மதிக்காத உதயநிதி..! உள்ளுக்குள் புலம்பும் சீனியர்ஸ்…! திமுகவின் திரைமறைவு அரசியல்
12 August 2020, 10:30 amசென்னை: திமுகவில் உதயநிதியின் படு ஸ்பீடான நடவடிக்கை ஒரு பக்கம் பாராட்டப்பட்டாலும், யாரையும் மதிக்காமல் தான் தோன்றித்தனமாக செயல்படுவதாக கட்சி சீனியர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
எது வேண்டுமானாலும் மாறும்… திமுகவையும், குடும்ப அரசியலையும் மாற்றவே முடியாது என்பது அரசியல் பாலபாடம் தெரிந்த அனைவரும் அறிந்த ரகசியம். முதலில் கருணாநிதி, பிறகு ஸ்டாலின், இப்போது உதயநிதி என்று கட்சியின் முகம் மாறி வருகிறது.
தமிழகத்தில் இன்னமும் கொரோனா அரசியலின் வேகம் குறையவில்லை. கொரோனாவை தடுக்க தமிழக அரசானது, அசுர வேகத்தில் இருந்தாலும் அதை குறை சொல்வதிலேயே திமுகவின் பொழுது போகிறது. அரசின் நடவடிக்கைகளில் குற்றம் கண்டுபிடித்து அறிக்கை விடுவதில் தான் இன்னமும் இருக்கிறார் ஸ்டாலின் என்று சீனியர்கள் தனியாக பேசி வருகின்றனர்.
இந்த பேச்சுகள் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு மக்கம், உதயநிதியை கண்டு பொருமுகிறார்கள் இதே சீனியர்ஸ். காரணம்… எதை பற்றியும் கண்டு கொள்ளாமல் தான் தோன்றித்தனமாக இஷ்டம் போல களத்தில் இறங்கி செயல்படுவது.
இது கருணாநிதி காலத்து அரசியல் சீனியர்களுக்கு கடும் கடுகடுப்பை ஏற்படுத்தி வருகிறதாம். அவர்கள் கூறுவது இதுதான்… எந்த விஷயமாக இருந்தாலும் தனிப்பட்ட அரசியல் கருத்தை சொல்ல மாட்டாராம் கருணாநிதி. எப்பேர்ப்பட்ட விவகாரமாக இருந்தாலும், அதில் தனக்கு மட்டுமே அதிகாரம் இருக்கக்கூடிய விஷயமாக இருந்தாலும் கட்சியினரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்பார்.
ஆனால்… இங்கே நிலைமை தலைகீழ். தானே முடிவெடுத்து, தானே செயல்படுத்துகிறார் உதயநிதி. கட்சியின் சீனியர்கள் என்ற அடிப்படையில் ஒரு வார்த்தை கூட கலந்து பேசுவதில்லையாம். இது அதிரடி என்று உதயநிதி தரப்பு வாதிட்டாலும்.. இருக்கட்டும், அதற்காக சீனியர்களிடம் கலந்து பேச வேண்டாமா என்று குமுறுகின்றனராம்.
இளைஞரணி நிர்வாகிகளை தமது அருகில் வைத்துக் கொண்டு அனைத்து காரியங்களையும் செயல்படுத்தி வருகிறாராம். தமது தொகுதியில் ஏதேனும் பிரச்னை என்றால் அதுபற்றி கேட்காமல் அவரே இளைஞரணி நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு போய் களத்தில் காய் நகர்த்துகிறாராம்.
இதனால், களத்தில் இதுநாள் வரை இருந்த சீனியர்ஸ் படு அப்செட்டில் உள்ளனராம். துரைமுருகன், எவ வேலு, கேஎன் நேரு, திருச்சி சிவா உள்ளிட்ட பல சீனியர்களை கண்டுகொள்வதே கிடையாதாம்.
அதை எல்லாம் ஒரு பக்கம் புலம்பி தள்ளும் சீனியர்ஸ், ஸ்டாலின் முகத்துக்காக உதயநிதியை பாராட்டி சும்மா பேருக்காக கருத்து கூறுகிறார்களாம். இது இந்த தலைமுறை அரசியல் என்றாலும்… சீனியர்களின் அனுபவம் என்பதே வேறு.. அதை யாராவது உதயநிதிக்கு எடுத்து சொல்லுங்களேன் என்று ஜாடை, மாடையாக பேசி வருகின்றனராம்…!