அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் இன்று பதவியேற்பு : வரலாறு காணாத அளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்..!!

20 January 2021, 8:20 am
harris_biden - updatenews360
Quick Share

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் இன்று பொறுப்பேற்கின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன்மூலம், அமெரிக்காவின் 46வது அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டார். நவம்பர் மாதம் நடக்கும் தேர்தலில் வெற்றி பெற்றவர், ஜனவரி 20ம் தேதி பதவியேற்பது அந்நாட்டின் சட்டமாக உள்ளது.

அந்த வகையில், அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸும் இன்று பதவி ஏற்கின்றனர். கடந்த 6ம் தேதி நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த வன்முறையால், வழக்கத்திற்கு மாறாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜோ பைடன் பதவியேற்பு விழாவின்போது டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளதால், தலைநகர் வாஷிங்டனில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக வாஷிங்டன் முழுவதும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அமெரிக்க மக்கள் பதவியேற்பு விழாவை காண தலைநகருக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என ஜோ பைடனின் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். வழக்கமாக 2 லட்சம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது 1,000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஜோ பைடனும் கமலா ஹாரிசும் பதவி ஏற்றுக் கொள்கின்றனர். அதிபர் ஜோ பைடனுக்கு அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸும், துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு உச்சநீதிமன்ற பெண் நீதிபதி சோனியா சோட்டோமேயரும் பதவி பிரமாணம் செய்து வைக்கின்றனர். அதன்பின்னர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் குடி புகுவார்.

Views: - 10

0

0