பாஜகவை கண்டு நடுநடுங்கும் வைகோ :எதிர்க்கட்சிகளுக்கு திடீர் அட்வைஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2023, 9:48 pm
BJP vs Vaiko - Updatenews360
Quick Share

தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கீழ் அக் கட்சி வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது யாருக்கு அதிர்ச்சியாக இருக்கிறதோ, இல்லையோ திமுகவுக்கும் அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகளுக்கு உண்மையிலேயே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

அண்ணாமலை மீது திமுக விமர்சனம்

அதனால்தான் சமீபகாலமாக திமுகவின் மூத்த அமைச்சர்கள், தலைவர்கள், நிர்வாகிகள், ஐடி பிரிவினர் என அத்தனை பேரும் வரிந்து கட்டிக்கொண்டு, அண்ணாமலையை மிக கடுமையாக விமர்சிப்பதை காணவும் முடிகிறது.

அவர்களில் சிலர் வலிய சென்று அவரை கலாய்ப்பதும் சர்வ சாதாரணமாகிவிட்டது.
இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சித் தலைவர்களும் தங்கள் பங்கிற்கு அண்ணாமலையை தாக்கி பேசுவது அதிகரித்து வருகிறது.

அதிலும் குறிப்பாக, கடந்த சில வாரங்களாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் போன்றோர் அண்ணாமலை எந்த கருத்தை ஊடகங்களில் முன் வைத்தாலும், அதற்கு உடனடியாக கடும் கண்டனம் தெரிவிப்பதை வழக்கமாக்கி கொண்டிருப்பதும் வெளிப்படையாகவே தெரிகிறது.

பாஜக மீது வைகோ பாய்ச்சல்

இவர்களின் வரிசையில் தற்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் முனைப்புடன் இணைந்து கொண்டுள்ளார். இதற்கு முன்பு வரை மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை மட்டுமே விமர்சித்து வந்த அவர் தற்போது மாநில பாஜக மீதும் தாக்குதல் நடத்த தொடங்கி இருக்கிறார்.

ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி வைகோ செய்தியாளர்களை சந்தித்தபோது, இதில் அவர் கொண்டுள்ள அச்சம் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்தது.

எதிர்க்கட்சிகள் கைக்கோர்க்குமா?

அப்போது அவரிடம், தேசிய அளவில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில், எதிர்க்கட்சிகளிடம் பலமான ஒற்றுமை இல்லாதது ஏன்?… என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு வைகோ “இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்தால்தான் பாஜகவை வீழ்த்த முடியும். பாஜக வலுவாகத்தான் இருக்கிறது. எம்பிக்கள் எண்ணிக்கை அளவில் வலுவாக இருக்கும் அவர்கள், மீண்டும் அதே அளவு எண்ணிக்கையைப் பெறுவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இப்போது பல கட்சிகளும் பிரிந்து கிடக்கின்றன. பாஜக அல்லாத மற்ற கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால்தான், பாஜகவை வீழ்த்தும் ஒரு நிலையை ஏற்படுத்த முடியும்” என்று குறிப்பிட்டார்.

பாஜகவுக்கு எதிராக தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ள நிலையில் இது சாத்தியம் தானா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் “அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்று சொல்ல முடியாது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் அவர்களைத் தோற்கடிக்க முடியும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருமே இப்போது சொல்ல ஆரம்பித்துவிட்டனர். எனவே அதற்கான வாய்ப்பு ஏற்படலாம். ராகுல் காந்தியின் நடை பயணத்துக்கு நல்ல தாக்கம் இருக்கிறது. எல்லா இடங்களிலும் மக்களின் வரவேற்பு இருக்கிறது” என்று வைகோ தெரிவித்தார்.

பாஜக மீது வைகோவுக்கு அச்சம்?

