குறைக்கப்படாத பெட்ரோல், டீசல் விலை : திமுக அரசு தயங்குவது ஏன்? எகிறும் கடனால் தள்ளாட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan7 November 2021, 2:19 pm
மத்திய பாஜக அரசு கடந்த 3-ம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும் அதிரடியாக குறைத்து கிடுகிடு விலை உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
வாட் வரியை குறைத்த மாநிலங்கள்
இதைத்தொடர்ந்து அனைத்து மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்கும்படி வேண்டுகோளும் விடுத்தது. மாநில அரசுகள் வாட் வரியை குறைத்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 10 ரூபாயும், டீசல் விலை அதிகபட்சமாக 15 ரூபாயும் குறைந்து மக்களுக்கு நேரடி பணப்பயன் கிடைக்கும் என்று கருதி இக்கோரிக்கையை வைத்தது.
இதைத்தொடர்ந்து பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் 21 மாநிலங்கள் பெட்ரோல் டீசல், மீதான வாட் வரியை குறைத்தன. அதனால் அந்த மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 95 ரூபாய்க்கு உள்ளாகவும், டீசல் விலை 90 ரூபாய்க்கு கீழாகவும் சரிந்தது.
வாட் வரியை குறைப்பு : வாய் திறக்காத மாநிலங்கள்
இதில் வேதனையானதொரு விஷயம் என்னவென்றால், கடந்த 6 மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் தீவிர போராட்டங்களை முன்னெடுத்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, தேசியவாத காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஒய் எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள் விலைக்குறைப்பு பற்றி இதுவரை மூச்சே காட்டவில்லை.
தமிழக அமைச்சருக்கு கிளம்பிய எதிர்ப்பு
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை 4 ரூபாயும் குறைப்பதாக திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் 3 மாதங்களில் விலை குறிப்பு பற்றி எதுவும் கூறவில்லை. இதனால், திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு பற்றி கூறி இருந்ததே?… என்று செய்தியாளர்கள் நிதியமைச்சர் தியாகராஜனிடம் கேள்வி எழுப்பியபோது, “நாங்க தேதி ஏதும் போட்டோமா?..என்று எதிர்கேள்வி எழுப்பி அதிர்ச்சியடைய வைத்தார்.
இதனால் அமைச்சரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமைச்சர் சொல்வதைப் பார்த்தால் வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் நான்கரை வருடங்கள் வரை இருக்கிறது. விலை உயரும் நேரத்தில் குறைக்காமல் நீண்ட காலம் கழித்து குறைத்தால் அதனால் யாருக்கும் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.
லிட்டருக்கு ரூ.3 குறைத்த தமிழகம்
இந்த நிலையில்தான் திமுக அரசு பதவியேற்ற 99-வது நாளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசும்போது நிதியமைச்சர் அறிவித்தார். ஆனால் டீசல் விலை குறைப்பு பற்றி எதுவும் கூறப்படவில்லை.
அப்போது, நிதியமைச்சர், “ஏழை, எளிய உழைக்கும் வர்க்க மக்கள் பெட்ரோல் விலையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பெட்ரோல், விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ.3 அளவுக்கு குறைக்கப்படும். பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து வரி குறைப்பு செய்யப்படுகிறது. பெட்ரோல் வரி குறைப்பால் அரசுக்கு 1,160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்” என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில்தான் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்த பிறகு தமிழகத்தில் திமுக அரசு இன்னும் குறைக்காமல் மௌனம் சாதிக்கிறதே, ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுகவின் கூட்டணிக் கட்சிகளான விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இது தொடர்பாக கோரிக்கையும் விடுத்துள்ளன. அந்தக் கட்சிகள் விரைவில் தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்து அறிவிக்கும் என்று உறுதியாக நம்புகின்றன.
விலையை குறைத்தால் நிதிச்சுமை அதிகரிக்கும்
ஆனால் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பது தமிழக அரசுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்று கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது. பக்கத்து மாநிலமான புதுச்சேரி அளவிற்கு வாட் வரியை தமிழக அரசு குறைக்காவிட்டாலும் பிரதமர் மோடி அறிவித்த அளவிற்கு குறைப்பதும் கூட கடினமான காரியம் என்று கூறப்படுகிறது.
