மீண்டும் கனிமொழியுடன் மோதும் உதயநிதி : தென்மண்டல பொறுப்பாளராக கனிமொழியை நியமிக்க ஸ்டாலின் குடும்பம் எதிர்ப்பு

2 November 2020, 7:40 pm
Kanimozhi - udhayanidhi - updatenews360
Quick Share

சென்னை: திமுகவின் தென் மண்டல பொறுப்பாளராக கட்சியின் மகளிர் அணித்தலைவியும், எம்.பி.யுமான கனிமொழிக்குத் தருவதை கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி கடுமையாக எதிர்ப்பதால் மூத்த திமுக தலைவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். தென் மாவட்டங்களுக்குத் தொடர்பில்லாத முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை அந்த மண்டலத்தின் பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என்று உதயநிதி வரிந்துகட்டுவதால் தென்மண்டல திமுக நிர்வாகிகளும் உள்ளுக்குள் குமுறிவருகிறார்கள்.

திமுகவின் அடுத்த தலைவராக உதயநிதியை வளர்க்க ஸ்டாலின் முயற்சி செய்வதால் கட்சியின் போஸ்டர்களிலும், கட்-அவுட்களிலும் ஸ்டாலினுக்கு இணையாக அவருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அவர் கை காட்டுபவர்களுக்கே கட்சியில் முக்கிய பதவிகள் தரப்படுகின்றன. உதயநிதிக்கு கட்சியில் தரும் முக்கியத்துவம் மூத்த தலைவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. நீண்ட காலமாகக் கட்சியில் இருக்கும் தொண்டர்கள் ஒவ்வொரு தேர்தலிலும்உழைத்துக் கொண்டிருக்க அரசியலில் நுழைந்தவுடன் இளைஞர் அணித் தலைவராகிவிட்ட உதயநிதியை உடன்பிறப்புகளும் வெறுக்கின்றனர். பொதுமக்களும் உதயநிதியை திமுக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை கடும் எரிச்சலுடன் பார்க்கிறார்கள்.

udhayanidhi - updatenews360

திருச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் பெரியார், அண்ணாவை விட உதயநிதிக்கு திமுக முக்கியத்துவம் அளித்தது திமுகவின் மூத்த தொண்டர்களுக்கும், திராவிட அரசியல் சிந்தனையாளர்களுக்கும் அதிர்ச்சியை அளித்தது. பெரும்பாலான திராவிட அரசியல் சிந்தனையாளர்களும் திமுகவை ஆதரிக்கும் நிலைப்பாடு எடுத்துள்ளதால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் மௌனம் காத்தனர்.

தொடர்ந்து உதயநிதிக்கு முக்கியத்துவம் தருவதற்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாலும், 2021 தேர்தலில் உதயநிதியால் திமுக தோற்கும் என்று ஐ-பேக் கூறியதாலும், தற்போது அவருக்கு முக்கியத்துவம் சற்று குறைக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் ஆதரவைப்பெற கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் கூறுவதால், அவருக்கு கட்சியின் நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க தமிழ்நாட்டை நான்கு மண்டலங்களாகப் பிரித்து பொறுப்பாளர்களை நியமிக்க திமுகவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

kanimozi - udhayanidhi - updatenews360

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி இருப்பதால் அவரை தென்மண்டலப் பொறுப்பாளராக நியமிக்கலாம் என்று தென் மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் விருப்பம் தெரிவித்தனர். இதற்கு, உதயநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முன்னர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகன் அழகிரியைத் தென்மண்டல செயலாளராக நியமித்தபோது, அவருக்கென்று தனியாக ஒரு அணி கழகத்தில் உருவாகியது. ஸ்டாலினுக்குப் போட்டியாக அவர் திமுகவில் வளர்ந்து வந்தார். அவரை ஓரங்கட்ட ஸ்டாலின் கடுமையாகப் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இப்போது, கனிமொழிக்கு தென் மண்டல பொறுப்பாளர் பதவி தருவதால் உதயநிதிக்குப் போட்டியாக அவரும் வளர்ந்து விடுவார் என்று ஸ்டாலினின் குடும்பத்தாரும், உதயநிதியும் கருதுகிறார்கள். ஏற்கனவே, கட்சியின் பொருளாளர் பதவி கனிமொழிக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. கனிமொழியின் ஆதரவாளர் ஆ.ராசா, பொருளாளர் பதவிக்குப் போட்டியிடலாம் என்ற நிலையும் இருந்தது.

Kanimozhi - updatenews360

ஆனால், இறுதியில் பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலுவைத் தவிர வேறு யாரும் களத்தில் இல்லை என்ற நிலை உருவாகியது. கனிமொழியின் ஆதரவாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, தான் பொருளாளர் பதவிக்குப் போட்டியிடவில்லை என்று வெளிப்படையாக அறிவிக்கும் நிலையும் ஏற்பட்டது. கனிமொழி பொருளாளராகலாம் என்ற அவரது ஆதரவாளர்களின் நம்பிக்கையும் பொய்த்துப்போனது.

அதன் பின்னணியில் ஸ்டாலினின் குடும்பம் இருந்ததாக கட்சித் தொண்டர்களிடையே பேச்சு எழுந்தது. பொருளாளர் பதவியில் கனிமொழியோ, அவரது ஆதரவாளர்களோ அமர்வது எதிர்காலத்தில் உதயநிதியின் வளர்ச்சிக்குப் பாதகமாக அமையும் என்ற கருத்து, உதயநிதியின் ஆதரவாளர்களிடமிருந்து வெளிப்பட்டதே கனிமொழிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் தடையாக அமைந்தது என திமுக மகளிர் அணி நிர்வாகிகள் கருதினர்.

EV Velu - updatenews360

தற்போது, மீண்டும் அதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. அழகிரியின் இடத்தில் கனிமொழியைக் கொண்டு வருவது பிடிக்காமல் வேலுவை முன்னிறுத்துவதாகக் கூறப்படுகிறது. வேலு திருவணணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். தென் மாவட்டங்களுக்கு சற்றும் தொடர்பில்லாதவர் என்பதால், அவரை ஏற்க அந்த மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும், கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் க.பொன்முடியும் வேலுவின் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்.

தென் மாவட்டங்கள் தொடர்ந்து அதிமுகவின் கோட்டையாக விளங்குகிறது. இப்போது, உதயநிதியின் குடும்ப அரசியலால் வரும் சட்டப்பேரவைத்தேர்தலிலும் கட்சி தோல்வி அடையும் நிலை ஏற்படும் என்று மூத்த தலைவர்களும் நிர்வாகிகளும் உதயநிதி மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

Views: - 44

0

0

1 thought on “மீண்டும் கனிமொழியுடன் மோதும் உதயநிதி : தென்மண்டல பொறுப்பாளராக கனிமொழியை நியமிக்க ஸ்டாலின் குடும்பம் எதிர்ப்பு

Comments are closed.