இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்றச் சொன்ன விவகாரம்.. வீடியோ வெளியிட்டதாக சிறுவன் உள்பட 7 பேர் கைது..!!

Author: Babu Lakshmanan
30 March 2023, 2:32 pm
Lovers - Updatenews360
Quick Share

வேலூர் ; வேலூர் கோட்டையில் இசுலாமிய பெண்கள் அணிந்திருந்த ஹிஜாபை கழற்ற வற்புறுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் மற்றும் பகிர்ந்தவர்கள் என ஒரு சிறார் உட்பட ஏழு பேர் கைது

வேலூர் கோட்டையில் தங்களது ஆண் நண்பர்களுடன் கடந்த மார்ச் 27ஆம் தேதி வந்திருந்த இளம் பெண்களிடம் ஹிஜாபை அகற்றுமாறு தனிநபர் ஒருவர் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்தி, அவர்களின் அனுமதியின்றி வீடியோ பதிவு எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், வீடியோவை பதிவு செய்து பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வேலூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக வேலூர் கோட்டையில் அத்துமீறி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள் மற்றும் பகிர்ந்தவர்கள் என 7 பேரை வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களின் பெயர் விவரம் மாவட்ட காவல் துறை தரப்பில் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பொது இடங்களில் யார் வந்து யார் வந்து தனிமனித உரிமைகளை மீது பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், வீடியோ எடுத்து மிரட்டினாலும், அவர்கள் மீது காவல்துறை அவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, இந்த வீடியோவை யாரும் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தக் கூடாது. பரப்பவும் கூடாது. பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கோட்டை பாதுகாப்பு காவல்துறையினர் ஏற்கனவே 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். ஒரு காவல் உதவி மையமும் திறக்கப்பட்டுள்ளது,” எனக் குறிப்பிட்டார்.

வீடியோ எதற்காக எடுத்தார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து மாவட்ட எஸ்பி கூறியதாவது:- புலன் விசாரணை சென்று கொண்டிருக்கிறது. விசாரணை முடிவில் தான் அதைப்பற்றி தெரியவரும். எந்த ஒரு கட்சி சார்ந்த நபர் இந்த வீடியோ யாரும் எடுக்கவில்லை. புலன் விசாரணை முடிவில் தெளிவாக கூற முடியும். முன்கூட்டியே கூறினால் அது தவறாகிவிடும். காவல் உதவி மையம் 24 மணி நேரமும் செயல்படும்.

வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு முழு பாதுகாப்பும் கொடுக்கப்படும். அவர்களுக்கு தொந்தரவு கொடுத்தாலும், எவ்வித பிரச்சனை கொடுத்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கோட்டையைச் சுற்றி மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட உட்கோட்ட துணை கண்காணிப்பாளரின் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் தொலைபேசி எண்கள் கோட்டை சுற்றிலும் ஓட்டப்படும். கோட்டை சுற்றுலா பயணிகள் அச்சம் இல்லாமல் தான் வருகிறார்கள். ஒரு சிலர் செய்யும் தவறு தான் அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது கூட சுற்றுலா பயணிகள் அச்சமின்றி தான் வந்து செல்கின்றனர், எனக் கூறினார்.

மேலும், சர்ச்சைக்குள்ளான வீடியோ அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் காவல்துறையினரால் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 367

0

0