தமிழகத்தில் நாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு..! தவிடு பொடியாக சிதைந்த மாணவர்களின் கனவு!!

Author: Babu Lakshmanan
11 September 2021, 9:39 pm
Neet - dmk - updatenews360
Quick Share

மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வு இந்த ஆண்டு தமிழகத்தில் நடக்குமா? நடக்காதா?… என்ற விவாதம் கடந்த மே மாதம் 7-ம் தேதிக்கு பிறகு அனல் பறக்கத் தொடங்கியது.

பிள்ளையார்சுழி போட்ட அனிதா மரணம்

திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் 2017-ம் ஆண்டு முதலே நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதால் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் இந்த ஆண்டு எங்கு நீட் தேர்வு நடந்தாலும் தமிழகத்தில் மட்டும் நடக்கவே நடக்காது என்று மிகவும் உறுதியாக நம்பினர். இதற்கு 2 முக்கிய காரணங்கள் உண்டு.

anitha neet 1 - updatenews360

2017-ல் நீட் தேர்வுக்கு எதிராக அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவியை, சுப்ரீம் கோர்ட் வரை அழைத்துச் சென்று சிலர் வழக்கு தொடர வைத்தனர். ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக அறிவித்து விட்டது. இதனால் மனமுடைந்த அந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து அப்போது முதலே தமிழகத்தில் நீட் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் நீட்தேர்வு நடத்தப்பட்டபோது அதற்கு எதிராக திமுக, காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக போன்றவை மாநிலம் முழுவதும் பெரியளவில் போராட்டங்களையும் முன்னெடுத்தன. முன்னணி ஊடகங்களும் நீட் தேர்வுக்கு எதிராக அவ்வப்போது விவாதங்களை நடத்தி தமிழக மக்களிடம் கொதி நிலையை ஏற்படுத்தின.

திமுக வாக்குறுதி

இரண்டாவதாக, 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக சார்பில் அளிக்கப்பட்ட முதன்மையான வாக்குறுதிகளில் ஒன்று, திமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்பட்டு, அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும், என்பதாகும்.

மேலும் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் இந்த வாக்குறுதியை திமுக தலைவர் ஸ்டாலின் அளித்தார். அதுமட்டுமின்றி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு மட்டுமே தெரியும். எங்களுக்கு சூடு, சொரணை இருக்கிறது. திமுக ஆட்சி அமைத்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் உறுதிமொழி கூறினார்.

திமுக மகளிரணி செயலாளர் செயலாளர் கனிமொழியும் திமுக ஆட்சி அமைந்ததும், முதல் வேலையே நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டம் இயற்றுவதுதான் என்று பிரச்சாரம் செய்தார்.

இதன் காரணமாகவும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியால் பள்ளி இறுதியாண்டு மாணவர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியது. அவர்கள் அனைவரும், ‘நீட் தேர்வு ஒழிந்தது’ என்று உற்சாகத்துடன் டாக்டர் கனவில் மிதந்தனர்.

மாணவர்கள் ஏமாற்றம்

திமுக ஆட்சிக்கு வந்த மே 7-ந்தேதிக்கு பின்பு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் முடிந்துவிட்டது. இரண்டாம் கூட்டத் தொடரும் நிறைவடையும் நிலைக்கு வந்துவிட்டது. ஆனால் மாநில அரசு இதுவரை நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக எந்த சட்டத்தையும் இயற்றவில்லை.

அதேநேரம் தேசிய தேர்வு முகமை முன்னர் அறிவித்தபடி செப்டம்பர் 12-ம் தேதி, அதாவது, நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு நடக்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த தேர்வை தமிழகத்தில் 18 மையங்களில் 1 லட்சத்து 12 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 617. ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்து 890தான்.

அதாவது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 9 ஆயிரம் பேர் குறைவாக நீட் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு திமுக அரசின் குழப்ப நிலையே காரணம் என்று கூறப்படுகிறது.

Minister Subramaniam- Updatenews360

திமுக ஆட்சி ஏற்பட்டதால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பில் ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகவில்லை என்றும் கடைசி நேரத்தில் திடீரென நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்திருந்ததும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எப்படியாவது விலக்கு கிடைத்துவிடும் என்ற காரணத்தினால்தான் பல மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்கிறார்கள்.

தற்போது நீட் தேர்வு நடப்பது 100% உறுதியாகிவிட்டதால், அந்த மாணவர்களின் டாக்டர் கனவு தகர்ந்து சுக்கு நூறாகிப்போய் விட்டது. மாணவர்களின் பெற்றோர்களும் மனம் உடைந்து போய் உள்ளனர்.

சிறந்த மருந்து

இது குறித்து கல்வியாளர்கள் கூறும்போது, “மாணவர்கள் எப்போதும் போட்டி தேர்வுகளுக்கு தயார் நிலையில் இருக்கவேண்டும். அரசாங்கத்தை எதற்காகவும் எதிர்பார்க்க கூடாது. இதற்கு நீட் தேர்வு ரத்தாகும் என்ற எதிர்பார்ப்பு ஒரு உதாரணமாகும். முதல் கூட்டத் தொடரில் சட்டம் நிறைவேற்றப்படாத நிலையில், நீட் தேர்வு நடக்காது என்று மாணவர்கள் மனக்கோட்டை கட்டி இருந்தது தவறான ஒன்று.

தமிழக அரசு சட்டம் இயற்றினாலும் அதை ஜனாதிபதி ஏற்பாரா? நிராகரிப்பாரா? என்பது யாருக்கும் தெரியாது. ஒருவேளை, அவர் ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொண்டாலும் கூட இந்த விவகாரம் மீண்டும் சுப்ரீம் கோர்ட் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அப்போது தான், ஏற்கனவே அளித்த தீர்ப்பையே கோர்ட் உறுதி செய்யும். எனவே நீட் தேர்வுக்கு மாணவர்கள் எந்த சூழலிலும் தங்களை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். இது கசப்பான உண்மை என்றாலும் கூட இதுதான் எதார்த்தம்.

கடந்த 4 ஆண்டுகளில் நீட் தேர்வு நடந்தபோது அதுபற்றி அனல் பறக்க விவாதம் நடத்திய தனியார் டிவி சேனல்கள் தற்போது மௌனமாகி விட்டதும் வேதனையான விஷயம். இவர்கள் ஏன் பதுங்கி, ஒதுங்கிக் கொண்டார்கள் என்பதும் புரியவில்லை. இது ஊடக தர்மமாகவும் தெரியவில்லை. மாணவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்கள் தவறிவிட்டனர்.

EPS - Updatenews360

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய குடும்பத்து மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக அரசு கொண்டுவந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டம்தான் தற்போது மாணவர்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.

கடந்த ஆண்டு இந்த ஒதுக்கீட்டு முறை மூலம் அரசுப்பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்கள் 403 பேர், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இது மாணவர் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரம். நீட் தேர்வை ரத்து செய்திருந்தால் கூட தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இவ்வளவு இடங்கள் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.

எனவே திமுக அரசு இதை கௌரவப் பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல் இதே நடைமுறையை தொடர்ந்து கையாண்டால் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு சாத்தியமாகும். ஏனென்றால் நீட்தேர்வு இல்லாத 10 ஆண்டு காலத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் 30 ஆயிரம் பேர் வரை மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அதே காலகட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 260 பேருக்குதான் மருத்துவக் கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைத்தது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்”என்று தங்களது கருத்தை தெரிவித்தனர்.

Views: - 217

0

0