எதிர்த்துப் போட்டியிடுவதா…?திமுக மீது பாயும் விசிக..! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலால் கூட்டணியில் வெடித்த மோதல்..!!

Author: Babu Lakshmanan
10 February 2022, 2:41 pm
Stalin - thiruma - updatenews360
Quick Share

19-ம் தேதி நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக கூட்டணி கட்சிகளிடையே நேரடி முட்டல் மோதல் ஏற்பட்டுள்ளது.

துணிந்த கூட்டணி கட்சிகள்

தமிழகத்தைப் பொறுத்தவரை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் ஆதரவு தேவை என்ற நிலையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஒதுக்கிய வார்டுகளை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுவிட்டது. எனினும் திமுக நிர்வாகிகள் வார்டுகளை ஒதுக்குவதில் முரண்டு பிடித்ததால் சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் திமுகவுக்கு எதிராக பல வார்டுகளில் தங்களது அதிகாரப் பூர்வ வேட்பாளர்களை காங்கிரஸ்
நிறுத்தி இருக்கிறது.

Nellai KS Alagiri Byte - updatenews360

இதேபோல் தஞ்சாவூர் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் எதிர்பார்த்த வார்டுகள் ஒதுக்கப்படவில்லை என்பதால் அக் கட்சியினரும் திமுக மாவட்ட செயலாளர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

விசிகவுக்கு நெருக்கடி

மதுரை, கரூர் தேர்தலில் திமுகவால் அதன் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான விசிகவும் பெரும் நெருக்கடியை சந்தித்து உள்ளது.

2022 சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுக தலைமையிடம் பிடிகொடுக்காமல் 6 தொகுதிகளை கறாராக கேட்டு வாங்கியதுடன், துணிந்து தனிச் சின்னத்தில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றியும் பெற வைத்தார்.

Thirumavalavan - stalin - updatenews360

அதன்பிறகு கடந்த அக்டோபர் மாதம் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட விசிக தனது தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல் ஒன்றியக்குழு தலைவர் பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றியும் கண்டது.

அதுமட்டுமின்றி கடந்த 9 மாதங்களில், பல்வேறு விஷயங்களில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை விசிக எடுத்தது, அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசிகவின் இந்த மோதல் போக்குதான், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சியை பெருத்த சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதனால் தேர்தலில் சிறுத்தைகளை அநியாயத்துக்கு திமுக புறக்கணித்துவிட்டதாக அக் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள்
கொந்தளிக்கின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது. ஆனால் சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பு வரையில் இருந்த நெருக்கம், ஆட்சி அமைந்து சில காலமான பின்பு கொஞ்சம் கொஞ்சமாக விலகி தற்போது பெரும் சிக்கலில் போய் நிற்கிறது என்கிறார்கள்.

அவமானப்படுத்திய திமுக

அதிலும் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகளை திமுக பெரிதும் புறக்கணித்துவிட்டதாகவும், வார்டு ஒதுக்கீடு விஷயத்தில் ரொம்பவே அலட்சியப்படுத்தி விட்டதாகவும் சிறுத்தைகள் சீறத் தொடங்கியுள்ளனர்.

“பிரசாரத்துக்கும் அழைப்பதில்லை, தாங்களே போய் நின்றாலும் கண்டுகொள்வதில்லை” என்றும் அவர்கள் கொதிக்கிறார்கள். தங்களுக்குள் மட்டுமில்லாமல் வெளிப்படையாகவே இதை பேசத் தொடங்கியும் விட்டனர்.

விடுதலைச் சிறுத்தைகளின் மாநில இளைஞரணி துணைத்தலைவரான மாலின் இந்த விவகாரத்தை தற்போது அம்பலப்படுத்தி இருக்கிறார். “ மதுரை மாநகராட்சி தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசப் போன என்னை திமுக நிர்வாகிகள் கண்டுகொள்ளவே இல்லை. கொஞ்சமும் மதிக்கவில்லை. மதுரையில் நாங்கள் எங்கெல்லாம் பலமாக இருக்கிறோம் என்னும் வார்டுகளின் பட்டியலை கொடுத்தும், அதில் ஒன்றை கூட தராமல், எங்களுக்கு வாய்ப்பில்லாத வார்டை ஒப்புக்கு ஒதுக்கியுள்ளனர். அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் சாதிப் பாகுபாடு காட்டி அவமானத்திவிட்டனர். என்னை சந்திக்க கூட அவர்களுக்கு மனமில்லை, நேரமும் ஒதுக்கவில்லை” என்று மனம் குமுறியுள்ளார்.

விசிகவை எதிர்த்து போட்டி

கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இங்கு திமுகவும், அதிமுகவும் நேரடியாக 41 வார்டுகளில் மோதுகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 3 வார்டுகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, சிபிஎம், மதிமுக, விசிகவுக்கு தலா 1 வார்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகளுக்கு கரூர் மாநகராட்சியின் 11-வது வார்டை பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒதுக்கினர். இந்த வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளரும், வக்கீலுமான ஜெயராமன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அதே 11-வது வார்டில் திமுக வேட்பாளராக பழனிக்குமார் என்பவர் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கியுள்ளார்.

