விசிக-மதிமுக திடீர் மோதல்?…திண்டாட்டத்தில் திமுக, காங்கிரஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
7 March 2023, 8:17 pm
VCK MDMK - Updatenews360
Quick Share

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரமாக ஆதரித்தது யார்? என்கிற கேள்வி விவாத பொருளாக மாறும் போதெல்லாம் அது தமிழகத்தில் அரசியல் ரீதியாக பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி விடுவதை பார்க்க முடிகிறது.

பற்ற வைத்த பழ நெடுமாறன்

மூன்று வாரங்களுக்கு முன்பு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் அனல் பறந்து கொண்டிருந்த நேரத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் நிறுவனர் பழ நெடுமாறன், 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவத்துக்கு எதிராக நடந்த உச்சகட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்படவில்லை. அவர் இன்றும் உயிருடன்தான் இருக்கிறார். அவருடைய குடும்பத்தினர் என்னிடம் தெரிவித்ததன் அடிப்படையில் இதைக் கூறுகிறேன் என்று ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

இடைத்தேர்தல் நேரத்தில் இப்படியொரு சரவெடியை அவர் கொளுத்தி போட்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் விவாதங்களும் இறக்கை கட்டி பறந்தன.

அதிர வைத்த கேஎஸ் அழகிரி

இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொது செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல தலைவர்கள் உடனடியாக கருத்தும் தெரிவித்தனர். கே எஸ் அழகிரி மட்டும் பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சிதான். அவர் வந்தால் நான் நேரில் சந்திப்பேன். அதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லை என்று அதிரடி காட்டினார். இதனால் காங்கிரசார் அதிர்ந்து போயினர்.

ஏனென்றால் இந்தியாவில் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் திமுக அங்கம் வகித்தபோதும் தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சி நடைபெற்ற நேரத்திலும்தான் இலங்கையில் இந்த இறுதி கட்டப் போரே நடந்தது.

இலங்கைக்கு ரகசியமாக உதவிய இந்தியா

அப்போது இலங்கை அரசுக்கு தேவையான அத்தனை ராணுவ தளவாடங்களையும் இந்தியா ரகசியமாக கொடுத்து உதவியது என்றும் குற்றச்சாட்டு எழுந்ததால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ நெடுமாறன் கூறிய தகவல் பற்றி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ஏன் கருத்து தெரிவித்தார்? திமுக தலைவர்கள் போல அவரும் அமைதி காத்திருக்கலாமே என்ற கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளானார்.

நல்லவேளையாக இந்த விவகாரம் அடுத்த இரண்டே நாட்களில் அமுங்கி போனது. ஒருவேளை இது நீண்டு கொண்டே போயிருந்தால் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி ஈ வி கே எஸ் இளங்கோவனின் வெற்றி ஓட்டு வித்தியாசத்தை கணிசமாக குறைக்கவும் செய்திருக்கலாம்.

விசிக – மதிமுக மோதல்!!

இந்த நிலையில்தான், விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்பான விவகாரத்தில் திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மதிமுகவும் பகிரங்கமாக மோதிக் கொண்டுள்ளன. இது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாகவும் மாறி உள்ளது.

மிக அண்மையில் விசிக தலைவர் திருமாவளவன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் வைகோவை சீண்டும் விதமாக சில கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

திருமா போட்ட குண்டு

2002-ம் ஆண்டு போர் நிறுத்த காலத்தில் இலங்கையின் வடகிழக்கு மாகாணத்திற்கு சென்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை, திருமாவளவன் சந்தித்து பேசியபோது தமிழக தலைவர்களில் எம்ஜிஆரை மட்டுமே பிரபாகரன் முழுமையாக நம்பினார் என்றும் வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் போன்ற தலைவர்கள் மீது, தான் நம்பிக்கை இழந்து விட்டதாக பிரபாகரன் கூறியது போல அந்த நேர்காணலில் திருமாவளவன் கூறி இருந்தார்.

