காகிதப்பூ மாலையா…? மக்களுக்கு பயன்தரும்‌ வாசமலரா…? தமிழக பட்ஜெட் குறித்த டிடிவி தினகரன் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
13 August 2021, 7:34 pm
TTV dinakaran 01 updatenews360
Quick Share

சென்னை : 2021-22ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பெட்ரோல்‌ – டீசல்‌ மீதான வரியைக்‌ குறைத்து, லிட்டருக்கு ரூ.5 விலையைக்‌ குறைப்போம்‌ என்று சொன்னவர்கள்‌ இப்போது பட்ஜெட்டில்‌ பெட்ரோலுக்கு மட்டும்‌ ரூ.3 குறைத்திருத்திருக்கிறார்கள்‌. இது ஆறுதலளித்தாலும்‌, விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமான டீசல்‌ விலையைக்‌ குறைக்கும்‌ வகையில்‌ அதன்‌ மீதான வரியையும்‌ தமிழக அரசு குறைக்க வேண்டியது அவசியம்‌.

வரி வருவாயில்‌ சீர்திருத்தங்களை மேற்கொள்ளப்போவதாக நிதியமைச்சர்‌ கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும்‌ சீர்திருத்தத்தை எப்படி செயல்படுத்தப்‌ போகிறார்கள்‌ என்பதற்கான செயல்‌ திட்டம்‌ தமிழக பட்ஜெட்டில்‌ இல்லை. அதனால்‌ ஏழை, எளிய, நடுத்தர மக்கள்‌ எவ்வித பாதிப்புக்கும்‌ ஆளாகாமல்‌ பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது.

தேர்தல்‌ நேரத்தில்‌ அனைத்து இல்லத்தரசிகளுக்கும்‌ மாதந்தோறும்‌ ரூ.1,000/- நிதியுதவி, கூட்டுறவு வங்கிகளில்‌ வாங்கிய நகைக்கடன்‌ ரத்து என்று வாய்க்கு வந்தபடி அடித்துவிட்டவர்கள்‌, தற்போது அதனை செயல்படுத்தாமல்‌ இழுத்தடிப்பதற்கான வழிகளைத்‌ தேடுவதைப்‌ போன்று தெரிகிறது. இது, தி.மு.க தனது வழக்கப்படி தமிழக மக்களை பட்டவர்த்தனமாக ஏமாற்ற நினைக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதைப்போன்றே கல்விக்கடன்‌ ரத்து, சமையல்‌ எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100/- மானியம் போன்றவற்றுக்கான அறிவிப்புகளும்‌ பட்ஜெட்டில்‌ இடம்பெறவில்லை.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தைச்‌ செயல்படுத்தப்போவதாக தி.மு.க அரசு அறிவித்திருப்பதைப்‌ பார்க்கும்‌ போது, அவர்கள்‌ இதற்கு முன்‌ ‘ரொம்பவும்‌ சிறப்பாக’ செயல்படுத்திய சிங்கார சென்னை மற்றும்‌ கூவம்‌ சீரமைப்புத்‌ திட்டங்கள்‌ நம்‌ நினைவுக்கு வருவதைத்‌ தவிர்க்க முடியவில்லை. 2.0 திட்டமும்‌ அப்படி ஆகிவிடக்கூடாது. மேலும்‌ அரசு ஊழியர்‌ ஓய்வூதிய வயது குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டத்தைச்‌ செயல்படுத்துதல்‌ போன்ற எதிர்பார்க்கப்பட்ட முக்கிய
அறிவிப்புகளும்‌ நிதிநிலை அறிக்கையில்‌ இடம்‌ பெறவில்லை. மொத்தத்தில்‌ அடுத்த 6 மாதங்களுக்கு மட்டுமான தி.மு.க அரசின்‌ காகிதமில்லா பட்ஜெட்‌, வெறும்‌ காகிதப்பூ மாலையா? அல்லது மக்களுக்கு பயன்தரும்‌ வாசமலரா? என்பதை பட்ஜெட்டில்‌ அறிவித்தவற்றை அவர்கள்‌ செயல்படுத்தும்‌ விதத்தைப்‌ பார்த்தே முடிவு செய்ய முடியும்‌, என அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 316

0

0