குடும்ப நலனுக்காக வெள்ளலூர் பேருந்து நிலையம் இடமாற்றம் : முடிவை கைவிடாவிட்டால்… திமுகவுக்கு இபிஎஸ் எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
23 August 2022, 7:48 pm
Eps Warn Stalin - Updatenews
Quick Share

தன்‌ குடும்ப நலனுக்காக, கோவை வெள்ளலூர்‌ பேருந்து நிலையத்தை இடம்‌ மாற்றும்‌ முயற்சியில் விடியா திமுக அரசு ஈடுபட்டு வருவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஊரை அடித்து தங்கள்‌ வீட்டு உலையில்‌ போடுவதற்கென்றே இந்த விடியா தி.மு.க. அரசு, கடந்த 15 மாத ஆட்சிக்‌ காலத்தில்‌ திட்டங்கள்‌ தீட்டி செயல்பட்டு வருகிறது. முதலமைச்சரின்‌ குடும்பத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌ நடத்தும்‌ ஒரு தனியார்‌ ரியல்‌ எஸ்டேட்‌ நிறுவனம்‌, தமிழகம்‌ முழுவதும்‌ பல்லாயிரம்‌ கோடி ரூபாயை முதலீடு செய்து, விளை நிலங்கள்‌ உட்பட அனைத்து நிலங்களையும்‌ வளைத்துப்போட்டு வருகிறது என்று செய்திகள்‌ வருகின்றன.

தாங்கள்‌ அடிமாட்டு விலைக்கு வாங்கும்‌நிலங்களின்‌ மதிப்பை உயர்த்த, அரசின்‌ அனைத்துத்‌ துறைகளின்‌ அதிகாரங்களையும்‌ துஷ்பிரயோகம்‌ செய்து வருகின்றனர்‌. அம்மாவின்‌ ஆட்சியின்போதும்‌, எனது தலைமையிலான அம்மாவின்‌ அரசிலும்‌, தமிழகம்‌ முழுவதும்‌ மக்கள்‌ நலத்‌ திட்டங்கள்‌ முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக, கோவை மக்களின்‌ நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும்‌ வகையில்‌ காந்திபுரம்‌-கணபதி பாலம்‌, உக்கடம்‌ பாலம்‌ உட்பட பல பாலங்கள்‌ கட்டப்பட்டன. கோவை நகருக்குள்‌ இருந்த நான்கைந்து பேருந்து நிலையங்களை ஒருங்கிணைத்து வெள்ளலூரில்‌ ஏறத்தாழ சுமார்‌ 65 ஏக்கரில்‌ பிரம்மாண்டமான பேருந்து நிலையம்‌ அமைக்க திட்டமிட்டு பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டன.

கோயம்புத்தூர்‌ மாநகரம்‌ பொருளாதாரம்‌, தொழிற்சாலை மற்றும்‌ வணிக ரீதியான வளாகங்கள்‌ உள்ளடக்கிய முக்கிய நகரமாக இருந்து வருகிறது. கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ ஏற்கெனவே, சிங்காநல்லூர்‌ பேருந்து நிலையம்‌, மேட்டுப்பாளையம்‌ சாலை பேருந்து நிலையம்‌, உக்கடம்‌ பேருந்து நிலையம்‌, காந்திபுரம்‌ நகரப்‌ பேருந்து நிலையம்‌, காந்திபுரம்‌ புறநகர்‌ பேருந்து நிலையம்‌ ஆகியவை பயன்பாட்டில்‌ உள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகரத்தை ஒட்டியுள்ள முக்கிய சாலைகளான வாளையார்‌ சாலை, பொள்ளாச்சி சாலை, பல்லடம்‌ சாலை, அவினாசி சாலை, மேட்டுப்பாளையம்‌ சாலை, சத்தியமங்கலம்‌ சாலைகளில்‌ உள்ள போக்குவரத்து நெரிசலையும்‌, கோவை மாநகரின்‌ நெரிசலையும்‌ குறைக்கும்‌ வண்ணம்‌ புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்‌ வெள்ளலூர்‌ பகுதியில்‌ அமைக்க கழக ஆட்சியில்‌ உத்தேசிக்கப்பட்டிருந்தது.