இந்த கருத்துதான் வைகோவின் மதிமுகவை மிகுந்த அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அக் கட்சியை கடுமையாக கொந்தளிக்க வைத்தும் உள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எரிச்சலுக்கு உள்ளானார் என்றும் கூறப்படுகிறது.

மதிமுக வெளியிட்ட அறிக்கை

இதைக் கண்டிக்கும் விதமாக மதிமுக துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் உடனடியாக நீண்டதொரு அறிக்கையும் வெளியிட்டார். அதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் வைகோ 25 ஆண்டுகளாக கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய போராட்டங்கள், செய்த தியாகங்களை பட்டியலிட்டும் உள்ளார்.

குறிப்பாக, அந்த அறிக்கையில், “திருமா இந்த நேர்காணலில் ஈழப்பிரச்சினை குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகுந்த மன வேதனையையும் கொந்தளிப்பையும் எங்கள் இயக்கத் தோழர்களுக்கு மட்டுமின்றி தமிழ் உணர்வாளர்களுக்கும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி 1981ம் ஆண்டிலிருந்து வீரமுழக்கமிட்டு வருபவர் தலைவர் வைகோ.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வ குடி மக்கள் என இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை நாடாளுமன்றத்தில் சொல்ல வைத்தவர்; இந்திய – இலங்கை ஒப்பந்தம் போடப்பட்ட போது அதைக் கடுமையாக எதிர்த்தார். இந்திய அமைதிப்படை ஈழத்தமிழர்களை வேட்டையாடிய போது நாடாளுமன்றத்தில் எரிமலையாக வெடித்தவர்தான் வைகோ.

எனவே பொத்தம் பொதுவாக தமிழ்நாட்டு தலைவர்கள் ஈழத்தமிழர் பிரச்சனையில் அரசியல் செய்தார்கள் என்று திருமா குறிப்பிடுவது வேதனை தருகிறது.

ஈழத்தமிழர்களை கூண்டோடு கருவறுக்க கொலைப்பாதகன் ராஜபக்சே மூர்க்கத்தனமான போரை கட்டவிழ்த்து விட்டு அப்பாவித் தமிழர்களை ரசாயன குண்டுகளைப் போட்டு கொன்று குவித்தபோது, இந்திய அரசு போரை தடுக்காதது மட்டுமல்ல, சிங்கள அரசுக்கு ராணுவ உதவிகளையும் அளித்தது. ஆயுதங்கள், ராடார் வழங்கி சிங்கள ராணுவத்திற்குப் பயிற்சியும் கொடுத்தது.

மன்மோகனை 8 முறை சந்தித்த வைகோ

உலக நாடுகள் பலவும் சிங்கள இனவாத அரசுக்கு உதவி செய்தன. ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் போரில் பங்கேற்றன. இந்தியாவும் போரில் பங்கேற்று ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு துணை போனது. இந்திய அரசின் இந்தக் கொடும் பிழையை எத்தனை நூற்றாண்டுகளானாலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

தலைவர் வைகோ அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கை எட்டு முறை சந்தித்து, சிங்கள அரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் போட வேண்டாம்; ஆயுத உதவிகள் அளிக்க வேண்டாம் எனக் கோரினார். ஆனால் இந்தியா போரை நிறுத்த முயற்சிக்கவில்லை. போர் முடிந்ததும், எங்களுக்காக இந்தப் போரை இந்தியாதான் நடத்தியது என்றான் ராஜபக்சே. அந்தக் காலகட்டத்தில். அப்போது ஆட்சியில் இருந்த மத்திய அரசின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டனம் செய்த தலைவர்தான் வைகோ.

இதனை இப்போது நேர்காணலில் குறிப்பிட்டு, வைகோ மீது புழுதி வாரித் தூற்றுவது எந்த நோக்கத்தில்?.

திருமா கூறுவது முரணான தகவல்?