அடுத்ததாக செய்தியாளர்கள், மாநில பாஜக குறித்து எழுப்பிய கேள்விதான், அவர் எந்த அளவிற்கு அண்ணாமலையை கண்டு அஞ்சுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, “நாளிதழ்களும் ஊடகங்களும்தான் இதை பெரிதுபடுத்துகின்றன. அவர்கள் வளர்ந்த அளவைவிட, பலமடங்கு ஏடுகளும் ஊடகங்களும் பிரம்மாண்டமான தோற்றத்தைக் காட்டுகின்றன. ஒவ்வொரு ஊரிலும் சென்று பணத்தைக் கொட்டுகின்றனர். கொடிக்கம்பம் நட்டால் இவ்வளவு பணம் கொடுக்கிறோம் என்று பணத்தைக் கொட்டி அவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவின் வளர்ச்சிக்கு அதிமுக காரணம் என்று சொல்லமுடியாது. அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையின் காரணமாக அவர்களுக்குள்ளே பிளவுப்பட்டு போராடிக் கொண்டிருக்கின்றனர்” என்று
பதில் அளித்தார்.

“இதில் வைகோ அண்ணாமலையின் பெயரை நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் கூட, தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகுதான் மாநிலத்தில் பாஜக வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்”என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அண்ணாமலை பார்த்து அரண்டு போகும் கட்சிகள்

“ஏனென்றால் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழக நாளிதழ்களிலும், காட்சி ஊடகங்களிலும் மாநில பாஜக பற்றிய செய்திகளை அவ்வளவாக பார்க்க முடியாது. தேர்தல் நேரத்தில் மட்டும் ஓரளவு செய்திகள் வெளியாகும். அல்லது அக்கட்சியின் தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரும் போது அது பற்றிய செய்திகளை சுருக்கமாக வெளியிடுவதுதான் அவற்றின் வழக்கம்.

ஆனால் அண்ணாமலை தமிழகத்தின் பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, அவர் காட்டும் அதிரடி அரசியலால் தினமும் பரபரப்பாக செய்திகள் வெளியாகின்றன.
அவற்றை என்னதான் மறைத்தாலும் உடனுக்குடன் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் போய் சேர்ந்தும் விடுகிறது. இதனால் திமுக மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளும் அரண்டு போயிருக்கின்றன என்றே கூற வேண்டும்.

குறிப்பாக மாநிலத்தை ஆளும் திமுக அரசின் மீது அண்ணாமலை வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விஷயங்கள் அலசி ஆராயப்பட்டு விவாதிக்கக் கூடிய நிலையையும் ஏற்படுத்திவிடுகிறது.

அண்ணாமலை எதிராக பிரச்சாரம்

இதனால் எந்த ஒரு ஊடகமும் அண்ணாமலை பற்றிய செய்திகளை வெளியிடாமல் மறைக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. நேர்மறையாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி அதை வெளியிட்டே ஆக வேண்டிய கட்டாய நிலைக்கு ஊடகங்கள் தள்ளப்பட்டும் விட்டன.

இதனால், முன்பு ஐபிஎஸ் அதிகாரியாக 10 ஆண்டுகள் பணியாற்றியபோது அவர் ஏதாவது தவறு செய்திருப்பாரா? அதை வைத்து அவரை முடக்கி விடலாம் என்று சில கட்சிகளும் அதன் முக்கிய நிர்வாகிகளும் எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால் அது பலிக்கவில்லை. அவருடைய நேர்மையில் எந்தவொரு குற்றத்தையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்து அண்ணாமலையின் தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டி துருவிப் பார்த்தனர். அதிலும் அவர்களுக்கு தோல்வியே கிடைத்தது.

இப்படி அவருக்கு எதிராக ஒரு நெகடிவ் பிரச்சாரத்தை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து கட்டமைக்க முயற்சிப்பதால் அதுவே அண்ணாமலைக்கு நல்லதொரு விளம்பரமாகவும் அமைந்துவிட்டது.

இளைஞர்களை கவரும் அண்ணாமலை

குறிப்பாக இது 18 முதல் 35 வயது கொண்ட இளைய தலைமுறையினர் இடையே ஒரு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அது அண்ணாமலையின் பொதுக்கூட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் எதிரொலிப்பதை காணவும் முடிகிறது. மிகக் குறுகிய காலத்திலேயே தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் தலைவராகவும் அவர் உருவாகி விட்டார்.

