வைகோ மகன் திமுகவுக்கு திடீர் எதிர்ப்பு…? தமிழக அரசியலில் புதிய சூறாவளி!!

Author: Babu Lakshmanan
3 August 2021, 7:19 pm
Vaiko - updatenews360
Quick Share

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் ஒரே மகன் துரை வையாபுரி. அவரை தீவிர அரசியலுக்கு கொண்டுவர மதிமுகவின் இரண்டாம் நிலை தலைவர்கள் விரும்புகிறார்கள்.
இதற்கு காரணம், 77 வயது வைகோவின் உடல் நிலைதான்.

25 வருடங்களுக்கு முன்பு வைகோவிடம் இருந்த சுறுசுறுப்பில் இப்போது நான்கில் ஒரு பங்கு கூட இல்லை. மருத்துவர்களின் அறிவுரையை தொடர்ந்து அவர் சுற்றுப்பயண அரசியலை குறைத்துக்கொண்டு விட்டார்.

இதனால்தான் அவருடைய மகன் துரை வையாபுரி, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தென்மாவட்டங்களில் தீவிர பிரச்சாரமும் மேற்கொண்டார். அப்போது அரசியல் மீதான பார்வை குறித்து, மனம் விட்டு அவர் பேசினார்.

அப்பாவிற்காக வந்துள்ளேன்

கடந்த மார்ச் கடைசி வாரத்தில் துரை வையாபுரி செய்தியாளர்களை சந்தித்தபோது,
“அப்பாவை பொறுத்தவரை நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவர் ஒருபோதும் நினைத்ததில்லை. அதுபோல நானும் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பியதில்லை.

வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் அரசியலால் எங்கள் குடும்பம் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மதிமுகவில் சாதாரண தொண்டனாகவே இருக்கிறேன். பதவிகள் பொறுப்புகள் குறித்தெல்லாம் இப்போது சொல்வதற்கு எதுவும் இல்லை காலம்தான் பதில் சொல்ல வேண்டும். தற்கால அரசியல் என்பது பண பலத்தை சார்ந்திருக்கிறது. அதனால் இதில் எப்படி செயலாற்ற முடியும் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது” என்று குறிப்பிட்டு இருந்தார்.

என்றபோதிலும், அடுத்த வாரமே தனது நிலைப்பாட்டை துரை வையாபுரி சற்று மாற்றிக்கொண்டார். “பிடிக்காத அரசியலுக்கு அப்பாவிற்காக வந்துள்ளேன். ஆனால் பிடிக்காத ஒன்றையும் சிறப்பாக செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். அப்பாவிற்கு வயதாகிவிட்டது. ஆகவே அவருக்காக அரசியலுக்கு வந்துள்ளேன்”என்று தெரிவித்தார்.

செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் மதிமுகவின் முப்பெரும் விழாவில் துரை வையாபுரிக்கு மதிமுகவில் துணைச் செயலாளர் பதவி அல்லது மாநில இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதிமுகவின் முன்னணி தலைவர்கள் அவருக்கு கட்சியில் ஏதாவது முக்கிய பதவி கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்ததால் அதற்கு வைகோவும் கிரீன் சிக்னல் காட்டி விட்டார், என்கிறார்கள்.

திமுக ஆட்சியில் லஞ்சம்

இந்த நிலையில்தான் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் அண்மையில் மதிமுக சார்பில் நடத்தப்பட்ட திராவிட பயிற்சிப் பாசறையில் அவர் தெரிவித்த ஒரு கருத்து, தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பையும் உருவாக்கி உள்ளது.

Vaiko - stalin - updatenews360

அவர் பேசும்போது, “எந்த தனிப்பட்ட மொழிக்கும், திராவிடம் எதிரானது கிடையாது. நுனிப்புல் மேய்ந்து, திராவிடம் பற்றி விளக்கம் அளிப்பவர்கள் மக்களை குழப்பி வருகின்றனர். திராவிடம், மொழி ஆதிக்கத்திற்கு மட்டுமே எதிரானது.

நான், 35 வயதில் தொழில் செய்து கொண்டிருந்தபோது அரசு அலுவலகங்களில் லஞ்ச, லாவண்யம் தலைவிரித்து ஆடியது, என்னுடைய கோபத்தை கடுமையாக அதிகப்படுத்தியது. 45 வயதுக்கு மேல் குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு நக்சலைட் ஆகிவிடலாம் என்ற எண்ணமும் எனக்கு தோன்றியது” என்று கொந்தளித்தார்.

