வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து… பாமகவின் கோரிக்கையும்… தமிழக அரசின் அடுத்த ஆக்சனும்..!!!
Author: Babu Lakshmanan1 November 2021, 12:50 pm
சென்னை : வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்தது ஏமாற்றம் அளிப்பதாக பாமக தெரிவித்துள்ளது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 % இடஒதுக்கீட்டை கடந்த அதிமுக அரசு வழங்கி சட்டம் இயற்றியது. தேர்தல் நேரத்தில் அரசியல் ஆதாயத்திற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டதாக் கூறி 30க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதி எம்.துரைச்சுவாமி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. கடந்த செப்.,15 முதல் வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனுக்களின் மீதான விசாரணை தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது. 22ம் தேதியுடன் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நவ.1ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
அதன்படி, தீர்ப்பு இன்று வெளியாகியது. அதில், வன்னியர்களுக்கான 10.5 % இடஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்தது.
இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா..? சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா..? முறையான அளவுசார் இல்லாமல் இடஒதுக்கீடு வழங்க முடியுமா..? உள்ளிட்ட 6 கேள்விகள் தமிழக அரசுக்கு எழுப்பப்பட்டதாகவும், ஆனால், அரசின் விளக்கம் போதிய திருப்தியில்லாததால், வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ததாக நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். மேலும், மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடந்து கொண்டிருப்பதால் தற்காலிகமாக தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். மேலும், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. மேல்முறையீடு செய்யும் வரை மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது, இடஒதுக்கீடு கொடுப்பதற்கு வரலாற்று காரணங்கள் உள்ளன. சாதிவாரியான கணகெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, வன்னியர் இடஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
0
0