பகலில் காங்., நிர்வாகி….இரவில் வழிப்பறி கொள்ளையன்: 2 பேர் கைது…கோவையில் பரபரப்பு..!!

Author: Aarthi Sivakumar
24 October 2021, 1:50 pm
Quick Share

கோவை: கோவையில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் உட்பட இருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் குணியமுத்தூர் எம்.எஸ்.கார்டன் பகுதியில் கடந்த 21ம் தேதி மளிகைகடை ஒன்றிற்கு வாலிபர் ஒருவர் சிகரெட் வாங்குவது போல் வந்தார். மேலும், அந்த கடையில் இருந்த தனலட்சுமி என்பவரிடம் சிகரெட் கேட்டுள்ளார்.

அப்போது, தனலட்சுமி அசந்த நேரத்தில் அவரது கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு ஓடியுள்ளார். பின்னர் கடைக்கு வெளியே, பைக்கில் தயாரக நின்றிருந்த தனது நண்பருடன் கண் இமைக்கும் நேரத்தில் மாயமானார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கோவை கோவை குணியமுத்தூர் போலிசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கோவை கரும்புக்கடையை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து விசாரித்ததில் செயின்பறிப்பு சம்பவத்தின்போது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது.

மேலும் அவனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் பைசல் ரஹ்மான் என்ற பைசலை போலீசார் கைது செய்தனர்.

மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளைஞர் அணி துணை தலைவர் ரஹ்மான் கோவை குணியமுத்தூர், அபர்னா, பி.கே.புதூர், இடையர்பாளையம் உட்பட ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடர்ந்து குனியமுத்தூர் போலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி துணைதலைவராக இருக்கும் பைசல் ரஹ்மான் என்பவர் ஒரு சங்கிலிபறிப்பு கொள்ளையன் என்பது கோவை மக்களை கதிகலங்க செய்துள்ளது.

மேலும் பைசல்ரஹ்மான் காங்கிஸ் கட்சியின் மாநில தலைவர் இளங்கோவன், மற்றும் திமுக மாநகர பொறுப்பாளர் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 516

0

0