மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் திருப்பம் : விசாரணை வளையத்தில் சிக்கிய கோவை விடுதி உரிமையாளருக்கு சம்மன்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2022, 2:12 pm
Mangalore Blast - Updatenws360
Quick Share

கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த முகமது ஷாரிக் என்பவன் கர்நாடகாவில் பயங்கரவாத தாக்குதலை அரங்கேற்ற திட்டமிட்டு இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக என்.ஐ.ஏ. மற்றும் மங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஷாரிக் கோவை வந்து விடுதியில் தங்கி புதிய சிம்கார்டு வாங்கியதுடன், பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மங்களூரு போலீசார் கோவைக்கு வந்தனர். ஷாரிக் தங்கிய விடுதிக்கு கோவை மாநகர போலீசாருடன் சென்ற மங்களூரு போலீசார் விடுதி முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அங்கு இருந்த மேலாளர் மற்றும் பணியாளர்களிடம் ஷாரிக் குறித்து விசாரித்தனர். அவரை யாராவது சந்திக்க இங்கு வந்தனரா? அவரின் நடவடிக்கைகள் எப்படி இருந்தன? என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் ஷாரிக் செல்போன் தொடர்பில் கோவை நபர்கள் சிலர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அது தொடர்பாகவும் விசாரித்தனர். விடுதியையொட்டி இருந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி சென்றனர்.

இந்த நிலையில் மங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரிப்பதற்காக கோவையில் ஷாரிக் தங்கிய விடுதி உரிமையாளர் காமராஜூக்கு மங்களூரு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் சம்மன் கிடைத்ததில் இருந்து 3 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும்.

விசாரணையின் போது உங்களுக்கு தெரிந்த உண்மைகளை தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. சம்மன் கிடைத்ததை தொடர்ந்து விடுதி உரிமையாளர் காமராஜ் மங்களூரில் உள்ள போலீஸ் நிலையத்தில் நாளை விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

அப்போது அவரிடம் ஷாரிக் குறித்தும், விடுதியில் அவர் தங்கி இருந்த போது எந்த மனநிலையில் இருந்தார்? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்த உள்ளனர். ஏற்கனவே ஷாரிக்கிற்கு சிம்கார்டு வாங்கி கொடுத்ததாக ஊட்டியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியரான சுரேந்திரனிடம் மங்களூரு போலீசார் 2 நாட்கள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷாரிக்கின் செல்போன் எண்களை ஆய்வு செய்ததில் அவர் நாகர்கோவிலை சேர்ந்த பெண், இளைஞர் ஆகியோருடன் அவர் பேசியதாக தெரிந்தது. இதையடுத்து மங்களூரு போலீசார் நாகர்கோவிலுக்கு வந்து இளைஞர் மற்றும் பெண்ணிடம் விசாரித்தனர். இருவர் கூறியதும் உண்மை என்பது தெரியவந்ததால் வாலிபர் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மங்களூரு போலீசார் மீண்டும் நேற்று நாகர்கோவில் வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.என்.ஹரிபிரசாத்துடன் ஆலோசனை நடத்தினர். ஷாரிக் நாகர்கோவிலுக்கு வந்தது ஏன்? இங்கு சதி செயலில் ஈடுபட்டத் திட்டமிட்டாரா, எங்கு தங்கினார் என மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் விசாரணையும், ஆய்வும் மேற்கொண்டனர்.

முகமது ஷாரிக் மதுரையில் தங்கியது தொடர்பாகவும் நேற்றுமுன்தினம் கர்நாடக தனிப்படை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஷாரிக் மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள ஓட்டலில் தங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மதுரை நேதாஜிரோடு, டவுன்ஹால்ரோடு, கட்ராபாளையம் பகுதிகளில் உள்ள விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

ஷாரிக் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகே 2 நாட்கள் தங்கி இருந்ததால் அவன் எந்த நோக்கத்துக்காக மதுரைக்கு வந்தான்? மதுரையில் எந்த இடங்களுக்கு எல்லாம் சென்றான்? யாரை எல்லாம் சந்தித்தான் என்பது குறித்து 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.

Views: - 195

0

0