கல்லூரி, பல்கலை.,களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது யுஜிசி!!

6 November 2020, 6:33 pm
UGC-UPDATENEWS360
Quick Share

டெல்லி : கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை திறக்க மத்திய அரசு அனுமதியளித்த நிலையில், கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதேவேளையில், தளர்வுகளையும் மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அந்த வகையில், பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை 50 சதவீத மாணவர்களுடன் திறக்க மத்திய அரசு அனுமதியளித்தது.

இந்த நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. மத்திய பல்கலை.,கள் உள்பட மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களை திறக்க, அந்தந்த நிறுவன துணைவேந்தர்கள் மற்றும் தலைவர்களே முடிவு செய்யலாம். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு அனுமதியில்லை.

இறுதியாண்டு பயிலும் மாணவர்களை வேலைவாய்ப்பு முகாம்கள், நேரடி பயிற்சி மையங்களில் பங்கேற்க அனுமதிக்கலாம். விசா பிரச்சனைகளால் சிக்கி தவிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்காக தனித்திட்டத்தை கல்வி நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும்.

கொரோனா அறிகுறி இருப்பவர்களை கல்லூரி மற்றும் விடுதி வளாகங்களில் அனுமதிக்கக் கூடாது. கல்லூரிக்கு வரும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஆரோக்யா சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள், அறிவியல் தொழில்நுட்ப படிப்புகளின் முதுகலை மாணவர்களை கல்லூரிக்கு வரவழைத்துக் கொள்ளலாம். புதிய வழிகாட்டுதலின்படி, வீட்டில் தங்கி ஆன்லைனிலும், மாணவர்கள் விரும்பினால் வகுப்புகளில் கலந்து கொண்டும் படிக்கலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 27

0

0