பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை..! கண்டிப்பான உத்தரவு போட்ட தமிழக அரசு

16 August 2020, 6:42 pm
School StoRY - updatenews360-Recovered
Quick Share

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் 1, 6, 9ம் வகுப்புகளுக்கு நாளை முதல் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் மார்ச் மாத இறுதியில் மூடப்பட்டன. இதுநாள் வரையில் திறக்கப்படவில்லை.

பள்ளிகள் திறப்பு காலதாமதமாகி கொண்டே போவதால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்தி வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

கொரோனா காரணமாக தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் 1, 6 மற்றும் 9ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 17 முதல் தொடங்க உள்ளதாக அமைச்சர்  செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

அதன்படி, அரசு பள்ளிகளில் 1, 6, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் மாணவர் சேர்க்கை ஆரம்பிக்கப்படுகிறது. அன்றே மாணவர்களுக்கான இலவச நோட்டு, புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களை தொலைபேசி வாயிலாக சேர்க்கை  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க 2 மணி நேரத்திற்கு 20 மாணவர்களை மட்டும் அழைத்து சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 24ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.