விசிக, திமுக வேட்பாளர்கள் தங்களின் மனுவை வாபஸ் பெறாத நிலையில், மாநகராட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள இறுதி வேட்பாளர் பட்டியலில் இருவருடைய பெயரும் இடம்பெற்று உள்ளது.

ஒரே வார்டு, ஒரே கூட்டணி, ஆனால் இரண்டு வேட்பாளர்கள் என புது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். திமுக 11-வது வார்டு பகுதிக்கு விருப்பமனு அளித்து அங்கு திமுக கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்ட பழனிகுமார் அந்த பகுதி மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். அதேபோல் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் அதே வார்டு ஒதுக்கப்பட்டு அங்கு ஜெயராமன் போட்டியிடுகிறார்.

தவிர திமுக கூட்டணி சார்பில் போட்டியிடுவதாக அறிவித்து விசிக வேட்பாளர் ஜெயராமன் தனது வார்டு முழுக்க போஸ்டர்களும் அச்சிட்டு ஒட்டியுள்ளார்.

இந்நிலையில் அண்மையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் பழனிகுமார் உள்பட திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் விசிக வேட்பாளர் ஜெயராமன் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.

இதைத்தொடர்ந்து விசிக நிர்வாகிகள் பலர் “தன்மானம் இல்லாத இடத்தில் ஏன் இருக்க வேண்டும். வெளியேறுவோம்! ஸ்டாலின் சரிதான். ஆனால் அவருக்கு கீழே இருக்கும் அத்தனை பேரும் நம்மை அவமானப்படுத்துகிறார்கள். திமுக இன்று ஆளுங்கட்சியாக இருப்பதற்கு நாமும்தானே காரணம். அதை மறந்து நம்மை சாதி ரீதியாக அசிங்கப்படுத்துவோரை விட்டு வெளியேறுவோம். தலைவா சீக்கிரம் நல்ல முடிவெடுங்கள் ” என்று திருமாவளவனை நோக்கி போர்க் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

வெற்றியைப் பொறுத்தே மவுசு

இதுபற்றி அரசியல் ஆர்வலர்கள் கூறும்போது, “எதிர்பார்த்த வார்டுகள் கிடைக்காத காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சி நிர்வாகிகள் திமுகவுக்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெறுவது கடினம், அது தங்களின் எதிர்கால அரசியலுக்கும் ஏற்றதாக இருக்காது. திமுகவை பகைத்துக்கொண்டு போட்டியிட்டால் அது அதிமுக, பாஜக கட்சிகளுக்கு சாதகமாகி விடும் என்பது தெரிந்து அமைதியாக ஒதுங்கிவிட்டார்கள்.

குறிப்பாக தமிழக காங்கிரஸ் இத்தகைய மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏனென்றால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முழுக்க முழுக்க திமுகவை சார்ந்தே இருக்க வேண்டிய நிலை காங்கிரசுக்கு உள்ளது. அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்திலும் கேரளாவிலும் போட்டியிட மாட்டார் என்று கூறப்படுகிறது. அதனால் அவர் தமிழகத்தில் திருச்சி, கன்னியாகுமரி, கரூர் ஆகிய தொகுதிகள் ஏதாவது ஒன்றில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகும்கூட தமிழக காங்கிரஸ் அமைதியே காக்கும். திமுகவுக்கு எதிராக அடக்கித்தான் வசிக்கும். எனினும் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் குறைந்த வார்டுகள் ஒதுக்கப்பட்ட விஷயத்தில் மனம் புழுக்கம் அடைந்த நிலையில் உள்ளன.

இதில் துணிச்சலான கருத்தை பதிவு செய்து இருப்பது திருமாவளனின் விசிகதான். கடந்த நான்காண்டுகளில் மாநிலம் முழுவதும் தங்கள் கட்சி நல்ல வளர்ச்சி கண்டிருப்பதாக அக் கட்சி நிர்வாகிகள் நம்புகின்றனர்.

அதனால்தான், திமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தங்களை அவமதிப்பதாக பகிரங்கமாக பேசவும் செய்கிறார்கள். இதன்மூலம் 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஆகியவற்றில் திமுக கூட்டணியில் இப்போதே தங்களது இடத்திற்கு அஸ்திவாரம் போடுகிறார்கள். இதுபோல பல இடங்களில் மோதல் நடப்பது வாக்காளர்களிடையே குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும்.

என்றபோதிலும், திமுகவுக்கு எதிராக தனித்துப் போட்டியிடும் நகர்ப்புற உள்ளாட்சி வார்டுகளில் விசிக வெற்றி பெறுவதை பொறுத்தே திமுக கூட்டணியில் அக்கட்சிக்கு எதிர்காலத்தில் மவுசு இருக்கும்” என்று அந்த அரசியல் ஆர்வலர்கள் ஆருடம் கூறுகின்றனர்.

Views: - 1470

0

0