யார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…!!

12 June 2021, 5:59 pm
stalin - ttv dinakaran - updatenews360
Quick Share

சென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் டி.டி.வி.தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்த நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், டாஸ்மாக் கடைகளை திறப்பத்தில் தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன்..? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது பங்கிற்கும் சில கேள்விகளையும், விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ;- மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்காக என்று கூறி மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்துள்ள முதலமைச்சர், அதற்கு நேர்மாறாக நோய்தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதன் மூலம் முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய அரசுக்கும் மக்களின் உயிரைப் பற்றி துளியும் அக்கறை இல்லை என்பதும், ‘யார் எப்படி போனாலும் தங்கள் கஜானா நிரம்பினால் போதும்’ என்று நடந்து கொள்வதும் மிகமோசமான செயல்பாடாகும்.

ஒரு பக்கம் நிவாரணத் தொகை கொடுப்பது போல் கொடுத்து, அதனை டாஸ்மாக் வழியாக பிடுங்கிக் கொள்ளும் தந்திரத்தையே, இவர்களும் பின்பற்றுவது பெரும் அவலமாகும். எனவே, கொரோனா நோய் தொற்றும் மையங்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ள டாஸ்மாக் கடைகளை திறக்கும் அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Views: - 255

2

1