10 ஆண்டுகள் பழமையான சாலைகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் : அன்புமணி கொடுத்த செம ஐடியா…!!

Author: Babu Lakshmanan
13 December 2021, 2:37 pm
Anbumani 02 updatenews360
Quick Share

10 ஆண்டுகள் பயன்படுத்திய சாலைகளில் சுங்க கட்டணம் விதிக்க தடைவிதிக்க வேண்டும் என்று பாமக எம்பி அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் உள்ள 47 சுங்கச்சாவடிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. அதேபோல், ஆண்டுக்கு ஆண்டு சுங்கக்கட்டணம் சராசரியாக 10 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. அதன்படி சுங்கக்கட்டண வசூல் ஆண்டுக்கு குறைந்தது 15 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சுங்கக்கட்டண வசூல் குறிப்பிடத்தக்க அளவில் மாறாமல், 2016-17-ல் ரூ.3,320 கோடி, 2017-18-ல் ரூ.3,894 கோடி , 2018-19-ல் ரூ.3,262 கோடி, 2019-20 -ல் ரூ.3392 கோடி , 2020-21-ல் ரூ.3,875 கோடி என்ற அளவில் நிலையாகவே உள்ளது. இதற்குக் காரணம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள், குறிப்பிட்ட விழுக்காடு கட்டணத்தை கணக்கில் காட்டாமல் மறைத்து விடுவது தான்.

தனியாரால் அமைக்கப்பட்ட சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி, ஒரு நெடுஞ்சாலையை அமைப்பதற்காக செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்ட பிறகு பராமரிப்புக்காக 40 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். உண்மையான கணக்கு காட்டப்பட்டால், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சுங்கசாலைகளுக்கும் செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்டிருக்கும்.

அதன்பிறகு 40 சதவீதம் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க முடியும் என்பதால், அதை தவிர்த்து, இன்னும் பல ஆண்டுகளுக்கு முழுக் கட்டணத்தையும் வசூலிக்க வேண்டும் என்பதற்காகத் தான் சாலைகளை அமைத்த நிறுவனங்கள் முழுமையான கணக்கை காட்டுவதில்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் சுங்கக் கட்டண வசூல் மறைக்கப்பட்டதா? என்பன போன்ற வினாக்களுக்கு அதிகாரப் பூர்வ விடை காணும் வகையில் சுங்கக்கட்டண வசூல் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

விசாரணை முடிவடையும் வரை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 338

0

1