அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்..? துறை மற்றும் பதவியேற்பு நாள் கூட பிளான் பண்ணியாச்சு…? திமுக தேர்தல் வெற்றியின் ஓராண்டு நிறைவு நாளில் வெளியான முக்கிய தகவல்..!!

Author: Babu Lakshmanan
2 May 2022, 5:16 pm
Quick Share

சென்னை : திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராக பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதன்மூலம், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்தது. மேலும், கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, திமுகவுக்கு கிடைத்த முதல் சட்டப்பேரவை தேர்தல் வெற்றி இதுவாகும்.

PM Modi, Rahul Gandhi, Kejriwal congratulate MK Stalin on DMK's victory |  The News Minute

இந்தத் தேர்தலில் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நடந்து முடிந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று சரியாக இன்றோட ஓராண்டு நிறைவடைகிறது. இந்த நிலையில், திமுக தொண்டர்களை குஷிப்படுத்தும் விதமாக, முக்கிய தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.

அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடமளிக்க வேண்டும் என்று அன்பில் மகேஷ், மூர்த்தி உள்ளிட்ட பல அமைச்சர்கள் வலியுறுத்தி வந்த கோரிக்கைதான் தற்போது நிறைவேறப் போவதாக சொல்லப்படுகிறது.

திமுக இளைஞரணி செயலாளரும்‌, திருவல்லிக்கேணி- சேப்பாக்கம்‌ தொகுதி எம்‌எல்‌ஏவுமான ‌ உதயநிதி ஸ்டாலின்‌, முன்னாள்‌ முதலமைச்சரும், தனது தாத்தாவுமான கருணாநிதியின்‌ பிறந்த நாளையொட்டி வரும்‌ ஜூன்‌ மாதம்‌ முதல்‌ வாரத்தில்‌ அமைச்சராகப்‌ பதவியேற்கவுள்ளதாக தகவல்கள்‌ வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக, கட்சியின் சீனியர் நிர்வாகிகளான துரைமுருகன்‌, டி.ஆர்‌. பாலு, ஆர்‌.எஸ்‌. பாரதி உள்ளிட்டோருடன்‌ முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ ஆலோசனை நடத்திவிட்டதாகவும்,‌ அவர்களும்‌ இந்த முடிவுக்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாகவே, உதயநிதியின் காரில், அமைச்சர் என்னும் பெயர்ப்பலகையை பொருத்துவதற்கான கிளாம்ப் மாட்டப்பட்டிருந்தது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

முதலில் கேஎன் நேருவிடம் இருக்கும் உள்ளாட்சி துறையை உதயநிதிக்கு வழங்கப்படலாம் என்று தகவல் கசிந்து வந்த நிலையில், தற்போது சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் மெய்யநாதனிடம் உள்ள விளையாட்டு மேம்பாட்டுத் துறையை வழங்க முடிவு செய்துள்ளதாக அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியாகும் தகவலில் தெரிய வந்துள்ளது. இளைஞர்களை கவருவதற்காகவே, விளையாட்டுத்துறையை ஒதுக்கீடு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

Son's rise continues in DMK: Udhayanidhi Stalin to contest from Chepauk -  The Week

முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சரவையில், முதல்முறையாக எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்ட 4 பேர் அமைச்சர்களாக இருப்பதால், உதயநிதியை அமைச்சராக்குவதில் எந்தவிமர்சனங்களும் வராது என்பது திமுக மூத்த தலைவர்களின் கணக்காகும். ஒருவேளை விமர்சனங்கள் வந்தால் கூட அதனை சமாளித்து விடலாம் என்று நம்பிக்கையில் உள்ளனர்.

கடந்த ஆண்டு மே 2ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியது. அதில், திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், திமுக வெற்றி பெற்று ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், உதயநிதியின் ஆதரவாளர்களுக்கு அண்ணா அறிவாலயம் நல்ல செய்தியை சொல்லியிருப்பதை கொண்டாடி வருகின்றனர்.

Views: - 1073

0

0