மத்திய பாஜக அரசு பெட்ரோல் டீசல், விலை இரண்டையும் சேர்த்து மொத்தமாக 15 ரூபாய் குறைப்பு செய்திருக்கிறது. திமுக அரசு ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் மீது 3 ரூபாய் வரி குறைப்பு செய்துள்ளது. இந்த கணக்கின்படி பார்த்தால் எஞ்சிய 12 ரூபாயை குறைக்க வேண்டிய கட்டாயம், நிர்பந்தம் திமுக அரசுக்கு உள்ளது.
ஏற்கனவே 3 ரூபாய் குறைத்தபோது தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 1160 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று நிதியமைச்சர் தியாகராஜன் கூறியிருந்தார்.
திணறும் தமிழக அரசு
அப்படியென்றால் மேலும் 12 ரூபாயை குறைக்க நேர்ந்தால் 4,640 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். ஒட்டுமொத்தமாக பார்த்தால் சுமார் 6,000 கோடி ரூபாய் வரை ஆண்டுக்கு பெட்ரோல் டீசல் மூலம் கிடைக்கும் வருமானத்தை இழக்கவும் நேரிடும். இதனால்தான் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக அறிவித்து 4 நாட்களாகியும் தமிழக அரசு எந்த முடிவையும் எடுக்காமல் திணறி வருகிறது, என்பது வெளிப்படை.
இது தொடர்பாக மாநில நிதியமைச்சகத்தின் முன்னாள் உயர் அதிகாரிகள் வேறு காரணங்களையும் கூறுகின்றனர். “திமுக அரசு பதவியேற்றபோது மாநிலத்தின் மொத்த கடன் சுமை 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் என்று தெரிவித்தது. ஆனால் கடந்த 6 மாதங்களில் மட்டும் 42 ஆயிரம் ரூபாய் கோடியை கடனாக வாங்கியிருப்பதாக தெரிகிறது. இதன்படி பார்த்தால் ஒட்டு மொத்த கடன் சுமை 6 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகிறது.
தமிழக அரசை கண்டித்த அண்ணாமலை
மாநிலத்தில் வரி வருவாய் குறைவாக உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை இன்னும் குறைத்தால் கடன் வாங்குவது அதிகரிக்கும். திமுக அரசு தொடர்ந்து அதிக கடனை வாங்கி குவிப்பது குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, அண்மையில் வெளியிட்ட அதிர்ச்சித் தகவலும் இதன் பின்னணியில் கூறப்பட்டதுதான்.
இப்படி தொடர்ந்து திமுக அரசு கடன் வாங்கிக் கொண்டே போனால் விரைவில் கடன் வாங்குவதற்குரிய உச்சவரம்பை தாண்டிப் போய்விடும். அதன் பிறகு எங்கு கேட்டாலும் கடன் கிடைக்காமல் போகும் என்று அவர் எச்சரித்து இருப்பதும் இதனடிப்படையில்தான்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர், மின் கட்டணம், சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை உயர்த்தினால் மட்டுமே தமிழக அரசு கடன் சுமையில் இருந்து ஓரளவு மீள முடியும். ஆனால் கடந்த காலங்களில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அதிமுக அரசின் இந்த வரி விதிப்பை மிகக் கடுமையாக எதிர்த்து போராட்டங்களையும் நடத்தியது.
இதுபோன்ற நெருக்கடியான சூழலில் பெட்ரோல், டீசல் விலையை திமுக அரசு குறைக்குமா? என்பது கேள்விக்குறிதான்.
மக்களுக்கு ஏமாற்றம் அளித்த திமுக
அதேநேரம் இதுவரை மத்திய பாஜக அரசை குற்றம்சாட்டி வந்த திமுக தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காமல் போனால் அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகும். மக்களின் அதிருப்தியை சம்பாதிக்கவும் நேரிடலாம்.
ஏனென்றால் விலைவாசி உயர்வுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது பெட்ரோல், டீசல் விலையும்தான். அதனால் குறைக்காவிட்டால் மக்களுக்கு பெருத்த ஏமாற்றம்தான் ஏற்படும்.
சென்னை நகரில் 4 இடங்களில் 2500 கோடி ரூபாய் மதிப்பில் பூங்காக்கள் அமைப்பது என்பன போன்ற பணத்தை விரயம் செய்யும் பல திட்டங்கள் தேவையற்ற ஒன்று. இந்தத் தொகையை பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு திமுக அரசு பயன்படுத்தலாம்” என்று அவர்கள் யோசனை தெரிவித்தனர்.
0
0