தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு…! தீவிர கெடுபிடியில் போலீசார்…!
16 August 2020, 10:55 amசென்னை: தமிழகம் முழுவதும் 7வது ஞாயிற்றுக்கிழமையாக தளர்வுகள் எதுவும் இன்றி முழு ஊரடங்கு அமலாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பத்திரிகைகளுக்கு பொருந்தாது. அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்படுவது 7வது முறை ஆகும். பெரும்பாலான மக்கள் நேற்றே மார்க்கெட்டுகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி வந்துவிட்டனர். ஆகையால் இன்று மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.
அத்தியாவசிய மற்றும் அனுமதி பெற்றவர்களும் நடமாட எந்த தடை இல்லை. மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இவர்களை தவிர வேறு எந்த நடமாட்டமும் இருக்கக்கூடாது என்பதால் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் இறங்கி உள்ளனர்.