தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : இன்று நேரில் ஆஜராவாரா ரஜினிகாந்த்..?

19 January 2021, 8:20 am
Rajini Villian - Updatenews360
Quick Share

சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் முன்பு நடிகர் ரஜினிகாந்தின் இன்று ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக உண்மை நிலை அறிய, விசாரணைக்கு குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதனடிப்படையில், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் விசாரணையை நடத்தி வருகிறது.

இதனிடையே, இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், பிறகு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “வன்முறையின் போது வாகனங்களை தீ வைத்து கொளுத்தியதும், போலீசாரை தாக்கியதும் சமூக விரோதிகள் தான். போராடும் மக்கள் அல்ல. அந்த சமூக விரோதிகள் யார் என்று எனக்கு தெரியும்,” எனக் கூறினார்.

இதையடுத்து, தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக விசாரிக்க ரஜினிக்கு விசாரணை ஆணையம் அப்போதே சம்மன் அனுப்பியது. இந்த நிலையில், 2வது முறையாக ரஜினியிடம் விசாரணை நடத்த முடி செய்த அருணா ஜெகதீசன் ஆணையம், ஜனவரி 19ம் தேதி ஆஜராக வேண்டும் என டிசம்பர் மாதமே சம்மன் அனுப்பியிருந்தது. ரஜினியும் இந்த சம்மனை பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், அவர் இன்று நேரில் ஆஜர் ஆவாரா? அல்லது வக்கீல் மூலம் அபிடவிட் தாக்கல் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Views: - 0

0

0