையை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது!

Views: - 374

0

0