அரசு காலி இடங்களை ஆராய்ந்து பார்த்ததில்‌, கோவை மாநகராட்சி, வெள்ளலூர்‌ இடத்தை கீழ்க்கண்ட காரணங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.

  • அனைத்துப்‌ பேருந்துகளையும்‌ ஒரே இடத்தில்‌ இயக்கும்‌ விதமாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்‌ உத்தேசிக்கப்பட்டது.
  • பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதியும்‌ கோவை மாநகராட்சிக்கு பாத்தியப்பட்டது. எனவே, பிற்காலத்தில்‌ விரிவாக்கம்‌ மேற்கொள்வதற்கான வசதி உள்ளது.
  • எளிய வகையில்‌ அணுகு சாலைகள்‌ உள்ளது.

61.62 ஏக்கர்‌ நிலப்‌ பரப்பில்‌ ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்‌ உத்தேசிக்கப்பட்டது. மேலும்‌ NH-47 மற்றும் SH-162 சாலைகளுக்கு சந்திப்பில்‌ இடம்பெற்றுள்ளது. உத்தேசப்‌ பேருந்து நிலையம்‌ போத்தனூர்‌ ரயில்வே சந்திப்பில்‌ இருந்து 2.50 KM மற்றும்‌ NH-47-லிருந்து 2 KM தூரத்தில்‌ அமைக்க உத்தேசிக்கப்பட்டு, ரூ.168 கோடியில்‌ டெண்டர்‌ விடப்பட்டு பணிகள்‌ நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்‌, தன்‌ குடும்பத்தினரின்‌ ரியல்‌ எஸ்டேட்‌ வியாபாரத்தைப்‌ பெருக்கும்‌ நோக்கத்தோடும்‌, மக்களை மொட்டை அடிக்கும்‌ நோக்கோடும்‌, வெள்ளலூர்‌ ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்‌ திட்டத்தை தலைமுழுக இந்த விடியா திமுக அரசின்‌ முதலமைச்சர்‌ முடிவு செய்ததால்‌, அரசின்‌
சுமார்‌ 100 கோடி ரூபாய்‌ பணிகள்‌ நடைபெற்ற நிலையில்‌, இத்திட்டம்‌ கைவிடப்பட்டால்‌ மக்களின்‌ வரிப்‌ பணம்‌ வீணாகும்‌ நிலை ஏற்படும்‌.

அவிநாசி – திருச்சி புறவழிச்‌ சாலை அருகே ஸ்டாலின்‌ குடும்ப நிறுவனங்கள்‌பல நூறு ஏக்கர்‌ நிலம்‌ வாங்கி உள்ளதாகவும்‌, அதற்காகவே அந்த இடத்திற்குப்‌ புதிய பேருந்து நிலையத்தை அமைக்க இந்த விடியா அரசு திட்டமிட்டிருப்பதாகவும்‌, மக்கள்‌ பேசிக்கொள்வதாக செய்திகள்‌ வருகின்றன.

தமிழக மக்களுக்கு என்று இல்லாமல்‌, தன்‌ குடும்பத்தினருக்காக உழைக்கும்‌ விடியா திமுக அரசின்‌ முதலமைச்சர்‌, தமிழகம்‌ நிதிப்‌ பற்றாக்குறையாலும்‌, கடன்‌ சுமையாலும்‌ தத்தளிக்கும்‌ இந்த நிலையில்‌, வெள்ளலூர்‌ பேருந்து நிலையம்‌ அமைக்க செலவிடப்பட்ட சுமார்‌ ரூ. 100 கோடியை துச்சமாக மதிப்பது கடும்‌ கண்டனத்திற்குரியது.

தன்‌ குடும்ப நலனுக்காக மக்கள்‌ வரிப்‌ பணத்தை வீணடிக்கும்‌ வகையில்‌, கோவை புதிய பேருந்து நிலையத்தை அமைக்கும்‌ திட்டத்தை “கலெக்ஷன்‌, கரப்ஷன்‌, கமிஷன்‌”’ அரசு உடனடியாகக்‌ கைவிட வேண்டும்‌. இல்லையென்றால்‌, மக்கள்‌ நலன்‌ காக்க சட்டப்‌ போராட்டம்‌ நடத்தப்படும்‌ என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 214

1

0