‘வெற்றியை பறிக்க எதிர்க்கட்சிகள் சதி’ : அதிபர் டிரம்பின் கருத்திற்கு டுவிட்டர் நிறுவனம் கண்டனம்…!

4 November 2020, 1:18 pm
Quick Share

தனது வெற்றியை தட்டிப் பறிக்க எதிர்க்கட்சி சதி திட்டம் தீட்டி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கருத்து வெளியிட்டதற்கு டுவிட்டர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடனும் போட்டியிட்டுள்ளனர். தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. பெரும்பான்மைக்கு 270 இடங்கள் என்ற நிலையில் டிரம்ப் 213 இடங்களிலும், ஜோ பிடன் 238 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். தொடர்ந்து, வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, “இன்று இரவு முக்கிய அறிவிப்பை வெளியிடப் போகிறேன். மிகப்பெரிய வெற்றி பெறுவோம். தேர்தல் முடிந்த பிறகும் வாக்களித்து வருகிறார்கள். எங்களின் வெற்றியை திருடப் பார்க்கிறார்கள்,” என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

டிரம்பின் டுவிட்டிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜோ பீடனும் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில்,”நாங்கள் வெற்றிப் பாதையில் உள்ளோம். வாக்காளர்களின் முடிவுதான் வெளியாகி வருகிறது. வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அமைதியாக இருங்கள்,” என அவர் தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், தனது வெற்றியை தட்டிப் பறிக்க எதிர்க்கட்சி சதி திட்டம் தீட்டி வருவதாக டிரம்ப் டுவிட்டரில் கருத்து வெளியிட்டதற்கு டுவிட்டர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி இதுபோன்ற கருத்துக்களை டிரம்ப் வெளியிட்டுள்ளதாகவும், தேர்தல் முடிவுகளில் குழப்பத்தை ஏற்படுத்த அவர் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 17

0

0