எம்பிஏ பட்டதாரியான துரை வையாபுரி, முன்பு ஐடிசி புகையிலை பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியில் தமிழகத்தின் பெரும் முகவர்களில் ஒருவராக இருந்தவர். தந்தை வைகோ, புகையிலை மதுவுக்கு எதிரானவர், ஆனால் மகனோ புகையிலை பழக்கத்தை ஊக்குவிக்கிறார் என்று பல கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அதன்பிறகு அத்தொழில் இருந்து விலகிக் கொண்டதாகக் கூறப்படும் அவர் தற்போது சென்னையில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

எனவே, அவர் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஏதாவது கடும் நெருக்கடிகளை அரசு அதிகாரிகள் மூலம் சந்தித்திருக்கவேண்டும். நிச்சயமாக அதற்காக அவர் லஞ்சம் கொடுக்கும் சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டு இருக்கலாம்.

ஆனால், லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடிய காலம் பற்றி அவர் குறிப்பிட்டு இருப்பதுதான் தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

துரை வையாபுரிக்கு தற்போது, 49 வயது ஆகிறது. அவரது, 35 வயதில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

karunanidhi - updatenews360

அதாவது, 2006 முதல் 2011 முடிய திமுக ஆட்சிதான் நடந்தது. வையாபுரி சொல்வதன்படி பார்த்தால் 1972-ல் பிறந்த அவர் தனது 35-வது வயதில் அரசு அலுவலங்களில் லஞ்ச லாவண்யம் விரித்தாடிய காலகட்டமாக கூறுவது 2007 ஆக இருக்க வாய்ப்பு உள்ளது.

இதைத்தான், திமுக கூட்டணியில் இருந்து கொண்டே, கருணாநிதியின் ஆட்சியை, துரை வையாபுரி தாக்கிப் பேசி இருப்பதாக திமுகவினர் கருதுகின்றனர். இது திமுக மூத்த தலைவர்களிடையே கடும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நக்சலைட் ஆவாரா ?

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவது எல்லா ஆட்சி காலத்திலுமே நடக்கிற சர்வ சாதாரண விஷயம் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அதற்காக துரை வையாபுரி பயன்படுத்திய வார்த்தைகள்தான் மிகவும் தடிப்பானவை. தலைசிறந்த நாடாளுமன்றவாதியாக திகழ்ந்தவர் வைகோ. அவருடைய மகனோ குடும்பத்தினரை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு நக்சலைட் ஆக வேண்டும் என்கிற எண்ணம் வந்தது என்று கூறுகிறார். இதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. அப்படியென்றால் அமைதிப் பூங்காவான தமிழகத்தில், ஆயுதங்களை கையில் எடுத்து யாருக்கு எதிராக அவர் போராடுவார்?… அரசாங்கத்துக்கு எதிராகவா?அரசு அதிகாரிகளுக்கு எதிராகவா? என்ற கேள்வியும் எழுகிறது.

இலங்கையில் தமிழீழம் அமைவதற்காக ஆயுதமேந்திப் போராடிய விடுதலைப்புலிகளை ஆதரித்த வைகோ கூட தமிழகத்தில் நக்சலைட்டுகள் உருவாகவேண்டும் எண்ணத்தில் ஒருபோதும் பேசியதில்லை.

துரை வையாபுரியின் கூற்றுப்படியே கூட பார்த்தால் அவர் 45 வயதைக் கடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. எனவே இனிமேல் அவர் நக்சலைட் ஆவாரா ?… என்ற கேள்வியும் எழுகிறது.

வைகோ மகனிடம், இப்படியொரு சிந்தனை வெளிப்பட்டு இருப்பது, மிகவும் துரதிஷ்டவசமானது.

இன்னும் ஒரு மாதத்தில் மதிமுகவில் அவருக்கு முக்கிய பதவி கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் துரை வையாபுரி இப்படி உணர்ச்சிப் பூர்வமாக கொந்தளித்து பேசுவது சரியல்ல. தனது 35-வது வயதில் அந்த எண்ணம் இருந்தது, இப்போது அப்படி இல்லை என்று கூறுவதையும் கூட ஏற்க முடியாது. ஏனென்றால், தான் ஒரு நக்சலைட் என மனதில் ஆழமாக பதிந்து விட்டால், அது எப்போதாவது, எங்கேயாவது வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.

Vaiko Son -Updatenews360

உண்மையிலேயே அவர் அரசு அலுவலகங்களில் அப்போது ஒரு பெரிய பிரச்சினையை எதிர்கொண்டிருந்தால் தனது தந்தைக்கு இருந்த அரசியல் செல்வாக்கை வைத்து, மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியிருக்கலாம். ஆனால் துரை வையாபுரி அப்படி செய்ததாக தெரியவில்லை.

அப்படியெனில் அப்போது அரசு அதிகாரிகளுக்கு அவர் லஞ்சம் கொடுத்து சரிக்கட்டி இருக்கிறார்,
தனது வேலையை முடித்துக் கொண்டுள்ளார் என்றும் கருதத் தோன்றுகிறது.

இப்போது, அவர் கொந்தளித்துப் பேசுகிறார். அவரைப் போன்ற இளம் தலைவர்கள் இப்படி நக்சலைட் எண்ணத்தில் பேசுவது, அநாகரீகத்தின் உச்சம்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 472

0

0