2002-ல் சமாதானக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து புலிகள் அழைப்பை ஏற்று திருமா உட்பட சிலர் ஈழம் சென்றபோது, எம்ஜிஆர் பற்றி உயர்வாக கூறினார் பிரபாகரன் என்று கூறிய திருமா, மற்ற தமிழ்நாட்டு தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறினாராம். யார் யார் என்று நெறியாளர் கேட்க தனியாக சொல்கிறேன் என்று திருமா கூறுகிறார். தலைவர் வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் போன்ற தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்ததாக பிரபாகரன் கூறியதைப் போன்று நிறுவுகிறார் திருமா. இது நியாயம்தானா?

இந்திராகாந்தி சொல்லித்தான் எம்ஜிஆர் புலிகளுக்கு நான்கு கோடி ரூபாய் நிதி வழங்கியதாக திருமா கூறுகிறார். இந்திராகாந்தி இறந்தது 1984 ல். எம்ஜிஆர் நிதி கொடுத்தது 1986 ம் ஆண்டு. இதுவும் முரணான தகவல்.

பார்வதி அம்மாளை மருத்துவ சிகிச்சைக்காக மலேசியாவிலிருந்து உரிய அனுமதி பெற்று சென்னைக்கு அனுப்பி வைத்தார் சிவாஜிலிங்கம். இதிலும் வைகோ மீது வீண் பழி போடுவது எதற்காக?…

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரைப்பற்றி பேசத் தொடங்கினால் தமிழ்நாட்டு அரசியல் களத்தின் நோக்கம் தடம் புரண்டு விடும். இந்துத்துவ சனாதன சக்திகளை ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டியதுதான் தற்போதைய முகாமையான சிந்தனை, குறிக்கோளாக இருக்க வேண்டும்”என்று அதில் கூறப்பட்டுள்ளது.

“இப்படி தங்களது கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மதிமுகவும் பொதுவெளியில் வெளிப்படையாக மோதிக்கொண்டிருப்பது திமுகவையும் காங்கிரஸையும் தர்ம சங்கட நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

திமுக – காங்., கூட்டணிக்கு ஆபத்து?

“திருமாவளவனுக்கு காட்டமாக பதிலளிப்பதாக நினைத்து 2009 ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பல்வேறு வழிகளில் உதவி செய்ததையும், ராஜ பக்சே அரசால் ஒரே நாளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை கொன்று குவித்ததுடன் தனித் தமிழ் ஈழத்துக்காக போராடிய விடுதலைப்புலிகள் இயக்கம் நிர்மூலமாக்கப்பட்ட தகவலையும் மதிமுகவால் மீண்டும் பெரும் பேசு பொருளாக மாறுவதை திமுகவும் காங்கிரசும் விரும்பவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஏனென்றால் இந்த விவகாரம் நீண்டு கொண்டே போனால் 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு நிச்சயம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இது அதிமுக கூட்டணிக்கு சாதகமாக மாறி, வெற்றி வாய்ப்பையும் உருவாக்கி தந்து விடுமோ என்று இந்த இரு கட்சிகளுமே பதறுகின்றன.

வலுக்கும் சந்தேகம்!!

மதிமுகவை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் ஓரிரு தொகுதிகளை பெற்று திமுக சின்னத்தில் போட்டியிட்டு தன்னை திமுகவின் முதன்மையான விசுவாசியாக காட்டிக் கொண்டு விடும். ஆனால் திருமாவளவனுக்குத்தான் இதில் நெருக்கடி. அவர் குறைந்தபட்சம் திமுகவிடம் மூன்று தொகுதிகளை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

அதுவும் அவர் தனி சின்னத்தில் தனது கட்சி வேட்பாளர்களை போட்டியிட வைப்பார். இதை திமுக ஏற்குமா என்பதே சந்தேகம்தான். அப்படியொரு நிலை ஏற்பட்டால் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறவும் செய்யலாம்.

அதற்காகத்தான் ஈழத் தமிழர் பிரச்சனையையும், தமிழகத் தலைவர்களில் பிரபாகரன் யாரை பெரிதும் நம்பினார் என்ற தகவலையும் திருமாவளவன் இப்போது கூறி இருக்கிறாரோ, என்று சந்தேகம் எழுகிறது?”என அந்த அரசியல் பார்வையாளர்கள் கேள்வியும் எழுப்புகின்றனர்.

Views: - 495

0

0