கட்சி கூடாரம் காலி ஆவதால் திணறல் : திண்டாட்டத்தில் தினகரன், சசிகலா!!

19 July 2021, 2:13 pm
Sasikala - dinakaran - updatenews360
Quick Share

கடந்த 2 மாதங்களாக சசிகலா தனது ஆதரவாளர்களிடம் செல்போனில் பேசி, அதை ஊடகங்களுக்கு அனுப்பி செய்தியாக வெளியிட வைத்து வருகிறார். அதற்கு இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் யாராவது தன்னை தொடர்பு கொண்டு பேசுவார்கள் என்று எதிர்பார்த்தார். அதுவும் நடக்கவில்லை.

செல்போன் ரகளையும்… கவலையும்

ஊரடங்கு முடிந்தபிறகு உங்களை நானே வந்து சந்திப்பேன், என்று உதார் காட்டினார். அதுவும் எடுபடாமல் போனது. யாரும் அவரை வற்புறுத்தி அழைத்ததுபோல தெரியவில்லை.

sasikala - mgr - updatenews360

இதனால், எம்ஜிஆரே என்னிடம் நிறைய ஆலோசனை கேட்பார். நானும் அவ்வப்போது, அவருக்கு ஆலோசனை கூறி உதவுவேன். அதைக்கேட்டு எம்ஜிஆர் நடந்துகொண்டார் என்றும்
ஒரு ‘ரீல்’ சுற்றிப் பார்த்தார். அதைக்கேட்ட எம்ஜிஆர் ரசிகர்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் மயக்கம் வராத குறைதான். மூத்த தலைவர்கள் சிலர் கண்டனம் தெரிவித்தவுடன், அப்படியே பதுங்கிக் கொண்டார்.

இப்படி செல்போனில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தது, அவருக்கு எந்த பலனையும் தராதது கண்டு அவருடைய அக்காள் மகனும், அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் ரொம்பவே நொந்து போனார். ஏனென்றால் இந்த திட்டத்தை தீட்டி கொடுத்ததே அவர்தான் என்பது ஊரறிந்த ரகசியம்.

காலியான கூடாரம்

இது ஒருபுறமிருக்க, இன்னொரு பக்கம் தினகரன் கட்சியில் 2 வருடங்களுக்கு முன்பு அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்ந்த அமமுக தலைவர்களில் பெரும்பாலானோர், தங்களின் தாய்க்கழகமான அதிமுகவுக்கு திரும்பிவிட்டனர். இன்னும் சிலர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டுவிட்டனர்.

துணைப் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மிக அண்மையில்
திமுகவில் சேர்ந்துவிட்டார்.

எஞ்சியுள்ள கட்சி நிர்வாகிகளையாவது தடுத்து நிறுத்த முடியுமா? என்று பார்த்தார். அதுவும் நடக்கவில்லை.

இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் வெளியேறி விடாமல் தடுக்க இன்னொரு திட்டத்தை தினகரன் கையில் எடுத்தார். அதன்படி சட்டப் பேரவை தொகுதி வாரியாக அமமுக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். அதன்படி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தக் கூட்டங்கள் தோல்விக்கான உண்மையான காரணங்களை ஆராயவும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது பற்றி விவாதிக்கவும் என்று கூறப்படுகின்றன.

ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் இந்த கூட்டங்களில் பங்கேற்கவில்லை. ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி கூட்டத்திற்கு வராமல் தவிர்த்துள்ளனர்.
இன்னும் சிலர் நேரடியாகவே தினகரனிடம், “நாம் 10 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. நமது உதவியின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று சொன்னீர்கள். ஆனால் 10 பேர்தான் டெபாசிட் தொகையை தக்க வைத்தனர். தேர்தலுக்கு முன்பு எவ்வளவு செலவு செய்தாலும் அதைக் கொடுத்து விடுகிறேன் என்றீர்கள். ஆனால் ஒரு காசு வரவில்லை.

ஊராட்சி, நகராட்சி தேர்தலில் ஆளும் கட்சியையும் எதிர்க்கட்சியையும் சமாளிப்பதே சிரமம். இதில் நாம் சுயேச்சைகளுடன் போட்டியிட்டு தோற்க வேண்டுமா?… உங்களை நம்பி அரசியலுக்கு வந்தோம். கடைசியில் கேலிப் பொருளாகி விட்டோம்” என்று கொந்தளித்துள்ளனர்.

அவர்களை தினகரன் சமாதானப்படுத்தி இருக்கிறார். ஆனால் யாரும் அமைதி அடைந்ததாக தெரியவில்லை.

அதை உண்மை என்று நிரூபிப்பது போல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் சீட் கிடைக்காத கோபத்தில் அமமுகவுக்கு தாவிய முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மனுக்கு சாத்தூர் தொகுதியில் போட்டியிட தினகரன் வாய்ப்பளித்தார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை.
அதிமுகவில் இருந்து, தான் வெளியேறியது தவறு என்பதை உணர்ந்த ராஜவர்மன் இரு தினங்களுக்கு முன்பு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதேபோல் சோளிங்கர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பார்த்திபன் திமுகவில் சேர்வதற்காக நூல் விட்டுக் கொண்டிருக்கிறார். “நான் அமமுகவில்தான் இருக்கிறேன். வேறு எங்கும் போகமாட்டேன்” என்று கூறினாலும் அவரும் கட்சியில் நீடிப்பாரா என்பது சந்தேகம்தான்! இதுபோல் முக்கிய விக்கெட்டுகள் தொடர்ந்து காலியாகிக் கொண்டே வருவதால் கடைசியில் தினகரன் மட்டுமே எஞ்சி இருப்பார் போல் தெரிகிறது.