இதை இன்றுவரை திமுக கூட்டணி கட்சிகள் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை. மூன்று, நான்கு சதவீத ஓட்டு மட்டுமே கொண்ட ஒரு கட்சி அப்படி என்ன பெரிதாக சாதித்து விடப் போகிறது? என்று நினைத்து தமிழக பாஜகவை திமுகவினரும், அதன் கூட்டணி கட்சி தலைவர்களும் கடுமையாக விமர்சிப்பது தொடர்கிறது.

அண்ணாமலை மீது தொடரும் தாக்குதல்

அதுவும் திமுக அரசின் 13 அமைச்சர்களின் இரண்டு லட்சம் கோடி ரூபாய் பினாமி சொத்துகளை ஆதாரங்களுடன் ஏப்ரல் மாதம் வெளியிடுவேன் என்று அண்ணாமலை அறிவித்த பிறகு அவர் மீதான தாக்குதல் முன்பை விட அதிகரித்துள்ளது.

அதனால்தான் வைகோ போன்றவர்கள் பாஜகவினர் ஒவ்வொரு ஊரிலும் சென்று பணத்தைக் கொட்டுகின்றனர். கொடிக்கம்பம் நட்டால் இவ்வளவு பணம் கொடுக்கிறோம் என்று பணத்தைக் கொட்டி அவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர் என்று புலம்புகிறார்கள். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இன்று பணத்தைக் கொட்டிக் கொடுத்தால் கூட மதிமுகவின் கொடிக்கம்பத்தை ஒரு ஊரிலும் நடுவதற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை.
ஏனென்றால் அவருடைய கட்சியே திமுகவுடன் இணைந்து விட்டதுபோல்தான் பேசப்படுகிறது.

கிராமத்தில் ஒரு கட்சியின் கொடிக்கம்பத்தை நடுகிறார்கள் என்றாலே அந்த ஊரில் அக்கட்சிக்கு என்று குறைந்தபட்சம் 10 பேராவது இருப்பார்கள். அதுதான் ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பாகவும் அமையும்.

மகனுக்காக வைகோ கூவல்

அதுபோல கட்சியை வளர்த்துத்தான் தமிழகத்தில் 1967-ல் திமுக ஆட்சியை பிடித்தது என்பதும் டெல்லி, பஞ்சாபில் காங்கிரசை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியதும் 55 ஆண்டு காலமாக அரசியல் உள்ள வைகோவிற்கு தெரியாமல் போனதுதான் ஆச்சரியம்.

ஒருவேளை தனது மகன் துரை வையாபுரிக்கு எம்பி தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் சீட் கிடைத்து தோற்றுவிட்டால் என்ன ஆகுமோ என்ற பதைபதைப்பு கூட அவர் இப்படி கூறி இருப்பதற்கு காரணமாக இருக்குமோ? என்ற சந்தேகமும் எழுகிறது.

தமிழகத்தில் பாஜக வளர்ந்து இருப்பதால்தான் நாங்கள் தேர்தலில் தனித்துப் போட்டியிட தயாராக இருக்கிறோம். அதேபோல திமுக தயாராக இருக்கிறதா? என்பதை ஸ்டாலின் கூற முடியுமா? என்று அண்ணாமலை அதிரடியாக சவால் விடுத்தும் இருக்கிறார்.

தேசிய அரசியலைப் பொறுத்தவரை பாஜகவை வீழ்த்துவது கடினமான காரியம் என்பதையும் வைகோ ஒப்புக் கொண்டிருக்கிறார். அதேநேரம் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இதை நடத்திக் காட்ட முடியும் என்றும் கூறுகிறார்.

பாஜகவை எதிர்க்க முடியுமா?

இதற்கு எதிரெதிர் துருவங்களாக உள்ள மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி போன்ற கட்சிகள் தேர்தலில் மிகப்பெரிய தியாகங்களை செய்ய வேண்டி இருக்கும். இதனால் எதிர்காலத்தில் அந்தக் கட்சிகள் தங்களது செல்வாக்கை முழுமையாக இழந்து விடவும் கூடும். எனவே வைகோ கூறுவது போல அத்தனை எதிர்க்கட்சிகளும் தேசிய அளவில் ஒருங்கிணைந்து பாஜகவை எதிர்க்குமா? என்பதை கணிக்க முடியாது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவர்களின் கருத்தும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகத்தான் உள்ளது.

Views: - 302

0

0