சினிமா வாரிசை எதிர்க்கும் அரசியல் வாரிசு? வாரிசு பட சிக்கலுக்கு காரணம் உதயநிதியா? முன்னாள் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2022, 10:14 pm
Vaarisu - Updatenews360
Quick Share

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வாரிசு. தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கியிருக்கும் இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமாரின் துணிவு படமும் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. இதனால் இரண்டு படங்களுக்கும் இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பும் போட்டியும் உருவாகியுள்ளது. தமிழகத்தில் துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது.

வாரிசு படத்தை 7ஸ்கீரின் ஸ்டுடியோ நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. இதில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால், துணிவு படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கும் சூழல் உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெய்ண்ட் மூவீஸ் வெளியிடும் படம் என்பதால் தியேட்டர் உரிமையாளர்களும் துணிவு படத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனால், நடிகர் விஜய்யின் வாரிசு படத்துக்கு தமிழகத்திலேயே போதுமான தியேட்டர்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது.

இந்த நேரத்தில் தெலுங்கு தயாரிப்பாளர்களும் வாரிசு படத்தை பொங்கலுக்கு ஆந்திராவில் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பண்டிகை காலத்தில் தங்கள் படங்களை மட்டுமே வெளியிட வேண்டும் என முடிவு செய்திருப்பதாக அவர்கள் தெரிவித்திருப்பது தமிழ் சினிமா உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இயக்குநர் பேரரசு, லிங்குசாமி உள்ளிட்டோர் தெலுங்கு தயாரிப்பாளர்கள் முடிவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்த முடிவை வாபஸ் பெறாவிட்டால் பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், வாரிசு படத்துக்கான சர்ச்சை குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாவதில் ஏற்பட்டிருக்கும் சிக்கலுக்கு உதயநிதி ஸ்டாலினே காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

ரெட்ஜெயண்ட் சார்பில் வெளியாகும் துணிவு படத்துக்கு அதிக தியேட்டர்கள் மற்றும் அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தெலுங்கு தயாரிப்பாளர்களை அவர் மறைமுகமாக தூண்டிவிட்டு ரிலீஸூக்கு சிக்கலை உருவாக்கியிருப்பதாக கூறியுள்ளார்.

தெலுங்கில் வாரிசு ரிலீஸாகவில்லை என்றால் தமிழிலும் ரிலீஸ் செய்யமாட்டார்கள் என்பதற்காக இந்த பிரச்சனையை உதயநிதி ஸ்டாலின் ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Views: - 321

0

0