எடுபடாத ஐடியாக்கள்

அதேநேரம், இப்படியெல்லாம் நடக்கும் என்பதை ஓரளவுக்கு ஏற்கனவே அனுமானித்திருந்த தினகரன், அடுத்து சசிகலா மூலமே தனக்கு அரசியல் வாழ்வு என்ற முடிவுக்கு வந்து விட்டார்.
தனது செல்போன் திட்டம் தவிடு பொடியானதால் அடுத்து சசிகலாவை, தொலைக்காட்சிப் பேட்டிகளுக்கு தயார் படுத்தி வருகிறார்.

அண்மையில் ஒரு செய்தி சேனல் அவரைப் பேட்டி கண்டது. அவருடைய 2 மணி நேர பேட்டிக்காக தொடர்ந்து 2 நாட்களை அந்த சேனல் செலவிட்டிருக்கிறது. பேச்சு கோர்வையாக வராததால் பேட்டி கண்டவர் நொந்து போயுள்ளார். அந்தப் பேட்டி ஒரு மலரும் நினைவுகளாக மட்டுமே இருந்தது. யாரிடமும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதையறிந்த சசிகலா அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.

Sasikala Admit- Updatenews360

தினகரன் என்னதான் அவரை மாபெரும் தியாகியாக, தலைவராக சித்தரிக்க முயன்றாலும் அது தோல்வியிலேயே முடிகிறது என்று அரசியல் நோக்கர்கள் சிலர் கூறுகின்றனர்.

உண்மையான அரசியல்வாதியா..?

இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறும்போது, “சசிகலா ஒரு புகைப்பட கலைஞராக அதில் தனது தனித் திறமையை வெளிக்காட்டி இருக்கலாம். ஆனால் அரசியல் என்பது வேறு. அது தானாக வரவேண்டும். ஆனால் தினகரன் அவரை இயக்குவதால் சசிகலாவால் எதையும் சுயமாக சிந்திக்க இயலவில்லை என்பதே உண்மை. அது முடியாத காரியமும் கூட.

ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட்டு சொல்லவேண்டும். கடந்த 2 மாதங்களாக தனது ஆதரவாளர்களுடன் தினமும் செல்போனில் பேசும் சசிகலா, தமிழக மக்களின் பிரச்சினை பற்றி எப்போதாவது சிந்தித்து இருப்பாரா, என்பது கேள்விக்குறியே!

அவர், உண்மையிலேயே ஒரு அரசியல்வாதியாக இருந்திருந்தால் தமிழகத்தில் கொரோனா உச்சத்தில் இருந்தபோது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் கொத்துக் கொத்தாக செத்து விழுந்தது பற்றி பொங்கியெழுந்து குரல் கொடுத்து இருப்பார்.

7 பேர் விடுதலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி கருத்து தெரிவித்தும் இருப்பார். நீட் தேர்வு பிரச்சனை, மத்திய அரசை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒன்றிய அரசு என அழைப்பது, ஜெய்ஹிந்த் நீக்கம், மேகதாது விவகாரம் போன்றவை தொடர்பாக அறிக்கைகள் வெளியிட்டும் இருப்பார்.

sasikala 2- updatenews360

ஆனால், இதையெல்லாம் அவர் செய்யவே இல்லை. மாறாக, அதிமுகவை கைப்பற்றினால் எதிர்காலத்தில் தனக்கும், தினகரனுக்கும் எந்த விதத்தில் அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்கிற ஒரே நோக்கத்தில்தான் அவருடைய சிந்தனைகளும், செயல்பாடுகளும் உள்ளன. அரசியல் பற்றிய புரிதல் இல்லாதவர்களுக்கு கூட இந்த உண்மை நன்கு புரியும்.

எனவே மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் பிரச்சினைகளில் அரசுக்கு எதிராக குரல் கொடுக்காத சசிகலாவை அதிமுக தொண்டர்கள் எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அதிமுகவை மீட்டெடுத்த பிறகுதான் இதுபற்றி எல்லாம் பேசுவேன் என்று சொன்னால் சசிகலா அரசியலுக்கே லாயக்கற்றவர் என்றே அர்த்தம்.

திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வேண்டுமென்றால் அவருடைய பேச்சுக்கள், பேட்டிகள் சுவாரசியம் தருவதாக இருக்கலாம். ஒருவேளை, திமுக அரசுக்கு எதிராக சசிகலா பேச ஆரம்பித்து விட்டால் அவரைப் பற்றிய செய்தியை திமுக ஆதரவு ஊடகங்கள் வெளியிடவே செய்யாது” என்று குறிப்பிட்டனர்.

Views: - 248

0

0