தமிழகத்தில் தொடரும் காவலர்களின் மரணம்… அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆய்வாளர் பலி : கரூரில் பதற்றம்!!

Author: Babu Lakshmanan
22 November 2021, 12:58 pm
police - updatenews360
Quick Share

கரூர் : கரூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் வாகன ஆய்வாளர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக கனகராஜ் என்பவர் பணியாற்றி வந்தார். இன்று காலை வழக்கம் போல் சீருடை அணிந்து அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கிருந்து அருகில் உள்ள கரூர் – திருச்சி நெடுஞ்சாலையில் வெங்கக்கல்பட்டி பிரிவு அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த 4 சக்கர வாகனம் ஒன்றை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், வாகனம் நிற்காமல் அவர் மீது பலமாக மோதி விட்டு சென்று விட்டது.

படுகாயமடைந்த ஆய்வாளரை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதனையடுத்து, அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மோட்டார் ஆய்வாளர் மீது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் வட்டார போக்குவரத்து பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, காவலர் ஒருவரை ஆடு திருடர்கள் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பிய நிலையில், மேலும் ஒரு காவலர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 313

0

0