பெரியாரை விட தி.மு.க.வின் அடையாளமாக மாறினாரா உதயநிதி..? திருச்சி திமுக பொதுக்குழு பேனரால் சர்ச்சை..!

9 September 2020, 7:16 pm
periyar - udhayanidhi -updatenews360
Quick Share

சென்னை :திமுகவில் தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதியை அடுத்த வாரிசாக முன்னிறுத்துவதாகவும், கனிமொழி ஓரங்கட்டப்படுவதாகவும் சர்ச்சை வெடித்துள்ள சூழலில், திருச்சியில் அக்கட்சியின் பொதுக்குழுவில் பின்னணியாக வைக்கப்பட்டிருந்த பேனரில், திராவிட இயக்க நிறுவனர் பெரியார், திமுகவைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா, கட்சியின் முன்னாள் தலைவர் மு.கருணாநிதி படங்களை விடப் பெரிதாக உதயநிதியின் படம் வைக்கப்பட்டிருந்தது அக்குற்றச்சாட்டை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது.

திமுகவின் பொதுக்குழு இன்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நடைபெற்றது. செப்., 21 வரை அரசியல் கூட்டங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் தடை செய்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல மாவட்ட அரங்கங்களில் திமுக பொதுக்குழு நடைபெற்றது.

சென்னையில் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்துகொண்டார். பல மாவட்ட அரங்குகளில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் அரசியல், கலை, பண்பாட்டு, சமூக, மத நிகழ்ச்சிகள் செப்டம்பர் 21 வரை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திமுக இந்தத் தடை பற்றியோ, சட்டம் குறித்தோ, கொரானா மேலாண்மை பற்றியோ கவலைப்படாமல் தனது பொதுக்குழுவை நடத்தியது.

பொதுக்குழுவுக்கு திருச்சியில் வைக்கப்பட்ட பின்னணிப் பதாகையில் ஸ்டாலின் படத்துக்கு அடுத்தபடியாக பெரிய அளவில் உதயநிதி படம் இடம் பெற்றிருந்தது திமுகவில் பெரும் பூசலை வெடிக்கச் செய்துள்ளது.

Courtesy : king 360

மேலே அண்ணா, பெரியார், கருணாநிதி படங்கள் ஒன்றாக சேர்த்து சிறிதாக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த தலைவர்களின் படம் சிறியதாகவும், தற்போது உயிருடன் இருக்கும் தலைவர்கள் பெரிதாகவும் வைக்க திருச்சி மாவட்ட திமுகவினர் முடிவு செய்திருந்தாலும், முதன்மை செயலாளரான கே.என்.நேரு படமே உதயநிதியின் படத்தைவிடப் பெரிதாக வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் முதன்மை செயலாளரைவிட இளைஞர் அணித் தலைவர் முக்கியமானவரா என்ற கேள்வியும் எழுகிறது. திமுகவின் அமைப்பு விதிகளில் கட்சியின் தலைமை செயலாளர்களைவிட அணித்தலைவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.

திருச்சியில் திமுகவின் முக்கிய தலைவராகவும், உதயநிதியின் நெருங்கிய நண்பராகவும் விளங்கும் மகேஷ் பொய்யாமொழி இந்த பேனர் வைக்கக் காரணமாக இருப்பார் என்று கூறப்படுகிறது. வேண்டுமென்றே நேருவை மட்டந்தட்டியிருப்பதாகவும், திருச்சி மாவட்ட திமுக தொண்டர்கள் கருதினாலும், இது குறித்து கேள்வி எழுப்பினால் கட்சித்தலைமையின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று அமைதியாக உள்ளனர்.

திருச்சியில் நடைபெற்ற பொதுக்குழுவில் பெரியார், அண்ணாவை விட உதயநிதிக்கு திமுக முக்கியத்துவம் அளித்துள்ளது திமுகவின் மூத்த தொண்டர்களுக்கும், திராவிட அரசியல் சிந்தனையாளர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. பெரும்பாலான திராவிட அரசியல் சிந்தனையாளர்களும் திமுகவை ஆதரிக்கும் நிலைப்பாடு எடுத்துள்ளதால், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் மௌனமாக உள்ளனர். திமுகவின் மூத்த தொண்டர்களும், நிர்வாகிகளும் உள்ளுக்குள் கொதிப்படைந்தாலும் வெளியில் சொல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

Views: - 0

0

0