தினகரனுடன் கைகோர்த்த ஒவைசி… 3 தொகுதிகளும் ஒதுக்கீடு..!! அரசியலில் திடீர் திருப்பம்

8 March 2021, 6:39 pm
Owaisi -Dinakaran - updatenews360
Quick Share

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அமமுக – ஒவைசி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுகவை பொறுத்தவரையில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை சுமூகமாக முடித்து விட்டது. தேமுதிகவிடம் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. திமுகவை பொறுத்தவரையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்தது.

இதனிடையே, கமல்ஹாசன் தலைமையிலும், டிடிவி தினகரன் தலைமையிலும் 3வது அணியை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கமல்ஹாசன் தலைமையில் சரத்குமார், ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் கைகோர்த்துள்ளது. தினகரனும் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என திட்டம் தீட்டினார். ஆனால், முதலமைச்சர் வேட்பாளர் நான்தான் எனக் கமல் கூறியது, அந்தக் கூட்டணியின் கதவை அடைத்து விட்டது போலாகிவிட்டது.

இதனால், அமமுக தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டிடிவி தினகரன் கூறி வந்தார். இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக, வரும் சட்டப்பேரவை தேர்தலில் அமமுக – ஒவைசி கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் தொகுதிகளில் ஒவைசி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்கும் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, கமல்ஹாசனுடன் கைகோர்த்து இந்தத் தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் டிடிவி தினகரனுடன் கைகோர்த்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 12

0

0